கோலாலம்பூர் – ‘மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல்’ ஏற்பாட்டில், வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி மாபெரும் நட்சத்திரக் கலைவிழா, புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவிருக்கிறது.
இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட் ஜாலிலில் நடைபெற்றது.
இதில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் நடிகர் கார்த்தி, கருணாஸ், நந்தா, ரமணா, பசுபதி, இயக்குநர் மனோபாலா, உதயா, குட்டி பத்மினி, ரோஹிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
இதில் பேசிய ‘மை ஈவண்ட்ஸ்’ நிறுவனர் ஷாகுல், “தென்னிந்திய நடிகர் சங்கம், மை ஈவண்ட்ஸ், மலேசிய சுற்றுலா அமைச்சு ஆகியவை இணைந்து வழங்கும் மாபெரும் நட்சத்திரக் கலைநிகழ்ச்சி வரும் ஜனவரி 6-ம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறுகின்றது. இருநாட்டின் கலை, கலாச்சார நல்லுறவிற்கும், மேம்பாட்டிற்கும் இந்நிகழ்ச்சி வழிவகுக்கும்.”
“இம்மாபெரும் நட்சத்திரக் கலைவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் விஷால், நடிகர் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஆர்யா, ஜீவா, நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ், அமலா பால் உட்பட 150-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.”
“மேலும் முன்னணி இசை அமைப்பாளர்களான ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், ஜீ.வி பிரகாஷ், அனிருத், தமன், ஸ்ரீகாந்த், தேவா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் இசை விருந்தை படைக்க விருக்கின்றார்கள். இவர்களோடு பாடகர்கள் கார்த்திக், ஹரிச்சரண், ஸ்வேதா மோகன். ரஞ்சித், நரேஷ் அய்யர், கிருஷ், ஆண்ட்ரியா, சின்மயி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.”
“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இந்த மாபெரும் விழாவில் முக்கிய அம்சமாக மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, நாகர்ஜுன் வெங்கடேஷ், சுதிப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மலேசியாவில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி இதற்கு முன்னாள் நடந்ததில்லை. இனி நடப்பதற்கும் வாய்ப்பில்லை” என ஷாகுல் தெரிவித்தார்.
இச்செய்தியாளர்கள் சந்திப்பில், டத்தோ சரவணன், டத்தோஸ்ரீ வேள்பாரி, டத்தோ டி.மோகன் உள்ளிட்ட மஇகா தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நட்சத்திர விழாவில் மலேசியக் கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களின் வளர்ச்சியிலும் இவ்விழா பங்காற்ற வேண்டும் என்றும் கலைஞர்களின் சார்பாக முதற்குரல் கொடுத்த டத்தோஸ்ரீ வேள்பாரிக்கு மலேசியக் கலைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.
மலேசியக் கலைஞர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பார்வைக்குக் கொண்டு சென்று, மலேசியாவில் நடிப்பு பயிற்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்தத் தாங்கள் ஏற்பாடு செய்வதாக நடிகர் நாசரும், நடிகர் கருணாசும் தெரிவித்தனர்.
ஜனவரி 6-ம் தேதி நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள டிக்கெட் விலை 30 ரிங்கிட், 20 ரிங்கிட், 10 ரிங்கிட் என விற்பனை செய்யப்படும் என மை ஈவண்ட்ஸ் நிறுவனர் ஷாகுல் தெரிவித்தார்.