Home நாடு தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (6) – பாகோ!

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (6) – பாகோ!

1471
0
SHARE
Ad
Muhyiddin-Yassin-PPBM
டான்ஸ்ரீ மொகிதின் யாசின் – பாகோ நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர்

(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது – மாறியுள்ள அரசியல் சூழல் -ஆகியவற்றால் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி பெரும் சவாலை எதிர்நோக்கப் போகும் தொகுதிகளின் வரிசையைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

கடந்த 2013 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 12,842 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி ஜோகூர் மாநிலத்தில் மூவார் சுற்று வட்டாரத்தை உள்ளடக்கிய பாகோ நாடாளுமன்றத் தொகுதி!

அப்படியானால், அத்தனை பெரும்பான்மை வாக்குகளில் வென்ற தொகுதியை எந்த தைரியத்தில் இந்த முறை தேசிய முன்னணி இழக்கும் அபாயம் இருக்கிறது எனக் கூற வருகிறாய் என நீங்கள் கேட்பது என் காதுகளில் கேட்கிறது.

மொகிதின் யாசினின் தொகுதி

#TamilSchoolmychoice

கடந்த முறை இந்தத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பாகப் போட்டியிட்டு வென்றவர் அப்போதைய துணைப் பிரதமரும், அம்னோ துணைத் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின்.

MUHYIDDIN YASSINஅதுதான் தேசிய முன்னணிக்கு தற்போது இருக்கும்  பிரச்சனை!

இன்றைக்கோ, பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவராக இருக்கும் மொகிதின் யாசின் மீது அனுதாப அலைகள் இந்தத் தொகுதி முழுவதும் பரவிக் கிடக்கின்றன. நஜிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த காரணத்தால், அம்னோவிலிருந்து விலக்கப்பட்டு, தனது துணைப் பிரதமர், அமைச்சர் பதவியையும் இழந்தவர் மொகிதின். அதனால்தான் இந்த அனுதாப அலை.

போதாக் குறைக்கு மகாதீரின் ஆதரவும், பெர்சாத்து கட்சியின் தேசியத் தலைவர் என்ற பலமும் மொகிதினுக்கு கொஞ்சம் கூடுதலாகச் சேர்ந்து கொண்டுள்ளது.

மொகிதினுக்குக் கிடைக்கப் போகும் பிகேஆர், ஜசெக போன்ற பக்காத்தான் கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் சேர்த்துக் கொண்டால், இந்த முறை தேசிய முன்னணி இந்தத் தொகுதியை மீண்டும் வெல்வது கடினம் என்பதால், மொகிதின் இந்தத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவார் என பரவலாகக் கணிக்கப்படுகிறது.

சீன வாக்காளர்களின் ஆதரவு கூடுதல்  பலம்

குறிப்பாக இந்தத் தொகுதியில் உள்ள 31 விழுக்காடு சீன வாக்காளர்களில் பெரும்பான்மையோர் இந்த முறை ஜசெகவின் பிரச்சார ஒத்துழைப்போடு, மொகிதினுக்கே வாக்களிப்பர் என்றும் கணிக்கப்படுகிறது.

மலாய் வாக்காளர்கள் 64 விழுக்காடு இருக்கும் நிலையில் இந்திய வாக்காளர்கள் 4 சதவீதமே இருக்கின்றனர் என்பதால் இந்திய வாக்குகள் சொற்பமாக இருந்தாலும், எந்தப் பக்கம் போகும் என்பதை வைத்தும் இந்தத் தொகுதியின் வெற்றி தோல்வியும் நிர்ணயிக்கப்படும்.

நீண்ட காலமாக இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற காரணத்தால் மொதினுக்கு உள்ளூர் இந்தியர்களிடையே கணிசமான செல்வாக்கு இருக்கிறது. அதுவும் அவருக்கு சாதகமான வாக்குகளாக மாறக் கூடும்.

மொகிதினை வீழ்த்தக் கூடிய செல்வாக்கும் ஆளுமையும் கொண்ட அம்னோ வேட்பாளரை இன்னும் தேசிய முன்னணி அடையாளம் காணவில்லை என்பது தேசிய முன்னணிக்கு இருக்கக் கூடிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

பாஸ் மீண்டும் போட்டியிடுமா?

PAS-Logo-Sliderகடந்த முறை இங்கே மொகிதினை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் கட்சி 13,432 வாக்குகளைப் பெற்றது. இந்த முறை மீண்டும் இங்கே போட்டியிடுமா?

அப்படியே போட்டியிட்டால் எத்தனை விழுக்காடு வாக்குகளை அதனால் பிரிக்க முடியும்?

அவ்வாறு பிரிப்பது தேசிய முன்னணிக்கு சாதகமா? அல்லது மொகிதினுக்கே சாதகமாக அமையுமா

-என்பது போன்ற கேள்விகளின் விடைகளைப் பொறுத்துதான், இந்தத் தொகுதியில் இறுதியில் வெல்லப் போவது யார் என்பதை ஓரளவுக்குக் கணிக்க முடியும்.

மேலும் ஜோகூர் மாநிலத்தை இந்த முறை கைப்பற்றினால் பக்காத்தான் கூட்டணியின் சார்பாக மொகிதின் ஜோகூர் மாநில மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுவதால், மொகிதின் ஆதரவாளர்கள் மொகிதினுக்கு உற்சாக வரவேற்பு தந்து அவருக்கு வெற்றி வாய்ப்பைத் தருவார்கள் என நம்பலாம்.

1986 முதல் 1995 வரை ஜோகூர் மாநில மந்திரி பெசாராக பணியாற்றிய அனுபவமும் மொகிதினுக்கு உண்டு.

மொகிதினின் உள்ளூர் பலம்

pakatan-harapan-johor-29092017பொதுவாக அம்னோ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கும் தொகுதி அவர்களின் பூர்வீக கிராமத்தை உள்ளடக்கியிருக்கும் என்பதால் அவர்களின் உறவினர்கள் நிறையப் பேர் அந்தக் குறிப்பிட்ட தொகுதியில் அந்த வேட்பாளருக்கு ஆதரவாக இருப்பார்கள். சில தவணைகள் அதே தொகுதியில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தால் அங்கே தங்களுக்கென மிகப் பெரிய ஆதரவாளர் பலத்தையும், அரசியல் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்வார்கள்.

மொகிதின் யாசினோ மூவார் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர். 1978 முதல் 1986 வரை இந்தத் தொகுதியைத் தற்காத்து வந்தவர், பின்னர் 1986 முதல் 1995 வரை ஜோகூர் மாநில மந்திரி பெசாராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1995 முதல் மீண்டும் இதே பாகோ தொகுதியில் போட்டியிட்டு வென்று வந்திருக்கிறார்.

எனவே, மொகிதினின் கடந்த கால அரசியல் பின்னணியைக் கொண்டு பார்க்கும்போது இங்கே அவருக்கு மிகப் பெரிய ஆதரவு பலம் இருக்கும் – அதுவே அவருக்கு வெற்றியையும் தேடித் தரும் – என நம்பலாம்.

-இரா. முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகளின் இணைப்புகள்:

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (3) – கோல சிலாங்கூர்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (4) : லாபிஸ்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா