திருப்பூர் – சுமார் ஓராண்டுக்கு முன்னர் உடுமலையில் ஆணவக் கொலையில் சங்கர் என்பவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் கொல்லப்பட்டார். ஜூலை 2015-இல் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக சங்கரைத் திருமணம் செய்த கவுசல்யா என்ற பொறியியல் துறை மாணவியின் குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் இந்தப் படுகொலையை நடத்தினர்.
இது தொடர்பான வழக்கு மீதிலான தீர்ப்பு இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பின்படி, குற்றம் சாட்டப்பட்ட 9 பேர்களில் 6 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிமன்றம் மூவரை விடுதலை செய்தது.
தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவர்களில் கவுசல்யாவின் தந்தை, மற்றும் மாமா ஆகியோரும் அடங்குவர்.
தற்போது கொலையுண்ட தனது கணவர் சங்கரின் குடும்பத்தினருடன் வாழ்ந்து வரும் கவுசல்யா நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று இன்று அறிக்கை விடுத்தார். விடுதலையான மூவர் மூலம் தனது உயிருக்கு ஆபத்து இன்னும் நீடிப்பதாகவும் கவுசல்யா தெரிவித்தார். தங்களுக்குக் காவல் துறையின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கவுசல்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகவும், சாதியக் கொலைகளுக்கும் எதிரான தனிச்சட்டம் இயற்றுவதும்தான் சங்கர் கொலைக்கு கிடைக்கக் கூடிய சரியான நீதியாக இருக்கும் என்றும் கவுசல்யா கூறியுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட மூவருக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விடுதலை செய்யப்பட்ட மூவரில் கவுசல்யாவின் தாயாரும் ஒருவராவார்.
இதற்கிடையில் கவுசல்யாவுக்கு அரசாங்க வேலை வழங்கப்பட்டிருக்கிறது.