கோலாலம்பூர் – மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவர் சுல்கிப்ளி அகமட்டுக்கு எதிரான விசாரணையில், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலியின் தலையீடு இருப்பதாகக் கூறி அவர் மீது ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர்.
டாங் வாங்கி காவல்துறைத் தலைமையகத்தில் இன்று கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான், அபாண்டிக்கு எதிராகப் புகார் அளித்தார்.
அண்மையில், இந்தோனிசியா பாலி தீவில் பெண் ஒருவருடன் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவர் சுல்கிப்ளி தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில், சுல்கிப்ளி மீது விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்படும் என கடந்த அக்டோபர் 16-ம் தேதி அபாண்டி அலி அறிவித்தார்.
இந்நிலையில், அந்த சிறப்புக் குழுவின் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், அபாண்டி அலி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணையில் தலையீடு செய்கிறார் என்றும் லாவ் வெங் சான் தனது புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.