Home நாடு “மகாதீரை நாங்கள் பாதுகாப்போம்” முன்னாள் இராணுவ வீரர்கள் குழு

“மகாதீரை நாங்கள் பாதுகாப்போம்” முன்னாள் இராணுவ வீரர்கள் குழு

1121
0
SHARE
Ad

Mahathir-Najibகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு வழங்கப்பட்டு வந்த அரசாங்கப் பாதுகாப்பு மீட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து, முன்னாள் இராணுவ வீரர்களின் குழு ஒன்று, அவருக்கான பாதுகாப்புகளை வழங்கத் தாங்கள் தயாராக இருப்பதாக அறிவித்தது.

ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜெனரலும் “நாட்டு விசுவாசிகள் தேசிய சங்கத்தின்” தலைவருமான முகமட் அர்ஷாட் ராஜி இந்த அறிவிப்பை விடுத்ததோடு, நாட்டின் விசுவாசிகள் என்று கூறிக் கொள்ளும் அனைவரும் இதனைச் செய்ய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

“நாட்டின் விசுவாசிகள் என்று கூறிக் கொள்பவர்கள் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், சுல்தான்களுக்காகவும் சேவை செய்த முன்னாள் தேசியத் தலைவர்கள் மீது முறை தவறி நடந்து கொள்ளக் கூடாது. மகாதீருக்கான தனிப்பட்ட பாதுகாப்புகளை அரசாங்கம் மீட்டுக் கொண்டிருப்பதானது, ஒரு சிறந்த மலேசியாவை நாம் உருவாக்குவதற்கான கடப்பாட்டையும், துணிச்சலையும் நமக்குள் விதைத்துள்ளது” என்றும் முகமட் அர்ஷாட் ராஜி தான் விடுத்த பத்திரிக்கை அறிக்கையில் மேலும் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மகாதீருக்கு வழங்கப்பட்ட அரசாங்க பாதுகாப்பு கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது. அரசாங்கத்தை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மகாதீருக்கு எதிரான நெருக்குதல்களை அரசாங்கம் அதிகரித்துள்ளது. அவருக்கான தனிப்பட்ட சமையல்காரர், அலுவலக உதவியாளர் ஆகியோருக்கான குத்தகைகளும் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டிருக்கின்றன. சாலைகளில் வழிகாட்டிச் செல்லும் காவல் துறை வாகன சலுகைகளும் ஏற்கனவே மீட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

22 ஆண்டுகளாக பிரதமராக இருந்து நாட்டை வழிநடத்தியதோடு, நாட்டிற்கு பல பொருளாதார, சமூக மேம்பாடுகளைக் கொண்டு வந்த முன்னாள் பிரதமரான மகாதீருக்கு பாதுகாப்பு மீட்டுக் கொள்ளப்பட்ட முடிவு சிறுபிள்ளைத் தனமானது, பொறுப்பற்றது, கௌரவமில்லாதது என்றும் அர்ஷாட் சாடினார்.

1998-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வீழ்ச்சியின்போது, மகாதீரின் தலைமைத்துவம்தான் நாட்டை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றியது என்றும் அர்ஷாட் சுட்டிக் காட்டினார்.

மகாதீருக்கான பாதுகாப்புகள் மீட்டுக் கொள்ளப்பட்டிருப்பது மலாய் வாக்காளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.