Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘தீரன் அதிகாரம் ஒன்று’ – மிரட்டலான போலீஸ் விசாரணை!

திரைவிமர்சனம்: ‘தீரன் அதிகாரம் ஒன்று’ – மிரட்டலான போலீஸ் விசாரணை!

1772
0
SHARE
Ad

Theeran-Athigaram-1-posterகோலாலம்பூர் – உண்மைச் சம்பவங்களையும், போலீஸ் விசாரணைகளையும் அடிப்படையாகக் கொண்ட படங்கள் வருவது இப்போதெல்லாம் மிகவும் அரிதாகிவிட்டது.

அப்படியே வந்தாலும் கூட, அவை கமர்சியல் சினிமாவாக மாற்றப்பட்டு, திரைக்கு வரும் போது, முற்றிலும் மாற்றப்பட்டு கதையின் தீவிரம் குறைக்கப்பட்டே வெளிவரும்.

என்றாலும், ‘விசாரணை’ போன்ற படங்கள் அவ்வப்போது வெளிவந்து அந்த இடத்தை நிரப்பிக் கொண்டு தான் இருக்கின்றன.

#TamilSchoolmychoice

அந்த வகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு, ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.

Theeran2கதை நடப்பதோ 90-ம் ஆண்டுகளில். நெடுஞ்சாலை அருகே தனித்து இருக்கும் வீடுகளில் இரவு நேரங்களில் மர்மக் கும்பல் ஒன்று புகுந்து, ஈவு இரக்கமின்றி அவ்வீட்டில் உள்ளவர்களை மிகக் கொடூரமாகக் கொலை செய்து, நகை, பணம் உள்ளிட்டவைகளைக் கொள்ளையடித்துச் செல்கிறது.

அக்கும்பலின் கைரேகை கிடைத்தும் கூட, தமிழ்நாட்டுக் காவல்துறையால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் அவ்வழக்குகள் பல ஆண்டுகள் நிலுவையில் வைக்கப்படுகின்றன. என்றாலும் அது போன்ற கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

கடைசியாக, ஆளுங்கட்சி எம்எல்ஏவும், அவரது குடும்பமுமே அக்கும்பலால் கொலை செய்யப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டுவிட, முழித்துக் கொள்ளும் அரசாங்கம் போலீசுக்கு நெருக்கடி கொடுக்கிறது.

இதனால் துணிச்சலும், புத்திசாலித்தனமும் நிறைந்த தீரன் திருமாறன் (கார்த்தி) இந்த வழக்கை விசாரணை செய்யும் பொறுப்பை ஏற்கிறார்.

கிடைத்த ஆதாரங்களை வைத்து வழக்கை தோண்ட ஆரம்பிக்க, குற்றவாளிகள் தமிழர்கள் அல்ல. வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகின்றது.

Theeran-Adhigaaram-Ondru-640x413விசாரணை அப்படியே வடஇந்தியா பக்கம் திரும்பி, வெள்ளையர்கள் காலத்தில் இந்தியா முழுவதும் குற்றப்பரம்பரையாக ஏட்டில் எழுதி வைக்கப்பட்ட பல்வேறு இனமக்களின் பக்கம் திரும்பி, அவர்களுள் ஒரு இனத்தினர் இன்னமும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதும், லாரிகளில் தமிழ்நாட்டிற்கு வந்து கொலை, கொள்ளையடித்துவிட்டு, மீண்டும் வடஇந்தியாவிற்குத் திரும்பிவிடுவதையும் கண்டறிகிறார் கார்த்தி.

அக்கும்பலைப் பிடித்தாரா? கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்தாரா? என்பதே கிளைமாக்ஸ். நிஜவாழ்க்கையில் கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை நடத்திய ‘ஆப்ரேஷன் பவாரியா’ என்பதை அப்படியே திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வினோத்.

இத்திரைப்படத்திற்காக சம்பந்தப்பட்ட வழக்கை நன்றாக ஆராய்ந்து, வரலாற்றில் சாம்ராஜ்யங்களைக் கைப்பற்ற உதவிய போர்வீரர்களின் வழித்தோன்றல்களுடன் அதனை இணைத்து ஒரு படைப்பாக கொடுத்திருக்கும் இயக்குநர் வினோத்தின் கடும் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.

தீரன் கதாப்பாத்திரத்திற்கு கார்த்தி கனகச்சிதப் பொருத்தம். சாதாரண இன்ஸ்பெக்டராக முதலில் பணியில் சேர்வது, ரகுல் பிரீத்தி சிங்குடன் காதல், கல்யாணம், குடும்ப வாழ்க்கை, பின்னர் விசாரணை தொடங்கியவுடன் டிஎஸ்பியாக விஸ்வரூபம் எடுப்பது என படத்தில் தீரனாகவே கார்த்தி வாழ்ந்திருக்கிறார்.

Theeran3ரகுல் பிரீத்தி சிங் மிக அழகான நடிப்பு. என்றாலும் அவரது காதல் காட்சிகளில் ‘மாமா’ ‘பாப்பா’ ‘அப்பாட்ட சொல்லிருவேன்’ என ஒரே போன்ற வசனங்களும், கொஞ்சல்களும் வந்து கொண்டே இருந்தது சற்று போரடித்தது.

கார்த்தியுடன் போஸ் வெங்கட் சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லனாக அபிமன்யூ சிங் மிரட்டலான நடிப்பு.

திரைக்கதையைப் பொறுத்தவரையில், 90, 91,95, 2000, 2005 என காலக்கட்டத்திற்கு ஏற்பட, அதனுடைய தொடர்புடைய நிகழ்வுகளையும், குறிப்புகளையும் இணைத்திருப்பது மிகவும் ரசிக்க வைத்ததோடு, படம் பார்க்கும் ரசிகர்களையும் அதனுடன் பின்னோக்கிப் பயணிக்க வைத்திருக்கிறது.

உதாரணமாக, மங்கை சீரியல் ஒளிபரப்பான காலக்கட்டம், நோக்கியா செல்போன்கள் அறிமுகமான காலக்கட்டம் போன்ற குறிப்புகள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

படத்தில் வசனங்களாலும் பல இடங்களில் ஈர்க்கிறார் இயக்குநர் வினோத்.

“சார்.. இந்த நடவடிக்கைய ஒரு சாதாரண குடும்பத்துக்கு நடந்த போதே எடுத்திருந்திருந்தா இவ்வளவு அப்பாவிக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்குமா? அதிகாரத்துல இருக்குற ஒரு எம்எல்ஏவுக்கு நடந்த ஒடனே தான் அரசாங்கமே முழிக்குது”

“நாங்க மதராஸ் பக்கம் கொள்ளையடிக்க வந்ததுக்குக் காரணம் அங்க பொண்ணுங்க நெறையா நகை போட்டிருந்தாங்க.. தப்பிச்சுப் போகும் போது மதராசி போலீசுக்கு 20 ரூபாய் கொடுத்தா போதும் விட்டிருவாங்க. எங்க ராஜஸ்தான் போலீஸ்னா கையில துப்பாக்கி வச்சிருப்பாங்க சுட்டுருவாங்க”

இப்படியாகப் படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் நெற்றிப் பொட்டில் அறைந்தார் போல் உண்மைகளைச் சுட்டிக் காட்டுகின்றன.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு காலக்கட்டத்திற்கு ஏற்ப மிக அழகாக மாறுகிறது. குறிப்பாக இரவு நேர நெடுஞ்சாலைகள், தனியே இருக்கும் வீடுகள் போன்றவற்றை கழுகுப் பார்வையில் காட்டிய விதம். வட இந்தியா முழுவதும் கேமரா சுற்றிப் பதிவு செய்திருக்கும் விதம் மிகவும் சிறப்பு.

படத்தின் தீவிரத்திற்கு ஏற்ப ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டுகிறது.

மொத்தத்தில், ‘தீரன் அதிகாரம் 1’ – மிரட்டலான போலீஸ் விசாரணை! நேர்மையான தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள் இதைப் பார்த்து நெஞ்சை நிமிர்த்திக் கொள்வார்கள்.

-ஃபீனிக்ஸ்தாசன்