Home இந்தியா வெற்றிவேல் மீது கிருஷ்ணப்பிரியா கடும் கண்டனம்!

வெற்றிவேல் மீது கிருஷ்ணப்பிரியா கடும் கண்டனம்!

934
0
SHARE
Ad
krishnapriya-sasikala bro daughter-
பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் கிருஷ்ணப்பிரியா (படம்: நன்றி – நியூஸ்7 தமிழ்)

சென்னை – (மலேசிய நேரம் மாலை 5.35 மணி நிலவரம்)

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காணொளியை (வீடியோ) வெளியிட்டதற்காக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் மீது கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கிறார் சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப் பிரியா.

சசிகலா சிறையிலிருந்து தற்காலிக விடுப்பில் (பரோல்) தனது கணவரைக் காண சென்னைக்கு வந்தபோது கிருஷ்ணப் பிரியா வீட்டில்தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இன்று புதன்கிழமை மாலை சென்னை தியாகராய நகர் வீட்டிலிருந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கிருஷ்ணப் பிரியா, நம்பிக்கையின் அடிப்படையில்தான் டிடிவி தினகரன் வசம் அந்த வீடியோவை ஒப்படைத்ததாகவும், அந்த வீடியோ எப்படி வெற்றிவேல் வசம் போனது என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

அந்தக் காணொளி வெளியீட்டிற்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் கூறிய கிருஷ்ணப்பிரியா, சசிகலாவை 15 நாட்களுக்கு ஒருமுறைதான் சந்திக்க முடியும் என்றும், இந்த காணொளி வெளியிடப்பட்டது தெரிந்தால் சின்னம்மா எவ்வாறு கவலைப்படுவார் என்பதை நினைக்கும் போதே வருத்தமாக இருக்கிறது என்றும் மேலும் தெரிவித்திருக்கிறார்.

“நம்பித்தான் அந்த வீடியோவை ஒப்படைத்தோம். எங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள். தன்மீது கொலைகாரி பட்டம் சுமத்தப்பட்டபோது கூட சின்னம்மா சசிகலா அம்மாவின் (ஜெயலலிதா) அந்த வீடியோவை வெளியிட ஒப்புக் கொள்ளவில்லை. என்மீதுதானே கொலைப் பழி சுமத்துகிறார்கள் பரவாயில்லை கூறிக் கொள்ளட்டும் என்று அமைதியாக இருந்தார்கள். காரணம் அத்தகைய வீடியோவை வெளியிட்டால் ஜெயலலிதாவின் தோற்றத்திற்கு களங்கம் ஏற்படும் என்பதால்தான் சசிகலா அதனை வெளியிடவில்லை. இந்த வீடியோ கூட விசாரணை ஆணையத்திடம் ஒப்படைப்பதற்காக எங்களிடம் சசிகலா வழங்கியிருந்தார். வீடியோவை வெளியிட்டதோடு, அதுகுறித்து எந்தவித சஞ்சலமும் இல்லாமல் வெற்றிவேல் தொடர்ந்து அதுகுறித்து பேசி வருவதும் கண்டனத்துக்குரியது” எனவும் கிருஷ்ணப் பிரியா வெற்றிவேலை சாடியுள்ளார்.