Home கலை உலகம் மலேசியாவில் இரவு முழுவதும் ஒன்றாக ஊர் சுற்றிய ரஜினி, கமல்!

மலேசியாவில் இரவு முழுவதும் ஒன்றாக ஊர் சுற்றிய ரஜினி, கமல்!

1577
0
SHARE
Ad
Rajini Kamal
இடமிருந்து: மைஈவண்ட்ஸ் நிறுவனர் ஷாகுல், நடிகர் நாசர், மலேசிய சுற்றுலாத்துறையின் அனைத்துலக நிகழ்வுகளின் தலைவர் டோனி நாகமையா, கைகளில் ‘சயாங்மலேசியா’ என்ற பதாகைகளை ஏந்தியபடி சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் மற்றும் மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ சரவணன்.

கோலாலம்பூர் – தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மாபெரும் நட்சத்திர விழா, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை இரவு வரை சுமார் 12 மணி நேரங்கள் நடைபெற்று முடிந்தது. மலேசியாவில் இதுவரை இவ்வளவு நீண்ட நேரம் ஒரு நட்சத்திர நிகழ்ச்சி நடந்திருக்கவில்லை என்பதால் இந்நிகழ்ச்சி மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறவிருக்கிறது.

இதனிடையே, சனிக்கிழமை மாலை, நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த புக்கிட் ஜாலில் மைதானத்தில், ரஜினியும், கமலும் ஒன்றாக ஹெலிகாப்டரில் வந்திறங்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தனர்.

அந்த அரங்கமே அதிரும் அளவிற்கு ரசிகர்களின் உற்சாகக் குரல்களோடு ரஜினியும், கமலும் அரங்கிற்கு வந்தனர்.

#TamilSchoolmychoice

ரஜினி, கமல் இருவரிடமும் நடிகர் விவேக், தனித்தனியாக சில கேள்விகளை முன்வைத்தார். அதற்கு ரஜினியும், கமலும் பதிலளித்த விதம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

கமலிடம் அரசியல் பிரவேசம் குறித்து விவேக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த கமல், தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசியல் சூழல் தான் தன்னையும், ரஜினியையும் அரசியல் இறங்க வைத்திருப்பதாகப் பதிலளிதார்.

‘இனி மக்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல திறமையை’ என்று கமல் கூறியதற்கு அரங்கில் பலத்த கரகோஷங்கள் எழுந்தன.

Vivek 1
கமலிடம் கேள்வி எழுப்பும் நடிகர் விவேக். அருகில் நடிகை ரம்யாகிருஷ்ணன்

அடுத்தாக, சினிமாவில் இதுவரை நீங்கள் பேசிய வசனங்களில் மிகவும் பிடித்தது எது? என்று விவேக் கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த கமல், “நான் பேசியதை விட எழுதிய வசனம் ஒன்று மிகவும் பிடிக்கும். நடிகர் திலகம் தனது வாயால் அந்த வசனத்தைப் பேசினார். ‘போட்ட விதை எனது’ என்று கூறுவார். அது மறக்க முடியாது வசனம்” என்று தெரிவித்தார்.

ரஜினியிடம் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், சில கேள்விகளை முன்வைத்தார்.

1970-ல் இருந்து உங்களைப் பார்த்து வருகின்றேன். எப்படி இவ்வளவு புகழ் வந்த பின்னும், இன்னும் குணம் மாறாமல், எந்த ஒளிவு மறைவின்றி அப்படியே இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த ரஜினி, தான் எப்படி இருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை என்றார்.

அடுத்ததாக, முதல் காதல் அனுபவம் குறித்த கேள்வியை லதா எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ரஜினி, “எனக்கு ஹைஸ்கூல் படிக்கும் போது முதல் காதல் வந்தது. ஆனால் அந்தக் காதலில் நான் தோல்வியடைந்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.

அடுத்ததாக, ரஜினியிடம் விவேக் கேள்விகளை எழுப்பத் தொடங்கினார்.

உங்களிடம் இருந்த ஸ்டைலை கே.பாலச்சந்தர் சார் தான் வெளியே கொண்டுவந்தாரா? அல்லது ஸ்டைலைப் பார்த்து உங்களுக்கு வாய்ப்பளித்தாரா? என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த ரஜினி, “நான் பஸ் கண்டக்டராக இருந்த போது, தலைமுடி நிறைய இருக்கும். காதை மறைக்கும் அளவிற்கு இருந்த தலைமுடியை அவ்வப்போது கைகளால் கோதுவேன். அது பலரையும் கவர்ந்தது. மற்ற பஸ்களில் அரை மணி நேரத்தில் 40 டிக்கெட் விற்கிறார்கள் என்றால், நான் அதனை 10 நிமிடத்தில் விற்று விடுவேன். அந்த வேகத்தையும், நான் முடியைக் கோதும் விதத்தையும் பார்த்த கே.பாலச்சந்தர் சார், அதை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் படி அறிவுரை கூறினார்” என்று ரஜினி கூறினார்.

Vivek
ரஜினியுடன் நடிகர் விவேக். விவேக் கேள்வி கேட்கத் தொடங்கும் முன்பே கஷ்டமான கேள்வி கேட்டுவிடாதீர்கள் என ரஜினி கேட்டுக் கொண்டார்.

அடுத்ததாக, முதன் முதலாக மலேசியாவிற்கு வந்த அனுபவம் குறித்து விவேக் ரஜினியிடம் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த ரஜினி, “1977-ல் நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்பிற்காக முதன் முதலாக மலேசியாவிற்கு வந்தேன். அப்போது கமல் மிகப் பிரபலமான நடிகராக இருந்தார். நான் அந்த நேரத்தில் அவ்வளவு பெரிய நடிகனெல்லாம் கிடையாது. ஆனாலும், கமல் என்னை எல்லா இடங்களுக்கும் கூடவே அழைத்துச் செல்வார். அவருக்கென்று தனியாக கார் ஏற்பாடு செய்வார்கள். ரஜினி எங்கே என்று கேட்டு என்னையும் உடன் அழைத்துச் செல்வார். மாலையில் படப்பிடிப்பு முடிந்தவுடன் இருவரும் கிளம்பி இரவு முழுவதும் ஜாலியாக ஊர் சுற்றுவோம். காலையில் நான்கு மணிக்கு தான் அறைக்கு வந்து தூங்குவோம். கேபி சாருக்கு இந்த விசயம் தெரிந்தவுடன், “என்ன இந்தப் பசங்க இப்படி பண்றாங்க?” என்று கேட்டுவிட்டுச் சென்றுவிடுவார். அதை இப்போது நினைத்தாலும் இனிமையாக இருக்கிறது” என்றார்.

அடுத்ததாக, வாழ்வில் என்னவாக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்? என்று விவேக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த ரஜினி, “ஒரு நடிகனாக இருந்தேன். மக்களை மகிழ்ச்சிப்படுத்தினேன். நடிகனாகவே மறைந்துவிட்டேன் என்று எனது வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது” என்றார்.