டெஹ்ரான் – எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்த அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈரானிய அரசாங்கம் முனைந்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் இதுவரை குறைந்தது 21 பேர் மரணமடைந்திருக்கின்றனர்.
ஈரானின் சிறப்பு அதிரடி பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காக நாடு முழுமையிலும் களமிறக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், அரசாங்கத்துக்கு ஆதரவான மக்களும் தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர்.
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்கத் தூண்டுதலால் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என ஈரான் குற்றம் சாட்டி வருகின்றது.
மக்களுக்கு எதிராக அடக்குமுறையை அரசாங்கம் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்திருக்கும் அமெரிக்கா, நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருவோம் என அறிவித்திருக்கிறது.
ஈரானுக்கு எதிராக வணிகத் தடைகளை அறிவிக்கவும் அமெரிக்கா ஆலோசித்து வருவதாகவும் அறிவித்திருக்கிறது.
2009-இல் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அடுத்து மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக நடந்து கொண்டிருக்கும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் ஈரானில் பார்க்கப்படுகிறது.