Home நாடு மஇகா-சங்கப் பதிவக வழக்கு: இதுவரை நடந்ததும், கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பும்!

மஇகா-சங்கப் பதிவக வழக்கு: இதுவரை நடந்ததும், கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பும்!

1104
0
SHARE
Ad

subra-dr-mic-selangor-27082017(நேற்று டிசம்பர் 5-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுபூர்வ தீர்ப்புடன் மஇகாவின் இன்னொரு சட்டப் போராட்ட அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கு, எப்போது, ஏன் தொடங்கியது என்பது முதற்கொண்டு, இறுதியாக வழங்கப்பட்ட கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு வரை செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் கண்ணோட்டம்)

சங்கப் பதிவகம் மற்றும் மஇகாவுக்கு எதிராக முன்னாள் மஇகா பத்து தொகுதித் தலைவர் ஏ.கே.இராமலிங்கம், முன்னாள் மஇகா பாகான் தொகுதி (பினாங்கு) தலைவர் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், முன்னாள் மஇகா சிகாம்புட் தொகுதி தலைவர் டத்தோ ராஜூ ஆகிய மூவரும் தொடுத்திருந்த வழக்கின் மேல்முறையீட்டை நேற்று  செவ்வாய்க்கிழமை (5 டிசம்பர் 2017) விசாரித்த கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் (Federal Court – பெடரல் நீதிமன்றம்) சங்கப் பதிவகம் மற்றும் மஇகா தரப்புக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நீதிமன்றப் போராட்டம் ஒரு வழியாக ஒரு நிறைவுக்கு வந்திருப்பதோடு, அனைத்துத் தரப்புகளுக்கும் இடையில் சுமுகமான, இணக்கமான போக்கும் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

இந்த வழக்கின் பின்புலம் என்ன – இதுவரை நடந்தவை என்ன என்பதை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

2013 மஇகா தேர்தல்களும் – சங்கப் பதிவக முடிவுகளும்!

#TamilSchoolmychoice

MIC PALANI SUBRA COMBO2013-ஆம் ஆண்டு அப்போது மஇகா தேசியத் தலைவராக இருந்த டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் நடத்தப்பட்ட கட்சித் தேர்தல்கள் முறையாக நடத்தப்படவில்லை என்றும் சில குளறுபடிகள் நடந்தன என்றும், அதன் காரணமாக மீண்டும் மறுதேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் மஇகாவின் ஒரு தரப்பினர் சங்கப் பதிவகத்திற்கு மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டை விசாரித்த சங்கப் பதிவகம், கூறப்படும் புகார்களில் உண்மை இருப்பதாகத் தெரிவித்து மீண்டும் மறுதேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென உத்தரவிட்டது.

இந்த சங்கப் பதிவகத்தின் முடிவுக்கு எதிராக பழனிவேல் உட்பட ஒரு குழுவினர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கைத் தொடுத்ததன் காரணமாக, மஇகா சட்டவிதிகளுக்கு ஏற்ப பழனிவேல் தனது தேசியத் தலைவர் பதவியை இழக்கும் நிலைமை ஏற்பட்டது. மஇகாவின் தேசியத் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்தை இடைக்கால தேசியத் தலைவராக சங்கப் பதிவிலாகா அங்கீகரித்தது.

MICபழனிவேல் உள்ளிட்ட தரப்பினர் தொடுத்த வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 15 ஜூன் 2015-ஆம் நாள் சங்கப் பதிவகத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பில், சங்கங்களின் சட்டங்களுக்கு உட்பட்டுத் தான், சங்கங்களின் பதிவிலாகா செயல்பட்டுள்ளதாகவும், அதன் செயல்பாட்டில் எவ்வகையிலும் அதிகார வரம்பு மீறல்கள் நிகழவில்லை என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து பழனிவேல் உள்ளிட்ட வாதிகள் மேல்முறையீட்டு (கோர்ட் ஆப் அப்பீல்) நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தனர். அங்கேயும் இந்த வழக்கு 13 ஜூலை 2015-ஆம் நாள் தள்ளுபடி செய்யப்பட – பின்னர் கூட்டரசு (பெடரல்) நீதிமன்றத்திற்கு அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

21 அக்டோபர் 2015-இல் கூட்டரசு நீதிமன்றமும் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய – சங்கப் பதிவகத்திற்கு எதிரான இந்த முதல் வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது. இதனை சங்கப் பதிவகத்திற்கு எதிரான முதல் வழக்கு என்று குறிப்பிடலாம்.

சங்கப் பதிவகத்திற்கு எதிரான இரண்டாவது வழக்கு

ramalingam-ak- (1)
ஏ.கே.இராமலிங்கம்

மஇகா தலைவர்கள், சங்கப் பதிவக அதிகாரிகளுடன் இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டார்கள் எனக் குற்றம் சாட்டி, முன்னாள் மஇகா பத்து தொகுதி தலைவர் கே.இராமலிங்கம் மற்றும் 7 முன்னாள் மஇகா உறுப்பினர்கள் இணைந்து புதியதொரு வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் 5 பிப்ரவரி 2016-ஆம் நாள் தொடுத்தனர்.

இந்த வழக்குதான் நேற்று கூட்டரசு நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்காகும்.

ஏ.கே.இராமலிங்கத்துடன், வி.கணேஷ், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை மற்றும் டத்தோ எம்.வி.ராஜூ ஆகிய எழுவர் இணைந்து இந்த வழக்கைத் தொடுத்திருந்தனர்.

Henry
டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம்

அவர்கள், பிரதிவாதிகளாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ டி.மோகன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ அ.சக்திவேல், வழக்கறிஞர் ஏ.வசந்தி, சங்கப் பதிவக தலைமை இயக்குநர் முகமட் ராசின் அப்துல்லா, சங்கப் பதிவக அதிகாரி அக்மால் யாஹ்யா ஆகியோரைப் பெயர் குறிப்பிட்டிருந்தனர்.

11 ஜூலை 2016-இல் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிரதிவாதிகள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபணைகளை ஏற்று வழக்கைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு ஏற்கனவே தொடுக்கப்பட்ட சங்கப் பதிவகத்திற்கு எதிரான முதல் வழக்கின் அதே சாராம்சங்களைக் கொண்டிருக்கிறது என்றும், ஏற்கனவே கூட்டரசு நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டு தீர்ப்பு பெறப்பட்ட வழக்கை மீண்டும் சில மாற்றங்களுடன் வாதிகள் சமர்ப்பித்திருக்கின்றனர் என்றும் அதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென பிரதிவாதிகளின் சார்பில் வழக்கறிஞர்கள் பூர்வாங்க ஆட்சேபங்களை எழுப்பினர். அத்துடன் வழக்கைத் தொடுத்தவர்கள் மஇகா உறுப்பினர்கள் இல்லை என்பதால் இந்த வழக்கைத் தொடுக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

Court of Appeal 440 x 215அந்த ஆட்சேபங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மீண்டும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக இராமலிங்கம் குழுவினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு (Court of Appeal) செய்திருந்த மேல்முறையீட்டை 10 ஜனவரி 2017-ஆம் நாள் விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த வழக்கை பூர்வாங்க ஆட்சேபங்களின்படி தள்ளுபடி செய்திருக்கக் கூடாது என்று கூறி, மீண்டும் அந்த வழக்கின் முழு விசாரணையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டுமென தீர்ப்பு கூறியது.

இரண்டாவது வழக்கின் கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீடு

ramalingam-ak-fed court-lawyer manogaran-05122017
கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 5 டிசம்பர் 2017-ஆம் நாள் கூட்டரசு நீதிமன்ற வளாகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஏ.கே.இராமலிங்கம், டத்தோ ராஜூ – அவர்களின் வழக்கறிஞர் டத்தோ வி.மனோகரன்

இதனைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதிகள் தரப்பில் – அதாவது சங்கப் பதிவகம் மற்றும் மஇகா சார்பில் – கூட்டரசு நீதிமன்றத்திற்கு (பெடரல் கோர்ட்) மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதற்கிடையில், வழக்கைத் தொடுத்திருந்த 8 பேர்களில் 5 பேர் இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். எஞ்சியிருந்த மூவரான ஏ.கே.இராமலிங்கம், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், டத்தோ ராஜூ ஆகிய மூவர் மட்டும் கூட்டரசு நீதிமன்றத்திற்கான மேல்முறையீட்டைச் சமர்ப்பித்தனர்.

அந்த மேல்முறையீட்டை நேற்று செவ்வாய்க்கிழமை (5 டிசம்பர் 2017) விசாரித்த கூட்டரசு நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் (கோர்ட் ஆப் அப்பீல்) தீர்ப்பை இரத்து செய்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அதனையே மறு உறுதிப்படுத்தியது.

MIC Logo 440 x 215கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஏற்கனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கும் நிலையில் அந்த முடிவை அப்படியே கூட்டரசு நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

2013-இல் நடந்த மஇகா உட்கட்சித் தேர்தல்களை இரத்து செய்து மீண்டும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என சங்கப் பதிவகம் செய்த முடிவுகளை எடுப்பதில் மஇகாவும், சங்கப் பதிவகமும் கூட்டாக இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டனர் என்ற புகார்களின் அடிப்படையில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு, தொடக்க விசாரணைக்குப் பின்னர் 11 ஜூலை 2016-இல் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் அந்த முடிவையே கூட்டரசு நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தற்போது சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு சாதகமாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

வழக்கு தொடுத்த 8 பேரும் வாபஸ் பெற்றனர்

ramalingam-lawyer manogaran-fed court 05122017
5 டிசம்பர் 2017-ஆம் நாள் கூட்டரசு நீதிமன்ற வளாகத்தில் தனது வழக்கறிஞர் டத்தோ வி.மனோகரனுடன் கலந்தாலோசிக்கும் ஏ.கே.இராமலிங்கம்

இந்த வழக்கில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த வழக்கு நேற்று டிசம்பர் 5-ஆம் தேதி விசாரணைக்கு வரும் முன்னரே அதனைத் தொடுத்திருந்த மூவரும் வழக்கிலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டனர் என்பதுதான். இந்நிலையில், கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு மீட்டுக் கொள்ளப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரதிவாதிகள் தங்களின் வழக்கறிஞர்கள் மூலம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, கூட்டரசு நீதிமன்றம் தொடர்ந்து இந்த வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதற்கான விளக்கத்தை நேற்று, தீர்ப்பு வெளியானதும் விடுத்த அறிக்கையில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வழங்கியிருக்கிறார்.

drsubra-segi-eyecare-opening-27112017“இந்த வழக்கைத் தொடுத்திருந்த 8 வாதிகளும் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதிலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டாலும் இந்த வழக்கு தொடர்பான சட்ட அம்சங்களையும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கூட்டரசு நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக எங்களின் வழக்கறிஞர் குழு கருதியது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்காலத்தில் அரசாங்கத்தின் மீதும், அரசியல் கட்சிகளின் மீதும், மிகவும் கடுமையான, முக்கியமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் அதனை கூட்டரசு நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாக வழக்கறிஞர் குழு கருதியது. கூட்டரசு நீதிமன்றமும் பிரதிவாதிகளின் வழக்கறிஞர் குழு சமர்ப்பித்த வாதங்களை ஏற்றுக் கொண்டு மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்திருப்பது குறித்தும், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு உறுதிப்படுத்தி நிலைநாட்டியிருப்பது குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என டாக்டர் சுப்ரா தான் விடுத்த பத்திரிக்கை அறிக்கையில் விளக்கியிருக்கிறார்.

மஇகா – இனி அடுத்தது என்ன?

GE-14-logoஇதனைத் தொடர்ந்து மஇகாவின் இன்னொரு வரலாற்றுபூர்வ சட்டப் போராட்டம் அனைத்துத் தரப்பினரின் இணக்கத்துடன், புரிந்துணர்வுடன் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த வழக்கைத் தொடுத்து, முன்னணியில் இருந்து இறுதிவரைப் போராடிய ஏ.கே.இராமலிங்கமும் டாக்டர் சுப்ராவின் தலைமையை ஏற்று, கட்சியின் ஒற்றுமைக்காக இணைந்து பாடுபடப் போவதாகவும், வெளியில் நிற்கும் கிளைகளை மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் மட்டும் மீண்டும் கட்சியில் இணைவதாகவும் அறிவித்திருக்கிறார்.

கூடியவிரைவில், மஇகாவுக்கு வெளியே நிற்கும் கிளைகள் இறுதிக் கட்ட இணைப்பாக மீண்டும் கட்சிக்குள் வந்து இணைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

general-election-142018-ஆம் ஆண்டு மஇகாவுக்கான தேர்தல் ஆண்டு என்பதால், மஇகா சட்டவிதிகளின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய கிளைகள், செயல்படாத கிளைகள், கட்சிக்கு வெளியே இருக்கும் கிளைகள் என அனைத்து கிளைகளும் தங்களுக்குரிய உறுப்பினர் சந்தாவைச் செலுத்தி தங்களின் அங்கீகாரத்தை மஇகா தலைமையகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் கட்சிக்கு வெளியே இருக்கும் மஇகா கிளைகள் அனைத்தும் மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2018 புத்தாண்டு பிறக்கும் போது, அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்த ஒரு புதிய மஇகா – புத்துணர்ச்சியோடு புதிய பாதையில் நடைபோடும் சூழல் உருவாகும்.

ஆனால், அதற்கு அடுத்ததுதான் மஇகா எதிர்நோக்கப் போகும் – அந்தக் கட்சியின் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் மற்றொரு மாபெரும் சவால்!

அதுதான் 14-வது பொதுத்தேர்தல்!

-இரா.முத்தரசன்