கோலாலம்பூர் – போலீஸ் அதிகாரியான பாபி சிம்ஹா, முக்கியமான புள்ளிகளின் தொலைப்பேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் பணிக்கு மாற்றப்படுகின்றார்.
வேலைக்குச் சேர்ந்த புதிதில் நேர்மையாக இருந்து கெட்டப் பெயரை வாங்கிக் கொண்டதால், இந்த முறை ஒட்டுக்கேட்கும் பணியின் மூலம் சில முக்கியப் புள்ளிகளின் இரகசியங்களைத் தெரிந்து கொண்டு கோடிக் கணக்கில் பணம் பறிக்கிறார் பாபி சிம்ஹா.
கோடிக் கணக்கில் சம்பாதித்த பணத்தையெல்லாம் சேட்டு ஒருவரை பினாமியாக்கி சொத்தாகச் சேர்க்கத் தொடங்குகிறார்.
இதனிடையே, தொழிலதிபர் ஒருவரின் மனைவியின் தொலைப்பேசியை ஒட்டுக்கேட்கும் போது, ஃபேஸ்புக்கில் பெண்களை மயக்கி தனது வலையில் விழ வைக்கும் பிரசன்னா குறித்துத் தெரிய வருகின்றது.
எதிர்பாராதவிதமாக பிரசன்னாவின் வலையில் பாபிசிம்ஹாவின் மனைவி அமலாபாலும் சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வருகின்றது. பெண் பித்தனான பிரசன்னாவிடமிருந்து மனைவி அமலாபாலை பாபிசிம்ஹா காப்பாற்றினாரா? சேர்த்து வைத்த சொத்துக்களையெல்லாம் என்ன செய்தார்? என்பதே சுவாரசியக் கிளைமாக்ஸ்.
போலீசாக பாபி சிம்ஹா, கலகலப்பான குடும்பப் பெண்ணாக அமலாபால், வில்லனாக பிரசன்னா என மூவருமே அவர்களது கதாப்பாத்திரத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள்.
பல இடங்களில் பாபி சிம்ஹா தனது மனைவியின் நிலையைக் கண்டு உணர்ச்சிவசப்படுவது மிக இயல்பாக உள்ளது. அதேவேளையில், கணவருக்குத் தெரியாமல் பிரச்சினையை மறைக்கும் காட்சிகள் மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார் அமலா. வில்லனாக பிரசன்னா மிரட்டல்.
மூன்று பேருக்குமே நடிப்பை வெளிப்படுத்த நிறைய காட்சிகளைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசி கணேசன்.
கதையைப் பொறுத்தவரையில், இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில், பலரும் தங்களைப் பொறுத்திப் பார்த்துக் கொள்ளும் வகையில் உள்ளது. குறிப்பாக, குடும்பப் பெண்களுக்கு இணையம் மூலமாக எப்படியெல்லாம் பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
திரைக்கதையைப் பொறுத்தவரையில், பெரும்பாலான காட்சிகள் போன் நெட்வெர்க்கிங், ஒட்டுக்கேட்பது, நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நகர்வதால், அதில் சொல்லப்படும் விசயங்கள் தெளிவில்லாமல் உள்ளது.
என்றாலும், அமலா பாலுக்கு கேமரா பொருத்தப்பட்ட ரூம் பிரஷ்னரை பரிசாக அனுப்பி வைத்து குளியலறையில் வைக்கச் சொல்லும் பிரசன்னாவின் தந்திரம், எப்படியெல்லாம் பேஸ்புக்கில் பெண்களுக்கு வலை விரிக்கப்படுகின்றது? எங்கே குடும்பப் பெண்கள் சருக்குகிறார்கள்? எங்கே கணவர்கள் தங்களது மனைவிகளைக் கவனிக்கத் தவறுகிறார்கள்? போன்றவற்றை அழுத்தமான காட்சிகளால் சொல்லியிருக்கிறது திரைக்கதை அமைப்பு.
பிரசன்னாவை எச்சரிக்க போலீஸ் பாணியில், ஆட்களை வைத்து அடிக்கும் பாபி சிம்ஹாவின் அந்த ஒரு காட்சி மிக எதார்த்தமாக நிஜத்தில் நடப்பது போல் இருக்கிறது.
அதற்காக, பொது இடத்தில் பிரசன்னாவைக் கண்டபடி அடித்துக் காயப்படுத்தும் பாபி சிம்ஹா, “போலீஸ்” என்று கூறியதும் அங்கிருப்பவர்கள் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவதும், போனில் கூட அச்சம்பவத்தைப் படம் பிடிக்காமல் இருப்பதும் நடைமுறையில் சாத்தியமில்லை.
துப்பறிவாளராக இயக்குநர் சுசி கணேசனே நடித்திருக்கிறார். அவரது முகபாவனைகள் ரசிக்க வைக்கின்றது.
மற்றபடி, “உனக்கு பூட்ஸ் பலம்னா எனக்கு கீபோட்ஸ் தான் பலம்”, “ஒட்டுக்கேட்கும் போது தான் பல பேரோட நாத்தம் வெளிய வருது”, “சில இரகசியங்கள் இரகசியமாகவே இருக்கிறது தான் நல்லது” என வசனங்கள் மனதில் நிற்கின்றன.
செல்லத்துரையின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளீச் இரகம். வித்யாசாகர் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக திருட்டுப்பயலே பாடல் ரசனை. பின்னணி இசை நினைவில் நிற்கவில்லை.
மொத்தத்தில் – ‘திருட்டுப்பயலே 2’ – தொழில்நுட்ப ரீதியில் காட்சிகளில் தெளிவில்லை என்றாலும் கூட, இன்றைய காலத்திற்கு ஏற்ப சொல்லப்பட்டிருக்கும் கதை விழிப்புணர்வாக இருப்பதோடு, கவனிக்கவும் வைக்கின்றது.
-ஃபீனிக்ஸ்தாசன்