Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘பலூன்’ – பேய் வீட்டில் பலூனும் ஒப்பனையும் மட்டுமே புதுமை!

திரைவிமர்சனம்: ‘பலூன்’ – பேய் வீட்டில் பலூனும் ஒப்பனையும் மட்டுமே புதுமை!

1642
0
SHARE
Ad

Baloonகோலாலம்பூர் – வழக்கமான பேய் வீடு, வழக்கமான பேய் மிரட்டல்கள், வழக்கமான பழிவாங்கல் பிளாஷ்பேக் என கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மை வறுத்தெடுத்து வரும் தமிழ் சினிமா பேய்ப் படங்களின் வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது சினிஸ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி நடிப்பில் வெளிவந்திருக்கும் பலூன்.

மற்ற பேய் படங்களுக்கும் இந்தப் படத்திற்கும் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்தப் படத்தில் பேய் கலர் கலராக பலூன்களைப் பறக்கவிடுகின்றது.’ஐடி’, ‘கிளவுன்’ போன்ற ஆங்கிலப் படங்களின் பாணியில் பேய் கோமாளி வேஷம் போட்டுக் கொண்டு வருகிறது. அந்த ஒப்பனை மட்டுமே தமிழுக்குப் புதுமை. மற்றபடி, பேய்க்கான பிளாஷ்பேக் அதரபழசான ‘ஜகன் மோகினி’ காலத்து கதை.

Baloon 2கதைப்படி, சினிமா இயக்குநராகும் ஆசையோடு கையில் கதையை வைத்துக் கொண்டு அலைகிறார் ஜெய். அப்போது தயாரிப்பாளர் ஒருவர் பேய் படம் எடுப்பதாக இருந்தால் தயாரிப்பதாகச் சொல்ல, ஊட்டி அருகே இருக்கும் பேய் வீட்டைப் பற்றி அறிந்து கொள்ள மனைவி அஞ்சலி, உதவி இயக்குநர்கள் யோகி பாபு, கார்த்திக் யோகி, தனது அண்ணன் சுப்பு பஞ்சுவின் மகன் ஆகியோருடன் அங்கு செல்கிறார்.

#TamilSchoolmychoice

அந்த வீட்டில் திடீர் திடீரென பலூன்கள் பறந்து வருகின்றன. பல ‘வழக்கமான’ அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. அது என்னவென்று கண்டுபிடிக்க ஜெய், அங்குள்ள பாதிரியார் ஒருவரின் உதவியை நாடுகிறார். அவர் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றது.

அது என்ன? அதற்கும் ஜெய்க்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் பிற்பாதி.

Baloon 1இடைவேளை வரும் வரை பேய் வருவதற்கான காரணம் என்னவென்றே சொல்லாமல் ஜவ்வாக இழுத்திருக்கிறார்கள். பேயையாவது கொஞ்சம் பயமுறுத்தும் படியாகக் காட்டக்கூடாதா? என்று சலித்துக் கொள்ளும் அளவிற்கு கேமராவில் பேய் தெரிவது, கருப்பு உருவம் ஒன்று விருட் விருட்டென்று நகர்வது என பல படங்களில் பார்த்த அதே டெக்னிக்கு.

“இப்ப பாருங்களே மெத்தைக்குள்ள இருந்து பேய் வரும்” என்று முன்சீட்டில் இருந்து ஒருவர் கதை சொல்லிக் கொண்டே இருக்கிறார். இப்படியாக திரைக்கதை அமைப்பு கொஞ்சம் இழுவை தான்.

என்னங்க? படத்துல ரசிக்க ஒன்னுமில்லையா? என்று கேட்பவர்களுக்கு, யோகி பாபுவின் காமெடி, முதல் பாதி முழுக்க சிரிக்க வைக்கிறது. ஒருபக்கம் பேய் டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்க பேயையே கலாய்த்து யோகி பாபு தான் படம் பார்ப்பவர்களின் இறுக்கத்தைப் போக்குகிறார்.

பாதிரியார் ஜெபமாலையை வைத்துக் கொண்டு பேயிடம் நீட்ட, “என்ன இவரு டிவி இல்லாமலேயே ரிமோட்ட மாத்திக்கிட்டு இருக்காரு” என்று யோகிபாபு அடிக்கும் திடீர் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன.

என்றாலும், சிறுவனை யோகிபாபு நடத்தும் விதமும், நசுக்கிடுவேன், பொதச்சிடுவேன் என்று திட்டும் விதமும் சற்று நெருடலை ஏற்படுத்துகிறது.

ஜெய், அஞ்சலி ஜோடி கதாப்பாத்திரத்திற்கு நன்றாக பொருந்தியிருக்கிறது. குறிப்பாக ஜெய்யின் அண்ணன் மகனாக நடித்திருக்கும் சிறுவன் துறுதுறுவென்று நடித்திருக்கிறார்.

ஆர்.சரவணனின் ஒளிப்பதிவு ஊட்டியின் குளிர்ச்சியை கண்ணுக்குக் கொடுக்கிறது. யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தோடு பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

மற்றபடி, ‘பலூன்’ – பேய் வீட்டில் பலூனும் ஒப்பனையும் மட்டுமே புதுமை!

-ஃபீனிக்ஸ்தாசன்