Home வணிகம்/தொழில் நுட்பம் குறள் பாட் : தமிழில் விடைகூறும் ஓர் உரையாடல் இயலி!

குறள் பாட் : தமிழில் விடைகூறும் ஓர் உரையாடல் இயலி!

1100
0
SHARE
Ad

அண்மையில் கனடாவில் நடந்து முடிந்த தமிழ் இணைய மாநாட்டில் சிவா, செந்தில் என்னும் இரு இளம் கணிஞர்கள் ஓர் ஆய்வுக்கட்டுரையைப் படைத்தனர். முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் இவர்களுடைய கட்டுரை முதல் பரிசைப் பெற்றது.  தமிழில் உள்ள சங்க இலக்கியங்களை, நிரல்கள் வழியாக பொது மக்களுக்குப் பல்வேறு கோணங்களில் எடுத்துச் செல்வது பற்றியதே இந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரையில் எடுத்துக் காட்டாகக் கூறப்பட்ட ஒரு வசதிதான் “குறள் பாட்” என்னும் ஓர் இயலி. (இயலி = bot)

குறள் பாட்

செயற்கை நுண்ணறிவை நோக்கிய தொடக்க முயற்சியாக இந்தக் குறல் பாட் கருதப்படுகிறது.  “கற்களில் தமிழில் எழுதத் தொடங்கி, தாள்களில் தொடர்ந்து, அச்சுக்கு வந்து, புத்தகங்களாகி, இப்போது கணிணியில் தமிழை எழுதி வருகிறோம். இதற்கு அடுத்த கட்டம் செயற்கை நுண்ணறிவு” என்று கூறிய சிவாவும் செந்திலும், “தமிழை அடுத்த தலைமுறைக்குக் கடத்த கணிணியில் தமிழை எழுதுவதோடு மட்டுமல்லாமல் கணிணிக்கே தமிழைக் கற்று கொடுத்து விட்டால் தமிழ்க் கணிமை முயற்சிகள் மேலும் எளிமையாக்கப்படும்” என்றும் கருத்துரைத்தனர்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து அவர்கள் கருத்துரைக்கையில், “இக்கால இளைஞர்களிடம் சென்று திருக்குறளை நேரடியாக படிக்க சொல்ல முடியாது. அவர்களைக் கவரும் வண்ணம் கேலி கிண்டல்களுடன், மீம் வழி நகைச்சுவையாகச் சொன்னால் தமிழை எளிதாக கொண்டு சேர்க்க முடியும். இதைக் கருத்தில் கொண்டுதான் இந்தக் குறள் பாட் ஐ வடிவமைத்துள்ளோம்.” என்றனர்.

sellinam-kural pod-article
குறள் பாட் தொடர்பான விளக்கத்தைக் கூறும் சிவா. அமர்ந்திருப்பவர் செந்தில்.

குறள் பாட் ஒரு முகநூல் பக்கமாகும். இந்தப் பக்கத்திற்குச் சென்று குறள் எண்னைக் கொடுத்தால், குறளும் அதற்கான விளக்கமும், அதிகாரமும் விடையாக வரும். மேலும் அறம், பொருள் அல்லது இன்பம் என்று கூறினால் அந்தந்தப் பாலில் இருந்து குறட்பாக்களை இந்த இயலி எடுத்துக் கொடுக்கும்.

குறளோடு நின்று விடாமல், புத்தகங்களையும் இந்த இயலி பரிந்துரைக்கும். எடுத்துக்காட்டாக, “Book” என்று செய்தி அனுப்பினால், நாம் தேர்ந்தெடுக்க, நாவல், கவிதை போன்ற வகைகளை கேட்கும். பின் நாம் தேர்ந்தெடுக்கும் வகைக்கேற்ப ஏதேனும் ஒரு நூலைப் பரிந்துரைக்கும்.

மேலும் இது அடிப்படை செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) கொண்டுள்ளதால், நாம் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து தமிழில் பதிலளிக்கும். பெரும்பாலான பதில்கள் கேலிக் கிண்டலாகத் தான் இருக்கும். விளையாட்டாக, “you are bad” என்று சொல்லிப் பாருங்கள்; அல்லது சோதிக்கும் விதமாக 1331 ஆவது குறள் வேண்டும் என்று கேட்டுப் பாருங்களேன்!

“குறள் பாட்டிற்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது” என்று கூறிய சிவாவும் செந்திலும், “தற்போது 1000-க்கும் மேற்பட்ட முகநூல் பயனர்கள் இந்தப் பக்கத்தை விரும்பி உள்ளார்கள்” என்றும், “நாள்தோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த இயலிக்குச் செய்தி அனுப்பியும், தொடர்ந்து பேசியும் வருகிறார்கள்” என்றனர்.

இது தொடக்க முயற்சியே என்றாலும், ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுத்தப்பட்ட ஒரு வடிவமைப்பாகவே திகழ்கிறது. இந்த இயலி தன் நுண்ணறிவை வளர்க்க வேண்டுமென்றால், எந்த வகையான விவரங்களைப் பயனர்கள் கேட்கிறார்கள் என்று அலச வேண்டும். பயன்பாடு கூடக் கூட, அலசலின் ஆழம் கூடுவதற்கான வாய்ப்பும் கூடிக் கொண்டே இருக்கும்.

எனவே, நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், http://fb.com/kuralbot என்னும் பக்கத்திற்குச் சென்று, நமது விருப்பத்தைத் தெரிவித்து, அதனோடு உரையாடுவதே!

செய்யலாம் தானே?

நன்றி – செல்லினம்