Home நாடு தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்

1683
0
SHARE
Ad

liow-tiong-laiகோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், 2013-இல் தேசிய முன்னணி வென்ற சில நாடாளுமன்றத் தொகுதிகள் இந்த முறை மீண்டும் வெல்ல முடியாத அளவுக்கு அபாய நிலைமையில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தேசிய முன்னணி தற்போது தற்காத்து வரும் இந்தத் தொகுதிகளை மீண்டும் வெற்றி கொள்ள முடியுமா என்பதையும், ஆபத்தான அந்தத் தொகுதிகள் எவை என்பதையும் இந்தக் கட்டுரைத் தொடரில் தொடர்ச்சியாகக் காண்போம்.

Logo-BNஇந்தத் தொகுதிகளில் கடந்த முறை தேசிய முன்னணி மிக சொற்ப வாக்குகள் பெரும்பான்மையில்தான் வெற்றி பெற முடிந்ததுதான், இந்தத் தொகுதிகள் இந்த முறை அபாய கட்டத்தில் இருப்பதற்கான முக்கியக் காரணம்.

#TamilSchoolmychoice

மலாய் வாக்குகள் நான்கு முனைகளில், அம்னோ, பெர்சாத்து, பிகேஆர், பாஸ் – என சிதறி இருப்பதால் வழக்கம்போல் தேசிய முன்னணிக்கு மலாய் வாக்குகள் இந்தத் தொகுதிகளில் அப்படியே சுளையாகக் கிடைக்க மீண்டும் வாய்ப்பில்லை என்பது மற்றொரு காரணம்.

தேசிய முன்னணிக்கு சாதகமாக இருக்கும் ஒரே அம்சம் பாஸ் கட்சியின் நிலைப்பாடு!

எதிர்க்கட்சிக் கூட்டணியில் இல்லாத பாஸ் கட்சி மூன்று முனைப் போட்டிகளால் எத்தனை வாக்குகளைப் பெற முடியும் என்பதை வைத்துத்தான், ஒவ்வொரு தொகுதியிலும் தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெற முடியுமா என்பதை நிர்ணயிக்க முடியும்.

இந்தியர்களின் வாக்குகள் நிர்ணயிக்கும்

தேசிய முன்னணி மீண்டும் வெல்வதற்கு அபாயகரமான நிலைமையில் உள்ள தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய வல்லமை இந்திய வாக்காளர்களிடத்தில் உண்டு என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம்.

எனவேதான், பிரதமர் நஜிப் இந்திய வாக்குகளைக் குறிவைத்து இந்திய சமுதாயத்திற்கு பயனளிக்கக்கூடிய பல திட்டங்களை முன்வைத்து வருகின்றார்.

நாம் சுட்டிக் காட்டப் போகும் தொகுதிகளில் எல்லாம் காணப்படும் ஓர் ஒற்றுமை இந்தத் தொகுதிகளில் எல்லாம் கணிசமான இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். இந்திய வாக்காளர்களில் பெரும்பான்மையினர் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்தால், தேசிய முன்னணி தக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்தத் தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் மிகச் சுலபமாக வென்று விடும் என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை!

பெந்தோங் தொகுதியைத் தற்காப்பாரா லியாவ்?

தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோற்கும் அபாயமுள்ள தொகுதிகளில் முதலாவதாக நாம் பார்க்கவிருப்பது பெந்தோங்.

பகாங் மாநிலத்தின் பெந்தோங் தொகுதி, சீனர்களை அதிகமாகக் கொண்ட – சிலாங்கூர் மாநிலத்தின் எல்லையை ஒட்டியிருக்கும் – தொகுதியாகும்.

நீண்ட காலமாக தேசிய முன்னணி சார்பில் மசீச வேட்பாளர்கள் இந்தத் தொகுதியில் வென்று வந்திருக்கிறார்கள்.2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியோங் லாய் பெந்தோங் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 379 வாக்குகள் வித்தியாசத்தில்தான், அவரை எதிர்த்து நின்ற ஜசெக வேட்பாளர் வோங் தாக் என்பவரை வென்றிருக்கிறார்.

bentong-parliament-2013-results
பெந்தோங் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

இதனால்தான் மீண்டும் இந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொள்வதில் தேசிய முன்னணி ஆபத்தை எதிர்நோக்குகிறது.

கடந்த தேர்தல் புள்ளி விவரங்களின்படி, சுமார் 62,000 வாக்குகள் கொண்ட இந்தத் தொகுதியில் சுமார் 6,000 பேர் இந்திய வாக்காளர்களாவர்.

45 விழுக்காடு மலாய்க்காரர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் சீனர்கள் 44 விழுக்காடும், இந்தியர்கள் சுமார் 9 விழுக்காடும் இருக்கின்றனர்.

MIC-Logoஇதே பெந்தோங் தொகுதியில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான சபாய் தொகுதியில்தான் மஇகாவும் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி கண்டது.

சுமார் 20 சதவீதம் இந்தியர்களைக் கொண்ட சபாய் தொகுதியில் ஜசெக வேட்பாளர் காமாட்சியிடம் 117 வாக்குகளில் மஇகா வேட்பாளர் டத்தோ குணசேகரன் தோல்வியடைந்தார்.

மேலும் சில சுவாரசியங்களை பெந்தோங் தொகுதி கொண்டிருக்கிறது. இந்தத் தொகுதியின் கீழ் வரும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் மூன்றில் – அதாவது பீலுட், கெத்தாரி, சபாய் ஆகிய மூன்று தொகுதிகளில் –  ஜசெகதான் வென்றிருக்கிறது.

ஒரே ஒரு தொகுதியில்தான் அம்னோ சார்பாகப் போட்டியிட்ட டத்தோஸ்ரீ அட்னான் யாக்கோப் – பகாங் மந்திரி பெசார் – வென்றிருக்கிறார், பாஸ் வேட்பாளரை எதிர்த்து! பெலாங்காய் என்ற தொகுதிதான் அது!

பகாங் மாநிலத்தில் நீண்ட காலமாக மந்திரி பெசாராக இருந்து வரும் அட்னான் யாக்கோப் மீண்டும் இங்கே நிறுத்தப்பட பிரதமர் முடிவெடுத்தால், அது பெந்தோங் தொகுதியில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளருக்கு சாதகமாக இருக்கலாம்.

எனவே, தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெற, ஆபத்தான நிலைமையில் இருக்கும் இந்த பெந்தோங் தொகுதியில் துணிந்து மீண்டும் லியாவ் களமிறங்குவாரா?

அல்லது தொகுதி மாறுவாரா?

அல்லது தேசிய முன்னணிக்கு ஆதரவாகத் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வாரா?

-இரா.முத்தரசன்