பண்டுங் – இந்தோனிசியாவின் மேற்கு ஜாவா பகுதியைச் சேர்ந்த பண்டுங் என்ற இடத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த 14 வயது சிறுவனான அரில், தான் வீட்டில் வளர்த்து வந்த ராஜநாகத்தால் கொத்தப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
வீட்டில் 30-க்கும் மேற்பட்ட பாம்புகளை வைத்துப் பராமரித்து வந்த அரில், தினமும் அவற்றைப் பராமரிப்பதை தனது செல்பேசியில் படம் பிடித்து இணையத்தில் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார்.
கடந்த டிசம்பர் 11-ம் தேதி, இரவு 9.50 மணியளவில் தனது ராஜநாகத்தை குளிக்க வைத்துவிட்டு முதல் படத்தை வாட்சாப்பில் அனுப்பியிருக்கிறார்.
அதில், “கொஞ்சம் சிரிக்க வேண்டியது தானே?” என்று பாம்பைப் பார்த்துக் கேட்பது போல் படத்தின் கீழே எழுதி நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறார்.
அடுத்த 4 நிமிடங்களில் கையில் பாம்பு கொத்திய நிலையில், இரத்தம் வழிய அதனைப் படம் பிடித்து, “வாழ்வா? சாவா?” என்ற தலைப்புடன் படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறார்.
எனினும், உதவிக்கு வர யாரும் இல்லாத நிலையில், மருத்துவமனை செல்ல தாமதமானதால் அரில், இரவு 10 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
இது குறித்து அரிலின் தாயார் கூறுகையில், “வீட்டில் எனது மகன் அப்போது தனியாக இருந்திருக்கிறான். பாம்பு கடித்தவுடன் நண்பர்களை உதவிக்கு அழைத்திருக்கிறான். என்னை விரும்பும் உண்மையான நண்பர்கள் உடனடியாக என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று தகவல் அனுப்பியிருக்கிறான்” என்று தெரிவித்திருக்கிறார்.
எனினும், சில நண்பர்கள் 11 மணியளவில் தான் அரிலைக் காப்பாற்ற வந்திருக்கின்றனர். ஆனால் அதற்கு அரில் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்திருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரில் நள்ளிரவில் உயிரிழந்தார்.
அரில், பண்டுங் பகுதியில் பாம்புகளை வளர்க்கும் குழுவினருடன் இணைந்து பல கொடிய விஷமுள்ள பாம்புகளை வளர்ப்பதும், கையாள்வதுமாக இருந்திருக்கிறார்.
பல நேரங்களில் பேரிடர் ஏற்படும் பகுதிகளுக்கு நிதி திரட்ட தனது குழுவினருடன் இணைந்து வீதிகளில் பாம்புகளை வைத்து வேடிக்கைக் காட்டி காசு வசூல் செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தவர் எனத் தகவல்கள் கூறுகின்றன.