கோலாலம்பூர் – மலேசிய அரசியல் அரங்கில் மற்றொரு திருப்புமுனையாகவும், அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாகவும், இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மாவுடன் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு சென்று அங்கு தோள்பட்டை வலிக்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின்போது, அன்வாரின் மனைவியும், எதிர்க் கட்சித் தலைவியுமான வான் அசிசாவும் உடன் இருந்தார்.
அன்வாரை, நஜிப் மருத்துவமனையில் சந்தித்தது, ஒரு வரலாற்றுபூர்வ சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.
அரசியலில் நேரெதிர் துருவங்கள் சந்திப்பதும், பரஸ்பரம் உடல் நலம் குறித்து வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வதும் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் – அதிலும் மலாய் அரசியல்வாதிகள் மத்தியில் இது வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறைதான் என்றாலும் – ஒரு சிறைக்கைதியான அன்வாரை பிரதமர் சென்று சந்தித்திருப்பது அநேகமாக இதுவே முதன் முறையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
படம்: நன்றி – நஜிப் துன் ரசாக் டுவிட்டர் தளம்