டோக்கியோ – கடந்த வாரம் ஜப்பான் ஓகினாவா தீவில் உள்ள பள்ளி ஒன்றில் அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டரின் ஜன்னல் பாகம் விழுந்த விவகாரத்தில் அப்பகுதிவாசிகள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.
இது குறித்து அமெரிக்க இராணுவம் நடத்திய விசாரணையில், இச்சம்பவத்திற்கு மனிதத் தவறு தான் காரணம் எனக் கண்டறிந்திருக்கிறது.
மேலும், இச்சம்பவத்திற்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறது.
எனினும், ஓகினாவா தீவில் உள்ள ஃபூதென்மா கடல் மற்றும் விமானப்படைத் தளம் தங்களுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாகவும், தங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அப்பகுதிவாசிகள் புகார் அளித்திருக்கின்றனர்.
மேலும், தினசரி பயிற்சி விமானங்களால் ஏற்படும் சத்தம் தங்களுக்கு மன உளைச்சலைத் தருவதாகவும், எனவே விமானப் படைத்தளத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் படியும் அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.