Home நாடு “நான் துன் எனக் குறிப்பிட்டது மகாதீரைத்தான்! சாமிவேலுவை அல்ல!” தேவமணி விளக்கம்

“நான் துன் எனக் குறிப்பிட்டது மகாதீரைத்தான்! சாமிவேலுவை அல்ல!” தேவமணி விளக்கம்

1625
0
SHARE
Ad
devamany-samy vellu-file pic
துன் சாமிவேலுவுடன், எஸ்.கே.தேவமணி கோப்புப் படம்

கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை தமிழ் நாளிதழ் ஒன்றில் ‘சாமிவேலு தலைமைத்துவத்தில் உரிமைகளை இழந்தோம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், தான் கூறியதாக இடம் பெற்றிருக்கும் கருத்துகளுக்கு மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தனது உரை தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் தேவமணி விளக்கமளித்துள்ளார்.

“துன் சாமிவேலு பற்றி நான் கூறியதாக பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி முற்றிலும் தவறான செய்தியாகும். எனது உரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு தவறான பொருள் படும்படி அந்தப் பத்திரிக்கை பிரசுரித்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் காலத்தில் இந்தியர்களுக்கான எவ்வித சிறப்பு திட்டங்களோ, அமலாக்கமோ இல்லாததைத் தொட்டு நான் பேசினேன். ‘துன்’ என்று துன் மகாதீரைக் குறிப்பிட்டேனே தவிர, துன் சாமிவேலுவை அல்ல! இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர்கள் டத்தோ ந. முனியாண்டி மற்றும் டத்தோ எஸ்.எம். முத்து ஆகியோர் இக்கூற்றினை உறுதிப்படுத்துவர்” என தேவமணி நேற்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இவ்வாறு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பிரசுரிக்கப்பட்ட செய்தியினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.14-வது பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள வேளையில் ம.இ.கா மற்றும் தேசிய முன்னணி மீது சமுதாயம் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வல்லமையை இது போன்ற பத்திரிக்கை செய்திகள் கொண்டுள்ளன. ஆகவே, உண்மை நிலையை விளக்கி, மறுப்பறிக்கை வெளியிடும்படி சம்பந்தப்பட்ட பத்திரிக்கை நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்” என்றும் தேவமணி கூறியுள்ளார்.

என்னை ம.இ.கா வாயிலாக சமுதாய பணிகளுக்கு அறிமுகம் செய்து எனது அரசியல் ஆசானாக, வழிக்காட்டியாக திகழும் துன் சாமிவேலு அவர்களை என்றும் நான் மறவேன் என்றும்  இந்திய சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை என்றும் தேவமணி மேலும் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

ஆதலால், தவறான பத்திரிக்கை செய்தியினால் குழப்பமடையாமல், அதை புறந்தள்ளி நமது மக்கள் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் தேவமணி தெரிவித்தார்.

இதற்கிடையில், நேற்று துன் சாமிவேலு அவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு தனது விளக்கங்களை தேவமணி அவரிடம் தெரிவித்தார் என்றும் தேவமணியின் அலுவலகத் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.