Home இந்தியா மலேசியாவின் இறக்குமதி மணலில் சிலிக்கான் அபாயம் – தமிழக அரசு வழக்கு!

மலேசியாவின் இறக்குமதி மணலில் சிலிக்கான் அபாயம் – தமிழக அரசு வழக்கு!

1486
0
SHARE
Ad

Malaysiasandசென்னை -மலேசியாவின் குவாந்தான் மாநிலம் சுங்கை பகாங்கில் இருந்து, அண்மையில் இந்தியாவின் தமிழகத்திற்கு 55,000 மெட்ரிக் டன் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டது.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அம்மணலை அங்கு இறக்குமதி செய்தது.

இந்நிலையில், மலேசியாவில் இருந்து பெறப்பட்ட அம்மணல், கட்டுமானப்பணிக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும், அம்மணலை வைத்து கட்டுமானப்பணிகளை மேற்கொண்டால் ஆரோக்கியக்கேடு விளைவிக்கும் என்றும் தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

அரசாங்க வழக்கறிஞர் விஜய் நாராயணன் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறுகையில், அது இயற்கையான மணல் கிடையாது. அதில் சிலிக்கான் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

“கட்டுமானப்பணிகளில் சிலிக்கான் பயன்படுத்தப்பட்டால் அது உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும். எனவே அரசாங்கம் அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்காது” என்று விஜய் நாராயணன் நீதிமன்றத்தில் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டிருக்கிறது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்ஆர்எம் ராமையா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனம் சிங்கப்பூரின் ஆல் வொர்க் டிரேடிங் லிமிட்டட் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து டன் கணக்கான மணலை மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்தது.

ஆனால் அம்மணலை தமிழகத்தில் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்ததோடு, தூத்துக்குடியில் தற்போது இருக்கும் அம்மணலையும் முடக்கியிருக்கிறது.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.

முறையான உரிமத்துடனும், போக்குவரத்து அனுமதியுடனும் தான் அம்மணலை இறக்குமதி செய்து விற்பனை செய்வதாக தனது மனுவில் ராமையா குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து கடந்த நவம்பர் 2-ம் தேதி மலேசிய அரசு வெளியிட்டிருக்கும் தகவலில், குவாந்தான் மாநிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட அம்மணலை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய இரண்டு நிறுவனங்களுக்கு மலேசிய அரசு அனுமதி வழங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

இது குறித்து இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் கூறுகையில், அந்த 50,000 டன் மணல் தமிழகத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

அம்மணலின் விலை கன அடி மலேசிய மதிப்பில் 4 ரிங்கிட் (இந்திய மதிப்பில் 60 ரூபாய்). ஆனால் தமிழகத்தில் ஆற்று மணலின் விலை மலேசிய மணலை விட இரு மடங்கு அதிகம். ஆற்று மணல் அங்கு 110-லிருந்து 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.