கேமரன் மலை – 14வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பக்காத்தான் ஹரப்பான் மற்றும் ஜசெகவின் முக்கியத் தலைவர்கள் கேமரன் மலை நாடாளுமன்றம் குறித்து பாராமுகமாக இருந்து வருகிறார்கள் என்றும், இந்நிலை தொடர்ந்தால் அந்தத் தொகுதியில் எதிர்க்கட்சிகள் மீண்டும் தோல்வியையே காணும் என ஜசெகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மனோகரன் எச்சரித்தார்.
மனோகரன் கடந்த 2013 பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் அப்போதைய மஇகா தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுவை ஜசெக சார்பில் எதிர்த்து நின்று, 462 வாக்குகளில் தோல்வியைத் தழுவினார்.
பிரி மலேசியா டுடே இணைய ஊடகத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கிய பேட்டியில் மனோகரன், தன்னை மீண்டும் கேமரன் மலையில் பணியாற்றும்படி ஜசெக தலைமைத்துவம் பணித்துள்ளதாகவும், இதன் மூலம் தான் மீண்டும் அதே தொகுதியில் நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறியிருக்கிறார்.
பாரம்பரியமாக எந்தத் தொகுதியில் ஒருவர் தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறாரோ அவரையே அந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவது ஜசெகவின் வழக்கம் என்றும் மனோகரன் தெரிவித்திருக்கிறார். அதன்படிப் பார்த்தால் மீண்டும் கேமரன் மலையில் போட்டியிடத் தனக்கே வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் மனோகரன் மேலும் தெரிவித்தார்.
மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சிக் கூட்டணி தோல்வியடைந்த தொகுதிகளில் கேமரன் மலையும் ஒன்று என்பதால், இங்கு மீண்டும் வெற்றி பெற பக்காத்தான் ஹரப்பான் தலைவர்கள் வருகை தந்து ஆதரவைத் திரட்ட வேண்டும், இல்லாவிட்டால், தேசிய முன்னணியின் பணபலம், தேர்தல் களப் பணியாற்றும் திறமை, சிறப்பான கட்டமைப்பு ஆகியவற்றின் காரணமாக மீண்டும் தேசிய முன்னணியிடம் கேமரன் மலை தொகுதியை எதிர்க்கட்சிக் கூட்டணி பறிகொடுக்க வேண்டியிருக்கும் என்றும் மனோகரன் எச்சரித்திருக்கிறார்.