Home நாடு 3 சட்டங்களின் அமுலாக்கத்தை எதிர்த்து அன்வார் வழக்கு

3 சட்டங்களின் அமுலாக்கத்தை எதிர்த்து அன்வார் வழக்கு

733
0
SHARE
Ad
anwar-ibrahim-fed-court-appeal-0ct-2016
அன்வார் இப்ராகிம் – கோப்புப் படம்

புத்ரா ஜெயா – தற்போதை சிறைவாசம் அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், 3 சட்டங்களின் அமுலாக்கத்தை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இந்த 3 சட்டங்களும் மலேசிய அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களுக்கு எதிரானதாக இருக்கின்றன என்ற காரணத்தால் வழக்கு தொடுப்பதாகவும் அன்வார் தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிம் 1983-க்கும் 1994-க்கும் இடையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மூன்று சட்டங்கள் நாட்டின் அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிரானது என கூட்டரசு நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் தனது வழக்கில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

2016-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய பாதுகாப்பு மன்ற சட்டம் மாமன்னரின் ஒப்புதல் இன்றி அமுலாக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும், அதனை இரத்து செய்யக் கோரியும் இதே வழக்கில் அன்வார் வாதங்களை முன்வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை (2 ஜனவரி 2018) கூட்டரசு நீதிமன்றத்தில் இந்த வழக்குக்கான ஆவணங்களை அன்வாரின் வழக்கறிஞர்கள் என்.சுரேந்திரன் மற்றும் லத்தீபா கோயா ஆகிய இருவரும் சமர்ப்பித்தனர். அப்போது அன்வாரின் துணைவியும், பிகேஆர் கட்சியின் தலைவியுமான டாக்டர் வான் அசிசாவும் மற்ற பிகேஆர் கட்சித் தலைவர்களும் உடனிருந்தனர்.

நாட்டின் அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிரான வழக்குகள், அரசியல் சாசன விதிகளின் அர்த்தத்தை விளக்கத் தொடுக்கப்படும் வழக்குகள் போன்றவை நேரடியாக கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் அன்வார் நேரடியாகத் தனது வழக்கை கூட்டரசு நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்.

1 ஆகஸ்ட் 2016 முதல் அமுலுக்கு வந்த தேசிய பாதுகாப்பு மன்ற சட்டம், மாமன்னரின் ஒப்புதல் இன்றி அமுலாக்கப்பட்டிருப்பதால், அந்த சட்டம் அரசியல் அமைப்பு சாசனத்திற்கு முரணானது என்றும் தெரிவித்துள்ள அன்வார், எல்லா சட்டங்களும் மாமன்னரின் ஒப்புதலோடுதான் அமுலுக்கு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த வகையில் மாமன்னர், 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வரையறுத்துள்ள அரசியல் சாசனத்திற்கு எதிராக 1994-இல் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசனச் சட்டத்திருத்தம் மாமன்னரின் ஒப்புதல் இல்லாவிட்டாலும் அந்தச் சட்டம் அமுலுக்கு வரலாம் எனக் குறிப்பிடுகிறது. எனவே இந்தச் சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்கக் கோரியும் அன்வார் தனது வழக்கின் வழி கோரிக்கை விடுத்திருக்கிறார்.