கோலாலம்பூர் – மலேசியாவில் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தேசிய மிருகக்காட்சி சாலை தனது பார்வையாளர்களை அதிகரிக்க, டிசம்பர் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் பிறந்த மலேசியர்களுக்கு இலவச நுழைவு தருவதாக அறிவித்திருக்கிறது.
இது குறித்து தேசிய மிருகக்காட்சி சாலையின் துணைத் தலைவர் ரஹ்மட் அஹமட் லானா கூறுகையில், இந்த இலவச நுழைவு பாண்டா கரடி வைக்கப்பட்டிருக்கும் இடம் வரையில் உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.
வழக்கமாக பாண்டா கரடி வளர்க்கப்படும் இடத்தைப் பார்வையிட 20 ரிங்கிட் பிரத்யேகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பரில் பிறந்த மலேசியர்கள் தங்களது அடையாள அட்டையைக் காட்டி இந்த இலவச நுழைவைப் பயன்படுத்தலாம்.
மலேசியர்களுக்குத் தற்போது தேசிய மிருகக்காட்சி சாலையில் பெரியவர்களுக்கு 44 ரிங்கிட்டும், 2 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு 16 ரிங்கிட்டும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தக் குடிமகன்களுக்கு 21 ரிங்கிட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.