Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘தானா சேர்ந்த கூட்டம்’ – விக்னேஷ் சிவன் பாணியில் ஒரு பொழுது போக்குப் படம்!

திரைவிமர்சனம்: ‘தானா சேர்ந்த கூட்டம்’ – விக்னேஷ் சிவன் பாணியில் ஒரு பொழுது போக்குப் படம்!

1604
0
SHARE
Ad

TSK2கோலாலம்பூர் – அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏழைகளின் பணத்தைச் சுரண்டி அவர்களை நசுக்கும் போது, அதிகாரத்தில் இருப்பவர்களைச் சுரண்ட ஒருவன் வருவான் என்பதை சூர்யாவை வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது பாணியில் கதை சொல்லியிருக்கிறார்.

சிபிஐ அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்யும் தம்பிராமையா, தனது மகன் சூர்யா அதே அலுவலகத்தில் உயர் அதிகாரியாக வேண்டும் என ஆசைப்படுகின்றார்.

அதற்கான முயற்சிகளை சூர்யா எடுத்தாலும் கூட, அலுவலக உதவியாளரின் மகன் அதிகாரியாவதா? என சிபிஐ அதிகாரி சுரேஷ் மேனனால் நிராகரிக்கப்படுகின்றார்.

#TamilSchoolmychoice

இது ஒருபுறம் இருக்க, சூர்யாவின் நண்பன் கலைச்செல்வன் போலீசாக வேண்டும் என்ற ஆசையொடு இருக்கிறார். ஆனால் பணம் கொடுத்தால் தான் போலீஸ் வேலை கிடைக்கும் என்ற நிலையில், அவரும் விரக்தியடைகின்றார்.

இப்படி, அரசாங்கத்தில் அமைச்சர் முதல் சிபிஐ அலுவலகம் வரை எல்லாவற்றிலும் ஊழலும், அதிகாரமும் தலைவிரித்தாட சூர்யா எடுக்கும் முடிவு என்ன? என்பதே பிற்பாதி சுவாரசியம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவை மிக எளிமையான கதாப்பாத்திரத்தில் காண முடிகின்றது. ‘சொடக்கு மேல சொடக்கு’ பாடலுக்கு வீதியில் இறங்கி அசரவைக்கும் ஆட்டம் போட்டிருக்கிறார்.

TSKரம்யாகிருஷ்ணன், செந்தில், தம்பி இராமையா, நந்தா, ஆர்.ஜே.பாலாஜி, சத்யன், சிவசங்கர் என ஒரு பெரிய கூட்டத்தோடு சூர்யா படம் முழுவதும் ஹீரோயிசம் செய்திருக்கிறார். இத்தனை பேருக்கு இடம் கொடுத்து நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விசயம்.

என்றாலும், தனது நடிப்பால், உடல்மொழியால், முகபாவனைகளால் சூர்யா தனது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார்.

விக்னேஸ் சிவன் ஏன் இந்தப் படத்தில் நயன்தாராவிற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை? என்ற கேள்விக்கான பதில் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரத்தைப் பார்த்த பிறகு தெரிந்தது. சூரியாவுடன் இரண்டு பாடல் காட்சிகள், சில காதல் காட்சிகளில் வந்து போகிறார். ஆனால் காதல்? எங்கே எனத் தேட வேண்டியிருக்கிறது.

திரைக்கதையைப் பொறுத்தவரையில், மிக அழுத்தமாகச் சொல்ல வேண்டிய லஞ்சம், ஊழல், கறுப்புப் பண விவகாரத்தை, மிக எதார்த்தமான வசனங்களாலும், காட்சிகளாலும் விளக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

என்றாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் பிரச்சினைகள் இன்றளவிலும் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில், அதை ஏன் 80-களில் நடப்பது போல் காட்ட வேண்டும்? என்ற கேள்வி எழுகின்றது.

thaana-serndha-koottamசரி.. ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமாக கதை சொல்ல வேண்டும் என்று எண்ணி 80-களில் நடப்பது போல் காட்டுவதாக இருந்தாலும் கூட, நடிகர், நடிகைகளின் தோற்றமும், வசன உச்சரிப்பும், படத்தின் வண்ணமும் பெரிய வித்தியாசத்தைக் காட்டாமல் இருப்பதால், கதை நடக்கும் சூழலுக்குள் சென்று, அந்த மனநிலைக்கு மாற முடியாமல் போகிறது.

படத்தில் வரும் சிபிஐ ரெய்டு காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. காரணம், அதேபோல் எத்தனையோ படங்களில் பார்த்துவிட்டோம். அதில் இன்னும் கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயற்சி செய்திருக்கலாம்.

கிளைமாக்ஸ் காட்சி மட்டும், இப்படத்தின் நோக்கத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது.

தினேஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், கலை இயக்குநரின் கைவண்ணமும் படத்தை வண்ணமயமாகக் காட்டியிருக்கின்றன. ஆனால் படம் 80-ம் ஆண்டில் நடக்கிறது என்ற மனநிலைக்குள் செல்ல முடியவில்லை.

அனிருத் இசை படத்திற்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது. பின்னணி இசையும்,பாடல்களும் ரசிகர்களைத் துள்ளிக் குதிக்க வைக்கின்றது.

மொத்தத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ – விக்னேஷ் சிவன் பாணியில் ஒரு பொழுதுபோக்குப் படம்!