Home நாடு தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (3) – கோல சிலாங்கூர்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (3) – கோல சிலாங்கூர்

1266
0
SHARE
Ad
Irmohizam -Bin Ibrahim- Kuala Selangor BN MP
கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் இர்மோஹிசாம் இப்ராகிம்

கோல சிலாங்கூர்!

சிலாங்கூர் மாநிலத்தின் கடற்கரையோர நகர். தற்போது எதிர்க்கட்சிகளின் கோட்டையாகவும், முன்னணி மாநிலமாகவும் திகழும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 22  நாடாளுமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி வென்ற 2013-இல் 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று.

ஆனால் அங்கு தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அம்னோவின் இர்மோஹிசாம் இப்ராகிம் வென்றதோ வெறும் 460 வாக்குகளில்!

Kuala Selangor-parliament results-2013
2013-இல் கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
#TamilSchoolmychoice

இந்த முறை சிலாங்கூர் மாநிலத்தையே மீண்டும் கைப்பற்றக் கங்கணம் கட்டிக் கொண்டு, வியூகம் வகுத்து வரும் தேசிய முன்னணி முதலில் கோல சிலாங்கூர் போன்ற சில தொகுதிகளில் வென்று வருவதற்கே பெரும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

வாக்காளர் விழுக்காடு

கடந்த பொதுத்தேர்தல் புள்ளிவிவரங்களின்படி கோலசிலாங்கூரில் சுமார் 62,298 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 64 விழுக்காடு மலாய்க்காரர்கள், இந்தியர்கள் 22 விழுக்காடு, சீனர்கள் 13 விழுக்காடு.

Kuala Selangor-P96இந்தத் தொகுதியின் மற்றொரு வித்தியாசம் என்னவென்றால் சீனர்களை விட அதிகமான இந்தியர்களை – அதிலும் இருமடங்கு அதிகமான இந்திய வாக்காளர்களைக் கொண்ட தொகுதி கோலசிலாங்கூர்.

எனவே, சுமார் 13,700-க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் இந்தியர்களின் வாக்குகள்தான் வெற்றியாளரை நிர்ணயிக்கும் என்பதையும் விளக்கத் தேவையில்லை.

மலாய் வாக்குகள் பெரும்பான்மையாக இருந்தாலும், மலாய்க்கார கட்சிகளின் இழுபறிப் போட்டியால் அந்த வாக்குகள் கடுமையாகப் பிளவுபடும்.

அதிலும் கடந்த முறை பாஸ் கட்சி இங்கே போட்டியிட்டது. எனவே இந்தமுறை இந்தத் தொகுதியில் அமானா, பிரிபூமி பெர்சாத்து, பிகேஆர் ஆகிய மூன்று கட்சிகளில் ஒன்று போட்டியிடக் கூடும்.

PAS-Logo-Sliderஎதிர்க்கட்சிக் கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் பாஸ், சிலாங்கூர் மாநிலத்தின் வட மாநிலங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருக்கிறது. எனவே மீண்டும் கோலசிலாங்கூர் மாநிலத்தில் பாஸ் போட்டியிட முன்வந்தால், அதன் காரணமாக பிரியப் போகும் மலாய் வாக்குகள் தேசிய முன்னணிக்கு சாதகமாக முடியுமா அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணிக்கே சாதகமாக முடியுமா என்பது தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் நம்மால் கணிக்க முடியும்.

கோல சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதிகள்

கோல சிலாங்கூர் தொகுதியில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகள் ஜெரம், புக்கிட் மெலாவாத்தி, இஜோக் ஆகியவை. இதில் புக்கிட் மெலாவாத்தி, ஆகிய இரு தொகுதிகள் தற்போது அம்னோ வசம் இருக்கின்றன.

இஜோக் மட்டும் பிகேஆர் வசம் இருக்கின்றது.

இந்த இஜோக் தொகுதிதான் மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டு கடந்த இரண்டு தேர்தல்களிலும் வரிசையாக அங்கு அந்தக் கட்சி தோல்வியைச் சந்தித்து வருகின்றது.

இந்த முறையும் இஜோக் மஇகாவுக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கேற்ப மஇகாவின் சார்பில் மஇகா மத்திய செயலவை உறுப்பினர் கே.பார்த்திபன் இங்கே ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு தனது பணிகளை தீவிரமாக ஆற்றி வருகிறார்.

parthiban-ijok
இஜோக் சட்டமன்றத்தின் தேசிய முன்னணி-மஇகா ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.பார்த்திபன்

2007-இல் அப்போதைய இஜோக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சிவலிங்கத்தின் மரணத்தின் விளைவாக நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பார்த்திபன், அடுத்த ஆண்டே – 2008-இல் இங்கே தோல்வியடைந்தார்.

2008 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு இஜோக் சட்டமன்றத்தைக் கைப்பற்றிய டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் அதன் பின்னர் சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி பெசாராகவும் பதவி வகித்தார்.

khalid ibrahim
டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம்

இஜோக் டான்ஸ்ரீ காலிட்டின் பூர்வீகப் பகுதி. எனவே, இங்கே அவருக்கு கணிசமான ஆதரவும் செல்வாக்கும் இன்னும் இருக்கக்கூடும். தற்போது தேசிய முன்னணிக்கு ஆதரவாக களம் கண்டிருக்கும் டான்ஸ்ரீ காலிட் தேசிய முன்னணி சார்பில் மஇகா வேட்பாளர் இங்கே மீண்டும் வெற்றியடைய உதவி புரியக் கூடும்.

தேசிய முன்னணிக்கு எதிரான அம்சங்கள்

கோலசிலாங்கூர் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள தேசிய முன்னணி சில சவால்களை எதிர்நோக்கும். அதில் முக்கியமானது சிலாங்கூரில் பிகேஆர் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருப்பதால், மாநில அரசுக்கு எதிராக தேர்தல் போராட்டம் என்பது கடுமையானதாக இருக்கும்.

மேலும் எதிர்க்கட்சி சார்பில் பிரபலமான வேட்பாளர் இங்கே நிறுத்தப்படலாம் என்ற ஆரூடமும் நிலவுகிறது.

பாஸ் கட்சி இங்கே போட்டியிட்டால் அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை இப்போதைக்கே கணிக்க முடியாது. நிச்சயம் பாஸ் கட்சி வெல்ல முடியாது என்றாலும், எத்தனை விழுக்காடு வாக்குகளை பாஸ் பிரிக்கப் போகிறது என்பதை வைத்தும், இந்தியர்களின் வாக்குகள் எத்தனை விழுக்காடு தேசிய முன்னணிக்கு ஆதரவாக விழும் என்பதை வைத்தும்தான் கோல சிலாங்கூரின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.

-இரா.முத்தரசன்   

தொடர்புடைய முந்தையக் கட்டுரைகள்:

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்