கோலாலம்பூர் – இந்திய சமுதாய இளைஞர்கள் சிலரிடத்தில் நிலவி வருகின்ற வன்முறை கலாச்சாரங்களை துடைத்தொழிக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் முதற்கட்டமாக தமிழ்ப்பள்ளிகளில் சமயக் கல்வியை கட்டாய பாடமாகப் போதிக்க வேண்டும் என மஇகாவின் உதவித் தலைவரும், செனட்டருமான டத்தோ டி.மோகன் வலியுறுத்தினார்.
“அடிப்படை சமய போதனையின் வழியும் – செடிக்கின் ஆலய உருமாற்றத் திட்டத்தின் வழியும் அவர்களை நல்வவழிப்படுத்த முடியும்” என மலேசிய இந்திய பெருவியூகத்திட்டம் (புளுபிரிண்ட்) தொடர்பாக கடந்த திங்கட்கிழமை டிசம்பர் 11-ஆம் தேதி மஇகா தலைமையகத்தில் சமூக இயக்கங்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் பங்கு கொண்ட கலந்துரையாடலில் பேசியபோது டி.மோகன் இவ்வாறு வலியுறுத்தினார்.
“நமது இளைஞர்கள் சமய போதனைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதனால் சில பிரச்சனைகள் பள்ளி அளவிலிருந்து உருவெடுக்கின்றது. நமது இஸ்லாம் சகோதரர்கள் அடிப்படை சமய போதனையின் வழி 5 முறை தொழுகை மேற்கொள்கிறார்கள். அது போல நமது சமயம் சார்ந்த அடிப்படை போதனைகள் நமது இளைஞர்களுக்கு மிக மிக அவசியமானது” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நமது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்கள் சமுதாய நல்வழிக்காகவும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் அந்த திட்டங்கள் வெற்றியடைய வேண்டுமானால் தமிழ்ப்பள்ளிகளில் சமய வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். சமயத்தின் வழியே ஒரு தனிமனிதனை நல்வழிப்படுத்த முடியும். மேலும் அடிப்படை சமய அறிவு கொண்டவர்கள் சிறந்த எதிர்காலத்தையும் கொண்டிருப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.
“செடிக் அணுகுமுறையில் மாற்றம் தேவை”
“அதுமட்டுமில்லாது செடிக் மேற்கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் நல்ல திட்டங்கள்தான். ஆனால் அதில் சில சரியான அணுகுமுறையில் கையாளப்படாத காரணத்தினால் பிரச்சனைகள் உருவெடுக்கின்றன. சமுதாய முன்னேற்றத்தை மையப்படுத்தி செய்யப்படும் திட்டங்கள் தொடர்ந்து இருந்தால் மட்டுமே சமுதாயத்திற்கு நன்மை பயக்கும். ஒரு வருடம் மானியம் கொடுக்கப்படுவதும், அடுத்த வருடம் அதனை நிறுத்துவதுமான நடவடிக்கைகள் சமுதாயத்திற்கு நல்லதல்ல.
சமுதாய நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை ஆராய்ந்து சரியான அணுகுமுறையில் செடிக் திட்டங்கள் தொடர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். சமுதாயமும் வளர்ச்சி நிலையை நோக்கி பயணிக்கும்” எனவும் டத்தோ டி.மோகன் தனது கருத்தை அந்த கலந்துரையாடல் நிகழ்வில் பதிவு செய்தார்.