Home வணிகம்/தொழில் நுட்பம் பிறமொழிகளைத் தமிழில் காட்டும் காமிரா வழி மொழியாக்கம்!

பிறமொழிகளைத் தமிழில் காட்டும் காமிரா வழி மொழியாக்கம்!

1313
0
SHARE
Ad

காமிரா வழி மொழியாக்கம் செய்யும் வசதி, கூகுளின் மொழியாகச் செயலியில் சில காலமாகவே பல மொழிகளைக் கையாண்டு வருகின்றது. அறிவிப்புப் பலகைகளிலோ, விளம்பர அட்டைகளிலோ, நமக்குப் புரியாத மொழியில் உள்ள வரிகளைக் காமிரா முன் வைத்தாலே போதும். கூகுள் மொழியாகச் செயலி,  நமக்கு வேண்டிய மொழிகளில் அந்த வரிகளை மொழிபெயர்த்துக் கொடுக்கும்.

sellinam-google-xlate-cameraசீனா, ஜப்பான், கொரியா முதலிய நாடுகளுக்குச் செல்லும்போது பெரும்பாலான அறிவிப்புப் பலகைகள் அவரவர் மொழியில் தான் அமைந்திருக்கும். பெரிய ஊர்களுக்குச் சற்று அப்பால் சென்றாலே, ஆங்கிலத்தில் ஓர் எழுத்தைக் கூட நம்மால் காண முடியாது. ‘உள்ளே/வெளியே செல்லும் வழிகள்’, ‘ஆண்கள்/பெண்களுக்கான அறைகள்’ போன்ற விவரங்களை, எழுத்துகளின் பக்கத்தில் உள்ள படங்களை வைத்தே நாம் புரிந்து கொள்ள இயலும். படங்களே இல்லை என்றால் என்ன செய்வது? இங்குதான் நமக்கு காமிரா வழி மொழியாக்கம் செய்யும் வசதி உதவுகிறது.

காமிரா வழி மொழியாக்கம்

கூகுள் மொழியாக்கச் செயலி (Google Translate), ஐபோனிலும் ஆண்டிராய்டிலும் பல காலமாகவே இயங்கி வருகிறது. இந்தச் செயலியில், காமிரா வழி தோன்றும் படங்களில் உள்ள வரிகளைக் கண்டெடுத்து, அவற்றை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி இருந்து வந்துள்ளது. இந்த வசதியில் தமிழ் இல்லாதக் குறையை அண்மையில் கூகுள் நீக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

படங்களில் உள்ள எழுத்துகளை உடனுக்குடன் மொழியாக்கம் செய்ய வேண்டிய தேவை உள்ளதால், மொழியாக்க அகராதியை முன்கூட்டியே தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவேண்டிய தேவை உள்ளது. அதன்பின், மூல மொழியையும், விரும்பும் மொழியையும் தேர்வு செய்து, காமிராவை நாம் மொழிபெயர்க்க விரும்பும் எழுத்தின் மேல் காட்டினால் போதும். அந்தச் சொல் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு, இயன்றவரை அதே எழுத்தளவிலும், நிறத்திலும் காமிராவில் தோன்றும்.

ஏற்கனவே உள்ள படங்களை மொழிபெயர்த்தல்

காமிராவின் வழி நேரடியாக மொழிபெயர்ப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே எடுக்கப்பட்டப் படங்களையும் செயலிக்குள் செலுத்தி, அதில் உள்ள சொற்களையும் மொழிபெயர்கச் செய்யலாம்.  அவசரத்தில் இருக்கும் போது படங்களை மட்டும் எடுத்துவிட்டு, அதில் உள்ள செய்தியை பிறகு மொழிபெயர்த்துப் படிக்க, இந்த வசதி உதவியாக இருக்கும்.

மற்ற இந்திய மொழிகளில் இருந்து தமிழ் மொழியாக்கம்

ஆங்கிலம், சீனம் போன்ற மொழிகளில் உள்ள வரிகளைத் தமிழில் பெறும் வசதி மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனினும், இன்றைக்கு இருக்கும் செயலியின் பதிகையில் (version), மற்ற இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு, காமிரா வழி உடனுக்குடன் மொழிமாற்றம் செய்ய வாய்ப்பில்லை.

அதுபோலவே தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வாய்ப்பும், இப்போது உள்ள பதிகையில் இல்லை. பனுவல்களை உள்ளிட்டு (டைப் செய்து) மொழிமாற்றம் செய்யலாமே தவிர, படம் எடுத்து உடனுக்குடன் மாற்ற இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டும் போல் உள்ளது. இவை, வரவிருக்கும் பதிகைகளில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்ப்போம்.

-நன்றி: செல்லினம்