Home நாடு “தோட்டப்புற இந்தியர்கள் உருமாற்றத்திற்காகவே கூடுதலாக உதவுகிறோம்” – நஜிப் கூறுகிறார்

“தோட்டப்புற இந்தியர்கள் உருமாற்றத்திற்காகவே கூடுதலாக உதவுகிறோம்” – நஜிப் கூறுகிறார்

964
0
SHARE
Ad

makkal-sakthi-agm-03122017கோலாலம்பூர் – தனது அரசாங்கம் மலேசிய இந்தியர்களுக்கு கூடுதலாக உதவிக்கரம் நீட்டுவதற்கான காரணம், தற்போது இந்தியர்கள் தோட்டப்புற வாழ்க்கையிலிருந்து நவீன யுகத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் உருமாற்றத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதால்தான் என பிரதமர் நஜிப் தெரிவித்திருக்கிறார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (3 டிசம்பர் 2017) மக்கள் சக்தி கட்சியின் 9-வது ஆண்டு மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது பிரதமர் நஜிப் இவ்வாறு கூறினார்.

மக்கள் சக்தி கட்சி டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

தோட்டப்புற வாழ்க்கையிலிருந்து நவீன நகர்ப்புற வாழ்க்கைக்கு மாறிக் கொண்டிருப்பதால் இந்தியர்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றனர். இதன் காரணமாக அவர்களின் பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது என்றும் நஜிப் தனது உரையில் கூறினார்.

இதற்காகத்தான் இந்தியர்களுக்கு இந்தியர் புளுபிரிண்ட் என்ற பெயரில் சிறப்பு வியூகப் பெருந்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. “மலேசிய வரலாற்றில் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது இந்தியர் புளுபிரிண்ட் என்ற பெயரில் திட்டம் ஏதும் எப்போதும் விவாதிக்கப்பட்டதில்லை” என்றும் நஜிப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

“எங்களின் இந்தத் திட்டம் வெறும் வெட்டிப் பேச்சல்ல மாறாக நிஜம்“ என்றும் கூறிய நஜிப் வெட்டிப் பேச்சு, நிஜம் ஆகிய வார்த்தைகளைத் தமிழிலேயே தனது உரையில் பயன்படுத்தினார்.

இந்தியர் புளுபிரிண்ட் திட்டம் என்ற பத்தாண்டு காலத் திட்டம் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை நிர்வகிக்க பிரதமர் துறையில் செடிக் என்ற தனி இலாகா உருவாக்கப்பட்டுள்ளது.