Home கலை உலகம் மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்றார் புன்னகைப் பூ கீதா!

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்றார் புன்னகைப் பூ கீதா!

1993
0
SHARE
Ad
Geetha (2)
‘புன்னகைப்பூ’ கீதாவிற்கு மலேசிய சாதனையாளர் புத்தக நிறுவத்தின் பிரதிநிதி சான்றிதழை வழங்குகிறார். அவருடன் டத்தோஸ்ரீ ச.வேள்பாரி மற்றும் கீதாவின் பெற்றோர்.

கோலாலம்பூர் – பிரபல மலேசிய நடிகையும், டி.எச்.ஆர் ராகா வானொலியின் அறிவிப்பாளருமான புன்னகைப் பூ கீதா இயக்குநர் நாகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த “காவல்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார்.

இவருக்கு ‘இந்தியாவில் முன்னணி கதாநாயகியாக நடித்த மலேசியாவின் முதல் நடிகை” எனும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஓர் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு வெளியாகியிருந்த ‘ காவல்’ திரைப்படத்தில் தமிழ்த் திரைப்படவுலகில் நன்கு அறிமுகமான நடிகர் விமல் மற்றும் சமுத்திரகனி நடித்திருந்தார்கள். இவர்களுடன் மலேசியக் கலைஞர் கீதா கதாநாயகி வலம் வந்த இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திரையரங்களில் வெளியீடு கண்டது.

Geetha (1)“மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் எனக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் பெருமைக்கூரிய ஒன்று. இந்த அங்கீகாரம் வெறும் பதிவு மட்டுமல்ல. என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஆதரவுற்கும் ஊக்கத்திற்கும் சமர்ப்பணம். காவல் திரைப்படத்தில் கதாநாயகியாக என்னை அறிமுகப்படுத்தி வாய்ப்பு வழங்கிய இயக்குனர் நாகேந்திரனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம். இந்தக் கலையுலகில் பல சாதனைகளைப் படைத்து நடிப்புத் துறையில் ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்ச்சிப்படுத்துவதோடு தமிழ்த்திரைப்படங்களில் என்னுடைய பயணத்தைத் தொடர்வேன்” என கடந்த வியாழக்கிழமை செராஸ் மைடவுன் திரையரங்கில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பேசிய கீதா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்நிகழ்வில், மஇகா பொருளாளரும், தமிழ்நேசன் நாளிதழின் நிர்வாக இயக்குநருமான டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி பேசுகையில், “கீதா என்னுடைய சகோதரி. பல ஆண்டுகளாக அவரின் திறமைகளையும், வளர்ச்சியையும் பார்த்து மகிழ்ந்து வருகின்றேன். அவரது இந்தப் புதிய சாதனையைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். கீதா மேலும் பல வெற்றிகளையும், சாதனைகளையும் அடைய வேண்டுமென வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று வேள்பாரி தெரிவித்தார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஆவதற்கு முன்பு, புன்னகைப் பூ கீதா கடந்த 2000-ஆம் ஆண்டுகளில் தன்னுடைய கலைப் பயணத்தை உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளராக அறிமுகமானார்.

இவரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் அதிகமான வசூலை ஈட்டி 175 நாட்களுக்கு திரையரங்களில் வெற்றி நடைபோட்டது. மேலும், மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் ‘இந்தியாவில் தமிழ் திரைப்படத்தை தயாரித்த மலேசியாவின் முதல் தயாரிப்பாளர்’ எனும் அங்கீகாரமும் கீதாவுக்குக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, ‘குண்டக்க மண்டக்க’, ‘பட்டியல்’, ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’, ‘நர்த்தகி’ நாடகம் போன்றவற்றில் கீதா பணியாற்றியிருக்கிறார். கடந்த 2014-ஆம் ஆண்டில் மலேசியாவில் அதிக வசூலை ஈட்டிய மலேசியத் தமிழ் திரைப்படமான ‘மைந்தன்’ மூலம் கீதா கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இவருடைய நடிப்புத் திறனை அங்கீகரிக்கும் வகையில் 2015-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 8-வது எடிசன் விருது விழாவில் புன்னகைப்பூ கீதாவிற்கு ‘சிறந்த வெளிநாட்டு கலைஞர்’ விருது வழங்கப்பட்டது.

கீதா தற்போது குழந்தைகளை மையப்படுத்தி வெளிவரவிருக்கும் ‘சங்கு சக்கரம்’ எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மாரிசன் இயக்கத்தில் குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான கதையுடன் 2018 ஜனவரி 5 -ஆம் தேதி ‘சங்கு சக்கரம்’ மலேசிய திரையரங்குகளில் வெளியீடு காணவிருப்பது குறிப்பிடத்தக்கது.