ஈப்போ – பேராக் மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராக அம்மாநிலத்தில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வட்டாரங்களில் நன்கு அறிமுகமானவரும், ஆசிரியர் தொழிலில் சுமார் 27 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவருமான சுப.சற்குணன் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைவரிடமும் நன்கு பழகும் தன்மையும், தமிழ் மொழி மீதான பற்றும், உணர்வும் கொண்டவரான சற்குணனின் புதிய நியமனம், பேராக் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் பெரிதும் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சற்குணனின் கல்வி மற்றும் ஆசிரியர் தொழில் பின்னணி
சுப.சற்குணன் கிரியான் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நெய்தல் நிலப்பகுதியான கோலக் குராவ் எனும் ஊரில் திரு.சுப்பிரமணியம் ஜெகதாம்பாள் வாழ்விணையருக்குத் தலைமகனாகப் பிறந்து, செர்சோனீஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் படித்தவர். இடைநிலைக் கல்வி முடிந்து தாம் படித்த அதே செர்சோனீஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 1990ஆம் ஆண்டில் தமது 20ஆவது வயதில் தற்காலிக ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார்.
துவாங்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்ற ஆசிரியரானார். 2006ஆம் ஆண்டில் தமிழ்மொழிப் பாட ஆசிரியருக்கான சிறப்புப் பயிற்சியை முடித்தார். தொடர்ந்து கல்வியியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றார். இதற்கிடையில், தமிழ்மொழியின் மீது கொண்ட ஆழந்த பற்றுதல் காரணமாக, தமிழ்நாடு பாவாணர் அறக்கட்டளை நடத்திய தமிழ்மணி புலவர் கல்வியை மேற்கொண்டு அதிலும் இளங்கலை பட்டம் பெற்றார். தமது முதுகலை கல்வியைச் உப்சி கல்வியியல் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றார்.
ஆசிரியர் தொழிலில் 27 ஆண்டுகள் அனுபவமுள்ள இவர் நிருவாகத் துணைத் தலைமையாசிரியர், மாணவர்நலத் துணைத் தலைமையாசிரியர் பதவிகளை ஏற்றுச் செவ்வனே பணியாற்றியுள்ளார். சிறந்த நிருவாகத் திறனும் தலைமைத்துவ ஆற்றலும் கொண்ட இவர் நனிசிறந்த ஆசிரியராக அங்கீகாரம் பெற்று 8 ஆண்டுகள் பணிசெய்துள்ளார். இவருடைய தமிழ் ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள கல்வி அமைச்சின் பல இலாகாக்கள் இவரை அழைத்தன. அதன் பயனாக, கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு, பாடநூல் பிரிவு, மலேசியத் தேர்வு வாரியம் ஆகியவற்றிலும் பல ஆண்டுகளாகத் தமது பங்களிப்பைச் செய்துவருகின்றார்.
மாவட்டம், மாநிலம், தேசிய நிலைகளில் தமிழ்மொழிக்காகச் சிறந்த முறையில் பணியாற்றியுள்ள இவர் செம்மொழி மாநாடு, உலகத் தமிழாசிரியர் மாநாடு போன்ற அனைத்துலக மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார். அதேபோல் உலகத் தமிழ் இணைய மாநாடுகளிலும் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரை படைத்துள்ளதோடு ஏற்பாட்டுக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
சுப.சற்குணன் தன்னார்வ அடிப்படையில் SPM, STPM மாணவர்களுக்குத் தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் பயிற்றுவிக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தம்முடைய ஆசிரியர் பணிக்காக இரண்டுமுறை “Anugerah Perkhidmatan Cemerlang” என்ற சிறந்த சேவையாளர் விருதையும், வடபேராக் மாநில நல்லாசிரியர் விருதையும் தன்னார்வ இலக்கிய ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார். இம்மாதத் தொடக்கத்தில் ஈப்போவில் நடந்த ஒரு மாபெரும் விழாவில் தம்முடைய சிறந்த தமிழாசிரியப் பணிக்காக ‘தமிழ்க்கொன்றை’ எனும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
மாணவர்களுக்கான பயிற்சி நூல்களைப் படைத்தவர்
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக இதுவரையில் 4 பயிற்சி நூல்களை சற்குணன் எழுதியுள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற 12-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் செயற்குழு உறுப்பினராகவும், மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டு விழாச் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தொழிலுக்கு வெளியே, சுப.சற்குணன் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர். அவருடைய பல சிறுகதைகள் நமது மலேசிய நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும், இவர் திருத்தமிழ் என்ற ஓர் இணைய வலைப்பதிவை 12 ஆண்டுகளாக எழுதி வருகிறார். இதுவரை 360 கட்டுரைகளைத் தமது இணையத் தளத்தில் எழுதியுள்ளார்.
பொது இயக்கப் பணியிலும் ஈடுபட்டுள்ள இவர், தாம் படித்த செர்சோனீஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்து பள்ளிக்காக ஒரு பள்ளிப் பேருந்தை வாங்கி அந்தப் பள்ளி வளர்ச்சிக்காகப் பணியாற்றுகிறார். அதோடு, பேரா மாநில முன்னாள் மாணவர் சங்கப் பேரவையின் துணைத்தலைவராகவும் இருந்து வருகின்றார்.
தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியில் அரசாங்கமும், கல்வி அமைச்சும் தீவிர கவனம் செலுத்தி வரும் இத்தருணத்தில், நல்ல அனுபவமும், ஆழ்ந்த தமிழறிவும், தமிழ் உணர்வும் கொண்ட சற்குணன் பேராக் மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராகப் பொறுப்பேற்றிருப்பது, பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும், தர உயர்வுக்கும் பெரும் பங்களிப்பாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.