Home நாடு சாலே அபாஸ் நீக்கத்தில் மகாதீருக்கு தொடர்பில்லை – முன்னாள் தலைமை வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்

சாலே அபாஸ் நீக்கத்தில் மகாதீருக்கு தொடர்பில்லை – முன்னாள் தலைமை வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்

936
0
SHARE
Ad
abu talib othman-tan sri-former AG
டான்ஸ்ரீ அபு தாலிப் ஒத்மான் – முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் (கோப்புப் படம்)

கோலாலம்பூர் – “புனித குர் ஆன் மீது சத்தியம் இட்டுச் சொல்கிறேன். முன்னாள் தலைமை நீதிபதி துன் சாலே அபாசை நீக்க நான் உத்தரவிடவில்லை. பேரரசரும், முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபு தாலிப் ஒத்மானும் இணைந்துதான் அந்த முடிவை எடுத்தார்கள்” என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, அந்தக் கூற்றை, அபு தாலிப் ஒத்மானும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், மகாதீர் மீது நீண்ட காலமாக சுமத்தப்பட்டிருந்த முக்கிய அரசியல் களங்கம் நீங்கியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

tun-salleh-abas-former judge
துன் சாலே அபாஸ் – முன்னாள் தலைமை நீதிபதி (கோப்புப் படம்)

துன் சாலே அபாசின் நீக்கத்தைத் தொடர்ந்து 1988-இல் நாடு மிகப் பெரிய நீதித்துறை நெருக்கடியைச் சந்தித்தது. இன்றுவரை பலரும் மகாதீரை அந்த காலகட்ட சம்பவத்திற்குப் பொறுப்பாளராகக் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

“நான் ஏற்கனவே கூறியதைப் போன்று, சாலே அபாசை நீக்க மகாதீர் விரும்பவோ, அந்த முடிவை முன்னெடுக்கவோ இல்லை. அப்போதைய மாமன்னரின் முடிவைச் செயல்படுத்தவே மகாதீர் முனைந்தார். இதுதான் உண்மை. ஆனால், நான் மகாதீரைத் தற்காப்பதற்காக இதனைக் கூறவில்லை” என கோலாலம்பூரில் ஒரு பேட்டியில் அபு தாலிப் கூறியிருக்கிறார்.

“நான் கூறுவது உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. நான் அரசியல் விளையாடவில்லை. நடந்த உண்மைகளை மட்டுமே விளக்குகிறேன். மற்றவை எல்லாம் நடந்து முடிந்துபோன வரலாறு. அதனை மீண்டும் கிளறத் தேவையில்லை” என்றும் அபு தாலிப் தெரிவித்திருக்கிறார்.

துன் சாலே அபாஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காலகட்டத்தில் அபு தாலிப் அரசு தலைமை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.

MAHATHIR_MOHAMED - 1மகாதீர் தலைமைத்துவத்தில் அரசாங்கம் நீதித்துறைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனக் குற்றம் சுமத்தி, தலைமை நீதிபதியாக இருந்த துன் சாலே அபாசும், மற்ற நீதிபதிகளும், அப்போதைய மாமன்னராக இருந்த (அமரர்) ஜோகூர் சுல்தான் இஸ்கண்டாருக்கு நேரடியாக கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்தக் கடிதத்தைத் தொடர்ந்து சாலே அபாஸ் நீக்கப்பட வேண்டுமென மாமன்னர் முடிவெடுத்தார். ஆனால், நீதிபதியை நீக்க வேண்டுமென்றால் அதற்கென ஒரு விசாரணை ஆணையம் (டிரிபியூனல்) நிறுவப்பட வேண்டும். அந்த விசாரணை ஆணையத்தை பிரதமர் மூலமாகத்தான் அமைக்க முடியும். “எனவேதான், மகாதீரைப் பயன்படுத்தி விசாரணை ஆணையத்தை அமைத்தோம். மற்றபடி இதில் மகாதீருக்கு நேரடியான சம்பந்தம் இல்லை” என்றும் அபு தாலிப் விளக்கியிருந்தார்.

1988-இல் அமைக்கப்பட்ட அந்த விசாரணை ஆணையம் துன் சாலே அபாசையும் மேலும் 2 நீதிபதிகளையும் நீக்கும் முடிவை எடுத்தது.

அதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. விசாரணை ஆணையத்தை அமைத்தது அப்போதைய பிரதமர் மகாதீர் என்பதால் நீதிபதிகள் நீக்கத்தின் முழுப் பழியும் மகாதீர் மீது சுமத்தப்பட்டது.

அப்போதைய மாமன்னரான, ஜோகூர் சுல்தான் இஸ்கண்டாரும் தற்போது இல்லாத சூழ்நிலையில் இந்த உண்மைகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.