ஜோகூர்பாரு – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் அனைத்துத் தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்படும் மாநிலம் ஜோகூர்.
அம்னோவின் முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மாநிலத்தின் எதிர்க் கட்சிக் கூட்டணிக்குத் தலைமையேற்றிருப்பதால், மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, மஇகாவின் 4 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களாக யார் நிறுத்தப்படுவார்கள் என்பது குறித்தும் மஇகா வட்டாரங்களில் பல்வேறு ஆரூடங்கள் நிலவி வருகின்றன.
புத்ரி வங்சா சட்டமன்றம்
மஇகாவின் 4 சட்டமன்றத் தொகுதிகளில் புத்ரி வங்சா சட்டமன்றத் தொகுதியில் 3,469 வாக்குகள் பெரும்பான்மையில் பாஸ் கட்சியிடம் மஇகா கடந்த 2013 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தது. இங்கு போட்டியிட்ட எம்.சூரியநாராயணன் தோல்வியைத் தழுவினார். தெப்ராவ் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் புத்ரி வங்சா தொகுதி இந்த முறை மற்றொரு தொகுதியுடன் பரிமாறிக் கொள்ளப்படலாம் என்ற ஆரூடங்கள் நிலவி வருகின்றன.
காரணம் இங்கு சீன வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்து, மொத்த வாக்காளர்களில் 51 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சீன வாக்காளர்களாக இருப்பதால், இந்தத் தொகுதியைப் பரிமாற்றம் செய்து கொள்ள மஇகா எண்ணம் கொண்டுள்ளதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
மஇகாவுக்கு ஒதுக்கப்படுவது புத்ரி வங்சா சட்டமன்றமா அல்லது மற்றொரு தொகுதியா என்பது முடிவானதும் இந்தத் தொகுதிக்கு புதிய முகம் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காம்பீர் சட்டமன்றம்
மற்றொரு சட்டமன்றத் தொகுதியான காம்பீர் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் வென்ற அசோஜன் மீண்டும் அதே தொகுதியில் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த இரண்டு தவணைகளாக அவர் இந்தத் தொகுதியைத் தற்காத்து வந்திருப்பதால் இந்தத் தொகுதியைத் தற்காக்க அவருக்கே மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும் என ஜோகூர் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜோகூர் மாநில மஇகாவின் தலைவர் பொறுப்பு, மத்திய செயலவை உறுப்பினர், ஆகிய பதவிகளோடு தேசியத் தலைவருடன் அணுக்கமான உறவு கொண்டு, ஜோகூர் மாநிலத்தில் மற்ற தலைவர்களுடன் இணக்கமானப் போக்கைக் கடைப்பிடித்து வருவதால், மீண்டும் காம்பீர் தொகுதியில் அசோஜனே நிறுத்தப்படுவார் என்ற நம்பிக்கை ஜோகூர் மஇகா வட்டாரங்களில் நிலவுகிறது.
தெங்காரோ சட்டமன்றம்
தெங்காரோ சட்டமன்றத்தில் கடந்த ஆண்டில் 13 ஆயிரம் வாக்குகளுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையில் வெற்றி பெற்ற ரவின்குமார் கிருஷ்ணசாமி மீண்டும் இந்தத் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்றும் ஜோகூர் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இளைஞரான ரவின் மிக இளம் வயதிலேயே சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை ஏற்றாலும், மஇகா தலைவர்களுடன் அணுக்கமாகச் செயல்பட்டு, தனது தொகுதியில் சிறப்பான சேவைகளை வழங்கி வருவதால் அவர் மீண்டும் தெங்காரோ சட்டமன்றத்தில் நிறுத்தப்படுவதில் பிரச்சனைகள் ஏதும் எழாது என்று கணிக்கப்படுகிறது.
கஹாங் சட்டமன்றம்
கஹாங் சட்டமன்ற உறுப்பினராக தற்போது வித்தியானந்தன் இருந்து வருகிறார். மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் அவரே இருந்து வருகிறார்.
தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தொகுதியான செம்புரோங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் தொகுதி கஹாங் என்பதால், இங்கு எந்த வேட்பாளரை நிறுத்தினாலும், மஇகா வெல்ல முடியும் என்ற கருத்து நிலவுகிறது.
செம்புரோங் நாடாளுமன்றம் மற்றும் அதன் கீழ் உள்ள சட்டமன்றங்களில் வெற்றி பெறுவது என்பது ஹிஷாமுடின் அந்தத் தொகுதியில் கொண்டிருக்கும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டது என்பதால், இங்கு மஇகா வேட்பாளராக யார் நிறுத்தப்பட்டாலும் வெற்றி வாய்ப்பு சுலபம் என ஜோகூர் மஇகா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
மீண்டும் வித்தியானந்தனுக்கு சட்டமன்ற வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஜோகூர் மாநிலத்தின் அண்மையக் கால நிலவரங்களை வைத்துப் பார்க்கும்போது, இந்தத் தொகுதியில் மஇகாவின் புதிய முகம் ஒருவர் வித்தியானந்தனுக்குப் பதில் நிறுத்தப்படலாம் என்ற ஆரூடங்களும் எழுந்துள்ளன.
இறுதி முடிவு மஇகா தலைமைத்துவத்தின் கரங்களில்!
தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளில் வழக்கமாக ஒரு பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெறுவது என்பது, அந்தத் தொகுதியின் சக உறுப்பியக் கட்சிகளின் ஒத்துழைப்பு, ஆதரவு அவற்றைப் பொறுத்தது என்றாலும், எப்போதும் இறுதி முடிவு அந்தந்தக் கட்சியின் தலைமைத்துவத்தின் முடிவுக்கே விடப்படும்.
அம்னோவோ, மசீசவோ, தங்களின் விருப்பத்தை, எண்ணத்தைத் தெரிவித்தாலும், மஇகா சட்டமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை – அது ஜோகூர் மாநிலமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற எந்த மாநிலங்களாக இருந்தாலும் சரி – வேட்பாளர்கள் யார் என்ற இறுதி முடிவை மஇகாவின் தலைமைத்துவம்தான் எடுக்கும் என்பதுதான் தேசிய முன்னணியின் வழக்கமாகும்.
புதிய ஜோகூர் மாநில சட்டமன்ற வேட்பாளர்கள் யாராக இருக்கக் கூடும் என்ற ஆரூடங்கள் ஜோகூர் மாநில மஇகா வட்டாரங்களின் மத்தியில் ஆர்வத்துடன் தொடரப்படுகின்றன!
-இரா.முத்தரசன்