Home வணிகம்/தொழில் நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்டக் கணக்குகள் – தெலிகிராம் வழங்கும் புதிய வசதி!

ஒன்றுக்கு மேற்பட்டக் கணக்குகள் – தெலிகிராம் வழங்கும் புதிய வசதி!

1580
0
SHARE
Ad

telegram-logoதெலிகிராம், வாட்சாப் – செய்தி பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப் படும் மிகவும் புகழ் பெற்ற இரண்டு செயலிகள்.  எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்திச்  சேவைக்குப் போட்டியாக முதன்முதலில் அறிமுகம் கண்டது வாட்சாப். திறன்பேசிகளில் இயல்பாகக் கிடைக்கின்ற இணையத் தொடர்பைக் கொண்டு இலவசமாகவே செய்திகளை அனுப்பும் வாய்ப்பினை இந்த வாட்சாப் முதலில் வழங்கி வந்தது.

இதன் வெற்றியைக் கண்டு, இந்த வரிசையில் மேலும் பல செயலிகள் அறிமுகம் கண்டன.  வீச்செட், லையின், வைபர் போன்றவற்றைத் தொடர்ந்து, மெசெஞ்சரும், தெலிகிராமும் வெளிவந்தன.

ஐபோன் அறிமுகத்திற்கு முன் பயன்பாட்டில் முதலிடம் வகித்த பிளாக்குபெறி கருவிகளில், பி.பி.எம். என்னும் செய்திப் பரிமாற்றச் சேவை இருந்து வந்தது.  அந்த பி.பி.எம். சேவையும்  ஐபோனிலும் ஆண்டிராய்டு கருவிகளிலும் இயங்கும் செயலியாக மறுதோற்றம் கண்டது.

#TamilSchoolmychoice

அதிகமான பயனர்களை ஈர்க்கும் நோக்கிலும், இருக்கும் பயனர்களைத் தொடர்ந்து வைத்திருக்கும் நோக்கிலும், இந்தச் செயலிகளில் புதிய புதிய வசதிகள், தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், மிக அண்மைய மேம்பாடாக ஐ.ஓ.எசுக்கும் ஆண்டிராய்டுக்கும் புதிய பதிகைகளை வெளியாக்கியது தெலிகிராம்.

இரண்டிலும் இருவேரு வசதிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன.

ஆண்டிராய்டின் பதிகையில், ஒரு பயனர், ஒன்றுக்கும் மேற்பட்டக் கணக்குகளை வைத்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

sellinam-telegram-messanger-two-accountsமூன்று கணக்குகள் வரை ஒரு பயனர் சேர்த்து கொள்ளலாம். செய்திகளை எழுதும்போது விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு கணக்குக்கும் தனித்தனி தொலைபேசி எண்கள் தேவை. ஒவ்வொரு எண்ணையும் உறுதி படுத்திய பின்னரே கணக்கினை தெலிகிராம் சேர்த்துக் கொள்ளும். சேர்க்கப்பட்ட அனைத்துக் கணக்குகளுக்கும் வரும் செய்திகளை தெலிகிராம் பெற்றுக் கொள்ளும். ஒரு கணக்கிற்கு வரும் செய்திக்கு மற்றொரு கணக்கு வழி, தப்பித் தவறி பதிலளிக்க வாய்ப்பில்லை – இது வரவேற்கத்தக்கது!

இதற்குமுன் மாற்று வழிகளில் ஒன்றுக்கு மேற்பட்டக் கணக்குகளைச் சேர்க்கும் வாய்ப்பு இருந்து வந்தாலும், தெலிகிராமின் முழுமையான ஆசியைப் பெற்ற வழி என்றால், இப்போது அறிமுகம் காணும் இந்த வழி ஒன்றே!

ஐ.ஓ.எசுக்கான தெலிகிராம்

ஆண்டிராய்டுக்குக் கிடைத்த இந்த வசதி, ஐபோனுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஏற்கனவே ஆண்டிராய்டு பதிகையில் உள்ள அணி (தீம் – theme) மாற்றும் வசதி இப்போது ஐ.ஓ.எசிலும் சேர்க்கப்பட்டது. இதனைக் கொண்டு, நமது திறன்பேசியில் உள்ள தெலிகிராமை, விருப்பத்திற்கேற்றத் தோற்றத்திற்கு மாற்றிக் கொண்டு, கணக்குகளைச் சேர்க்கும் வசதி, விரைவில் வரும் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருக்கலாம் – அவ்வளவுதான்!

-நன்றி : செல்லினம்