கோலாலம்பூர் – 2013-இல் தேசிய முன்னணி வென்ற நாடாளுமன்றத் தொகுதிகள் சிலவற்றில் இந்த முறை 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெல்வது மிகுந்த சிரமம் எனக் கருதப்படுகின்றது. அந்த வரிசையில் நாம் காணப் போவது பேராக் மாநிலத்தில் உள்ள தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதி.
முதலாவது கட்டுரையில் பெந்தோங் தொகுதியில் மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியோங் லாய் மீண்டும் வெல்வது எவ்வாறு கடினம் என்பதைக் கண்டோம். தேசிய முன்னணியின் மற்றொரு உறுப்பியக் கட்சியான கெராக்கானின் தலைவரான மா சியூ கியோங் தெலுக் இந்தானில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு எதிர்நோக்கப் போகும் சிரமங்களை இப்போது கண்ணோட்டமிடுவோம்.
தெலுக் இந்தான் – கடந்த காலத் தேர்தல்கள்
தெலுக் இந்தான் பாரம்பரியமாக கெராக்கான் கைவசமிருந்த தொகுதியாகும். நீண்ட காலமாக – 1986 முதல் – இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஓங் தின் கிம்.
மஇகாவிலிருந்து 1988-இல் விலக்கப்பட்ட டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் ஐபிஎப் கட்சியைத் தோற்றுவித்து, செமாங்காட் 46 கட்சியின் துங்கு ரசாலி ஹம்சாவுடன் இணைந்து தேர்தல் கூட்டணி கண்டு, 1990-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் களமிறங்கியபோது போட்டியிடத் தேர்ந்தெடுத்த தொகுதி தெலுக் இந்தான்.
ஆனால் சுமார் 2,111 வாக்குகள் வித்தியாசத்தில் பண்டிதன் 1990 பொதுத் தேர்தலில் தெலுக் இந்தானில் ஓங் திங் கிம்மிடம் தோல்வி கண்டார்.
1997-ஆம் ஆண்டில் ஓங் தின் கிம்மின் மரணம் அங்கு இடைத் தேர்தலுக்கு வழி வகுத்தது.
சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி என்பதால், வழக்கமாக சீன வேட்பாளரை நிறுத்தும் ஜசெக, இந்த முறை தனது வியூகத்தை மாற்றியது.
குலசேகரனைக் கொண்டு வந்த 1997 இடைத் தேர்தல்
39 வயதான வழக்கறிஞரும், அப்போது பேராக் மாநில ஜசெகவின் பொருளாளராக இருந்தவருமான எம்.குலசேகரனை 1997 இடைத் தேர்தல் வேட்பாளராக ஜசெக நிறுத்தியது.
அந்த கால கட்டத்தில், தெலுக் இந்தான் வட்டாரத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சித்திரா பௌர்ணமி விழாவில் ஏற்பட்ட சில அசௌகரியங்கள், விரும்பத்தகாத அரசு நடவடிக்கைகளால், இந்திய சமுதாயம் கொதிப்பு நிலையில் இருந்தது. அதனால்தான் இந்திய வேட்பாளரை ஜசெக களமிறக்கியது என்ற ஓர் அரசியல் காரணமும் கூறப்பட்டது.
குலசேகரன் 1997 இடைத் தேர்தலில் 2,916 வாக்குகள் பெரும்பான்மையில் தெலுக் இந்தானைக் கைப்பற்றினார். நீண்ட காலமாக, தேசிய முன்னணி கைவசம் இருந்த தொகுதியைக் கைப்பற்றிய காரணத்தால் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது.
எனினும் அடுத்து வந்த 1999 மற்றும் 2004 பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணி சார்பில் கெராக்கான் கட்சியின் மா சியூ கியோங் தெலுக் இந்தானில் வெற்றி பெற்றார். உள்ளூர்காரர் என்பதோடு, தெலுக் இந்தானில் மிகவும் செல்வாக்கான, பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது இவரது வெற்றிக்குப் பின்னணியில் இருந்த சாதகங்கள்.
2008 அரசியல் சுனாமியில் தெலுக் இந்தான் மீண்டும் ஜசெக பக்கம் சாய்ந்தது. இந்த முறை வென்றவர் வழக்கறிஞர் மனோகரன். அடுத்து வந்த 2013 பொதுத் தேர்தலில் மனோகரனுக்கு மீண்டும் இங்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல், கேமரன் மலைத் தொகுதியில் நிறுத்தப்பட்டார். அங்கு அப்போதைய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவிடம் தோல்வி கண்டார்.
2013 பொதுத் தேர்தலில் ஜசெகவின் சியா லியோங் பெங் 7,313 வாக்குகள் பெரும்பான்மையில் மா சியூ கியோங்கை தோற்கடித்து அந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்.
ஆனால், 2014-ஆம் ஆண்டில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சியா லியோங் பெங்கின் அகால மரணம் மற்றொரு இடைத் தேர்தலுக்கு வழிவகுத்தது.
இதற்கிடையில் மா சியூ கியோங் 2013 அக்டோபரில் கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவராகவும் உருவெடுத்திருந்தார். அந்தக் கூடுதல் பலத்தோடு மீண்டும் இடைத் தேர்தலில் களமிறங்கினார் மா சியூ கியோங்.
2014 தெலுக் இந்தான் இடைத் தேர்தலில் தனது அரசியல் வியூகத்தில் ஜசெக ஒரு மாபெரும் தவறைச் செய்தது. 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஓர் ஆண்டுக்கு முன்னர்தான் வென்ற தொகுதி என்ற அதீத நம்பிக்கையில் டயானா சோபியா என்ற இளம் மலாய் பெண்மணியைக் களமிறக்கியது.
ஆனால் சீன வாக்காளர்கள் இதனை இரசிக்கவில்லை. ஒரு சீனரைத் தோற்கடிக்க மலாய் வாக்காளரை முன்னிறுத்திய ஜசெகவின் வியூகம் சீன வாக்காளர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. டயானா சோபியா குடும்பத்தினரின் அம்னோ பின்னணியும் வெளிச்சத்துக்கு வர உள்ளூர் வாசியான மா சியூ கியோங்கை மீண்டும் தேர்ந்தெடுத்தனர் தெலுக் இந்தான் வாக்காளர்கள்.
238 வாக்குகள் வித்தியாசத்தில்தான் மா சியூ கியோங் வெற்றி பெற்றார் என்றாலும் தேசிய முன்னணிக்கு இது முக்கிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது. மா சியூ கியோங் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
2018-இல் நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் உள்ளூர்க்காரர், அமைச்சர், கெராக்கான் தேசியத் தலைவர் என்ற அந்தஸ்துகளோடு மீண்டும் மா சியூ கியோங் களமிறங்கப் போகிறார்.
மீண்டும் குலசேகரனா?
ஆனால், கடந்த சில நாட்களாக இங்கே மீண்டும் எம்.குலசேகரன் ஜசெக சார்பில் நிறுத்தப்படுவார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.
ஏறத்தாழ 20 விழுக்காடு – அதாவது சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட – இந்திய வாக்காளர்களைக் கொண்ட தொகுதி தெலுக் இந்தான். குலசேகரனுக்கு பரவலாக நாடு முழுமையிலும் இந்திய சமுதாயத்தில் இருக்கும் செல்வாக்கைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
இந்திரா காந்தி மத மாற்ற விவகாரத்தில் வழக்கை முன்னின்று நடத்தியது முதல் அதற்கான மத மாற்ற சட்டத் திருத்தத்துக்காக நாடாளுமன்றத்தில் நடத்திய விவாதங்களினாலும், இந்திய சமுதாயப் பிரச்சனைகளில் முன்னின்று குரல் கொடுப்பதாலும் இந்தியர்களிடையே மிகுந்த செல்வாக்கு மிக்கவராகத் திகழ்பவர் குலசேகரன். அத்துடன் ஏற்கனவே 1997 இடைத் தேர்தல் மூலம் தெலுக் இந்தான் வாக்காளர்களுக்கு அறிமுகமானவர்.
குலசேகரனை நிறுத்தினால், தெலுக் இந்தான் இந்தியர்கள் குலசேகரனுக்கே வாக்களிப்பர் – சீனர்களின் பாரம்பரிய ஜசெக வாக்குகளும் சேர்ந்து கொள்ள – அதனால் 238 வாக்குகளில் மட்டுமே 2014 இடைத் தேர்தலில் வென்ற மா சியூ கியோங்கைத் தோற்கடிக்க முடியும் என்பது ஜசெகவின் வியூகமாக பார்க்கப்படுகிறது.
இந்த வியூகம் மிகச் சரியானதாக இருப்பதால், கெராக்கான் தலைவர் மா சியூ கியோங் தெலுக் இந்தான் தேர்தலில் தலை தப்பிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொருத்தமான வேட்பாளர்களை அடையாளம் கண்டு நிறுத்தி சரியான வியூகம் வகுத்து, பெந்தோங் தொகுதியில் மசீச தலைவர் லியாவ்வையும், தெலுக் இந்தானில் கெராக்கான் கட்சித் தலைவர் மா சியூ கியோங்கையும் ஜசெக தோற்கடித்தால், தேசிய முன்னணியின் இரண்டு முன்னணி சீனர் கட்சித் தலைவர்களைத் தோற்கடித்த சாதனையை ஜசெக நிகழ்த்தும். எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு கூடுதலாக இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் பெற்றுத் தரும்.
நாம் அடிக்கடி வலியுறுத்துவதுபோல் பாஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை வைத்துத்தான் மலாய் வாக்குகள் தெலுக் இந்தான் தொகுதியில் எவ்வாறு சிதறும் என்பதை இறுதியில் கணிக்க முடியும்.
சுமார் 38 விழுக்காடு – அதாவது ஏறத்தாழ 24,000 மலாய் வாக்காளர்களை தெலுக் இந்தான் நாடாளுமன்றம் கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.