Home நாடு “இயேசுபிரான் போதனைகளை மனதில் கொள்வோம்” – டாக்டர் சுப்ரா

“இயேசுபிரான் போதனைகளை மனதில் கொள்வோம்” – டாக்டர் சுப்ரா

1123
0
SHARE
Ad

subra-dr-mic-selangor-27082017கோலாலம்பூர் -தன் வாழ்நாள் முழுவதும் அன்பையே போதித்த இயேசுநாதரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினத்தில் அந்த மகானின் போதனைகளை அனைவரும் மனதில் கொள்வோம் என மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தனது கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டாக்டர் சுப்ரா வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

“மக்களுக்கு அன்பையும், சிறந்த நற்செய்திகளோடு கூடிய போதனைகளையும் போதித்து, கிறிஸ்துவ மதம் உலகில் தோன்றுவதற்கும் இன்றுவரை தழைத்து நிற்பதற்கும், காரணமாகத் திகழும் இயேசுநாதரின் பிறந்த நாளை, கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ மதத்தினருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

#TamilSchoolmychoice

மலேசியாவைப் பொறுத்தவரை கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டம் என்பது மற்ற மதப் பெருநாட்களைப் போலவே இன, மத ஒற்றுமைக்கு அடையாளமாகவும், அனைவரும் திறந்த இல்ல விருந்துபசரிப்புகள் என்ற பெயரில் ஒன்று கூடிக் கலந்து அளவளாவி மகிழும் வண்ணமும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.”

christmas-message-2017-banner-drsubra“அனைத்து மதங்களுமே சிறந்த நற்செய்திகளையும், போதனைகளையும் மக்களுக்கு வழங்கி அவற்றை பின்பற்ற வலியுறுத்துகின்றன என்றாலும், ஒவ்வொரு மதமும் அவர்களுக்கே உரித்தான சில சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் கிறிஸ்துமஸ் மதத்தைப் போதித்த இயேசுபிரான் வாழ்நாள் முழுவதும் அன்பையே போதித்தார். மக்களுக்காக தன்மீது சுமத்தப்பட்டத் துன்பங்களை இன்முகத்துடன் தாங்கிக் கொண்டார். மன்னிக்கும் நற்பண்பை அருளினார். இதன் காரணமாக தனித்துவம் மிக்க அவதார மனிதராக இன்றும் மக்களின் மனங்களில் வாழ்ந்து வருகிறார்.

இந்தப் போதனைகளை நாமும் இயன்றவரைப் பின்பற்றி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதன் மூலம், மற்றவர்களுக்கும் மரியாதை தருவதன் மூலம், ஒற்றுமையும், புரிந்துணர்வும், மத நல்லிணக்கமும் கொண்ட ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.

ஏற்கனவே, அரசாங்கத்தின் முயற்சிகளின் காரணமாகவும், காலம் காலமாக இயல்பாகவே மலேசியர்களிடையே நிலவி வரும் மத நல்லிணக்கம் காரணமாகவும், உலகுக்கே உதாரணமாகத் திகழ்ந்து வரும் நமது மலேசிய சமுதாயம் தொடர்ந்து இன, மத ஒற்றுமையில் மேம்பாடு காண, இயேசுநாதரின் போதனைகள் நமக்கு வழிகாட்டுகின்றன.

மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மஇகாவில் உள்ள கிறிஸ்துவ உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்தியர்களின் தாய்க் கட்சியாக விளங்கும் மஇகா என்பது தனிப்பட்ட ஒரு மொழியினருக்கோ, இனத்திற்கோ உருவான கட்சியல்ல. மலேசிய இந்தியர்கள் அனைவரையும், இன, மத பேதங்களின்றி ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில்தான் மஇகாவை நமது முன்னோர்கள் அந்நாளில் கட்டமைத்தனர். பின்வந்த தலைவர்களும் அதே வழியில்தான் மஇகாவைத் தலைமையேற்று முன்னோக்கிக் கொண்டு சென்றனர்.

இதே அடிப்படையில்தான் மஇகா தொடர்ந்து தனது அரசியல் கொள்கையை வகுத்து, இந்தியர்களின் நலன்களுக்காகப் போராடும், பயணம் மேற்கொள்ளும் என்பதையும் இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில்தான் அண்மையக் காலமாக இந்தியர்கள் கொண்டாடும் மற்ற முக்கிய மத ரீதியான பெருநாட்களுக்கும் மஇகா முக்கியத்துவம் கொடுத்து மஇகா தலைமையகத்தில் கொண்டாடி வருகின்றது.

கிறிஸ்துமஸ் தினத்தைத் தொடர்ந்து புத்தாண்டும் மலர்வதால் கிடைக்கக் கூடிய நீண்ட விடுமுறையைத் தங்களின் உறவுகளோடும், குடும்பத்தோடும் கொண்டாடி மகிழ, வேறு நகர்களுக்குச் செல்லும் மலேசியர்கள் தங்களின் பயணங்களில் கவனமாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும் எனவும், வாகனங்களை நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாட்டுக்குள் செலுத்தி, சாலை விதிகளுக்கு மதிப்பளித்து தங்களின் பயணங்களைத் தொடர வேண்டும் எனவும் இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.

அதே வேளையில், நீண்ட விடுமுறைகள், பெருநாள் கொண்டாட்டங்கள் என்று வரும்போது அங்கு விருந்துபசரிப்புகளுக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததுதான். இத்தகைய பெருநாள் காலங்களில் அளவான, சுகாதாரமான உணவுகளையும், அதிகமான இனிப்பு, உப்பு, கொழுப்பு போன்றவை கலக்காத உணவுகளையும் நாமும் உண்டு நமது குழந்தைகளுக்கும் அவற்றையே அறிவுறுத்துவதன் மூலம் உடல் நலம் மிக்க, ஆரோக்கியமான மலேசிய சமுதாயத்தை எதிர்வரும் ஆண்டுகளில் நாம் உருவாக்க முடியும்.

கட்டுப்பாடற்ற, முறையற்ற உணவுப் பழக்கங்களால் நாளடைவில் மக்கள் எதிர்நோக்கும் உடல்நலக் குறைபாடுகளை ஆய்வுகளின் மூலம் சுகாதார அமைச்சு நன்கு கண்டறிந்துள்ள காரணத்தால்தான், பல்வேறு நிகழ்ச்சிகள், திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த உணவுப் பழக்கங்களை அமைச்சின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்த செய்திகளோடு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கும் அனைத்து கிறிஸ்துவ இன மக்களுக்கும், எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”