கோலாலம்பூர் – பினாங்கில் நாடற்றவர்களுக்கு தேசியப் பதிவிலாகாவின் முத்திரையுடன் கூடிய போலி விண்ணப்ப பாரங்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
கடந்த வாரம், மலேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்யும் நாடற்றவர்கள், தேசிய முன்னணிக்குத் தான் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் அல்லது அவர்களின் அடையாள அட்டை நிராகரிக்கப்படும் என்றும் இந்தப் போலி விண்ணப்பாரங்கள் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து பிகேஆர் நாடற்றவர்கள் ஒருங்கிணைப்பாளர் ஏ.குமரேசன், ஜாலான் பந்தாயில் உள்ள வடகிழக்கு மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இந்த விவகாரத்தில் உடனடியாகக் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார்.
“அது போலி என்று அறிந்து கொண்டாலும், அகமட் சாஹிட் இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்தி விளக்கமளிக்க வேண்டும். காரணம் அதில் தேசியப் பதிவிலாகாவின் சின்னம் உள்ளது” என்று குமரேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.