Home நாடு திருக்குறள் மேற்கோளுடன் நாடாளுமன்றத்தில் டி.மோகன் முதல் உரை!

திருக்குறள் மேற்கோளுடன் நாடாளுமன்றத்தில் டி.மோகன் முதல் உரை!

1098
0
SHARE
Ad

mohan t-senate speech-07122017கோலாலம்பூர் – கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நாடாளுமன்ற மன்ற மேலவை உறுப்பினராக பதவியேற்ற மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் நேற்று வியாழக்கிழமை 7 டிசம்பர் 2017-ஆம் நாள் தனது முதல் நாடாளுமன்ற உரையை நிகழ்த்தினார்.

நாடாளுமன்ற மேலவையில் 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதிலான விவாதத்தில் கலந்து கொண்டு தனது முதல் உரையை திருக்குறள் மேற்கோளுடன் டி.மோகன் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார்.

தனது முதல் உரையில் அவர் தம்மை மேலவை உறுப்பினராக தேர்வு செய்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களுக்கும் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் அவர்களுக்கும் மோகன் நன்றி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

வள்ளுவரின் 385-வது குறளான,

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு”

என்ற குறளைத் தமிழில் மேற்கோள் காட்டிய டி.மோகன், அன்றே வள்ளுவர் காட்டிய வழியின்படி, 2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் நலமான வாழ்க்கை மேம்பாட்டையும் உறுதி செய்கிறது என அவர் குறிப்பிட்டார்.

mohan t-senate-speech-07122017ஓர் அரசாங்கத்தின் பொறுப்பு என்னவென்றால், நாட்டின் வருவாயை ஈட்டும் வண்ணம் வரிகளுக்கான சட்டங்களை இயற்ற வேண்டும், பின்னர் அவ்வாறு ஈட்டிய பொருளைக் காக்க வேண்டும், காத்து சேமித்த பொருளை எவ்வாறு செலவு செய்வது எனத் திட்டமிட வேண்டும் என்பதுதான் மேற்குறிப்பிட்ட குறளின் பொருளாகும்.

இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கைகளில் இது தலையாய ‘தாய்’ பட்ஜட் ஆகும். இது நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதாகவும் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதாகவும் உள்ளது என அவர் கூறினார்.

mohan-T-senate swearing-16112017 (2)
16 நவம்பர் 2017-ஆம் நாள் டி.மோகன் செனட்டராகப் பதவியேற்றுக் கொண்டபோது…

மலேசிய மக்கள் அனைவருக்குமான இந்த அறிக்கை அனைத்து இனங்களும் பயன் பெறுவதை உறுதி செய்வதாக இருக்க வேண்டுமெனவும் அவர் தமது உரையில் கேட்டுக் கொண்டார்.

நாடு, நாட்டு மக்கள், இளைஞர்களின் மேம்பாடு, விளையாட்டுத்துறை, தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் மேம்பாடு குறித்தும் அவர் பேசினார்.

இந்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் வழி தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் சிறப்பான கட்டிட வசதிகளை கொண்டிருக்கும் எனவும் டி. மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் இளையோருக்கான பயிற்சி திட்டத்தில் இதுவரை இனவாரியாக பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்கு இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரும், துணையமைச்சரும் ஆற்றிவரும் பங்கை மேற்கோள்காட்டி பேசிய அவர் பயிற்சியாளர்களின் திறனும், விளையாட்டு வசதிகளின் மேம்பாடும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்திய சமுதாய மாணவர்களிடையே சமுதாய சீர்கேட்டை களையும் நோக்கில் பள்ளிக்கூடங்களில் சமய வகுப்புகள் நடத்தப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்திய சமுதாய இளைஞர்கள் சிலரிடத்தில் இருக்கின்ற வன்முறை கலாச்சாரங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு சமய வகுப்புகள் இன்றியமையாதது. இதனை அரசாங்கம் மிக முக்கியமாக சீர் தூக்கிப் பார்க்க வேண்டுமென டி.மோகன் தனது முதல் நாடாளுமன்ற உரையில்  வலியுறுத்தினார்.