சுங்கை சிப்புட் – 2017-ஆம் ஆண்டுக்கான தேசிய நிலையிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக் கொண்டாட்டங்கள் பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் நகரில் சனிக்கிழமை (11 நவம்பர் 2017) இரவு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன.
இந்தக் கொண்டாட்டங்களில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் சாஹிட் ஹாமிடி, மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் மற்றும் சுற்றுலா, பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ், பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாம்ரி மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோருடன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்தத் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விழாவில் உரையாற்றிய டாக்டர் சுப்ரா இத்தகைய பிரம்மாண்டமான, உற்சாகமான, அதே சமயத்தில் பல இன மக்களுடன் கூடிய தீபாவளித் திறந்த இல்லக் கொண்டாட்டத்தை, இந்திய சமுதாயத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்ததற்காக, சுற்றுலா, பண்பாட்டுத் துறை அமைச்சுக்கும், அதன் அமைச்சர் நஸ்ரி அசிசுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
நாட்டின் மேம்பாட்டுக்காக உழைத்த இந்திய சமுதாயத்தின் பங்களிப்புக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட கௌரவமாகவும், இந்தியர்களின் கலை, பண்பாட்டு மேன்மைக்கான அங்கீகாரமாகவும், இந்தக் கொண்டாட்டங்களைப் பார்ப்பதாகவும், டாக்டர் சுப்ரா தனதுரையில் குறிப்பிட்டார்.
இத்தகையக் கொண்டாட்டங்களின் மூலமும், அவற்றில் அனைத்து இனங்களையும் பங்கேற்கச் செய்வதன் மூலமும் நாட்டில் இன, மத ஒற்றுமையை மேம்படுத்தி அதன்வழி அரசியல் நிலைத்தன்மையை நிலைநிறுத்த முடியும் என்றும் டாக்டர் சுப்ரா மேலும் கூறினார்.
இந்திய சமுதாயத்தின் நலன்களிலும், மேம்பாடுகளிலும் தேசிய முன்னணி அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்றும், கடப்பாடு கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்த டாக்டர் சுப்ரா, இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளுக்கான அடையாளமாக அண்மையில் பிரதமர் அறிவித்த 2018 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்காக வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள், சலுகைகளை உதாரணமாகக் கொள்ளலாம் என்றார்.
இந்திய சமுதாயத்தின் மீது தேசிய முன்னணி அரசாங்கம் கொண்டிருக்கும், உண்மையான அக்கறை, அதற்காக அவர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாகவும், இந்த முயற்சிகள் தொடர்ந்து வெற்றியடையவும், இந்திய சமுதாயம் தொடர்ந்து தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு தங்களின் ஆதரவை வழங்கி வர வேண்டும் எனவும் டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.
தேசிய நிலை தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு கொண்டாட்டங்கள் வெற்றியடைய ஒத்துழைத்த அனைவருக்கும், வருகை தந்து பங்கேற்ற பொதுமக்களுக்கும் டாக்டர் சுப்ரா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.