Home நாடு தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா

1347
0
SHARE
Ad
Johari_Abdul_Ghani_MP-titiwangsa
ஜொஹாரி அப்துல் கனி

(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது – மாறியுள்ள அரசியல் சூழல் ஆகியவற்றால் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி பெரும் சவாலை எதிர்நோக்கப் போகும் தொகுதிகளின் வரிசையைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

மலேசியாவின் மலாய் கலாச்சார – அரசியல் மையமாக கோலாலம்பூரில் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் திகழ்ந்து வரும் வரலாற்றுபூர்வ வட்டாரம் கம்போங் பாரு. மலாய் அரசியலின் பல முக்கிய சம்பவங்கள் இங்கேதான் தொடங்கியிருக்கின்றன – நடைபெற்றிருக்கின்றன.

அந்தப் பகுதியை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதிதான் தித்திவாங்சா! கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தின் 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று. கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் தேசிய முன்னணி கொண்டிருப்பது இரண்டே தொகுதிகள்தான் – ஒன்று தித்திவாங்சா மற்றொன்று செத்தியாவாங்சா!

ஜொஹாரி மீண்டும் வெல்ல முடியுமா?

#TamilSchoolmychoice

தற்போது இரண்டாவது நிதி அமைச்சராகப் பதவி வகிக்கும் ஜொஹாரி அப்துல் கனி கடந்த 2013 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் பாஸ் கட்சியின் அகமட் சாம்ரி பின் ஆசாத் குசாமியை 866 வாக்குகளில் வெற்றி கொண்ட தொகுதி இது.

titiwangsa-parliament-2013 results-இதுவரை நாம் பார்த்த தேசிய முன்னணிக்கு அபாயகரமான 4 தொகுதிகளான பெந்தோங், தெலுக் இந்தான், கோலசிலாங்கூர், லாபிஸ் ஆகிய நான்கு தொகுதிகளில் 500 வாக்குகளைவிட குறைந்த பெரும்பான்மையில்தான் தேசிய முன்னணி 2013 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆனால், இப்போது நாம் கண்ணோட்டமிடப் போகும் தித்திவாங்சா தொகுதியை 866 வாக்குகளில்தான் – தேசிய முன்னணி வெற்றி கொண்டது.

இந்த முறை தித்திவாங்சா தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி சார்பில் போட்டியிடப் போவது பிரிபூமி பெர்சாத்து கட்சி. முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொகுதியில் நிச்சயம் ஒரு வலுவான வேட்பாளரை அக்கட்சி நிறுத்தும் என நம்பலாம்.

பாஸ் தனித்துப் போட்டியிடுமா?

PAS-Logo-Slider2013 பொதுத் தேர்தல் புள்ளிவிவரங்களின்படி 68 சதவீதம் மலாய் வாக்குகளையும் 20 சதவீதம் சீன வாக்குகளையும், 10 சதவீதம் இந்திய வாக்குகளையும் கொண்டிருக்கும் தித்திவாங்சாவில் மீண்டும் பாஸ் கட்சி போட்டியிடும் என்றும் கருதப்படுகிறது. அந்தக் கட்சிக்கு இங்கே கணிசமான அளவில் செல்வாக்கு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் 2008, 2013 பொதுத் தேர்தல்களில் பக்காத்தான் பாஸ் கட்சிக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கியது.

2008-இல் தித்திவாங்சா தொகுதியை வெற்றி கொண்ட பாஸ் 2013-இல் பறிகொடுத்தது.

எனவே, இங்கே மீண்டும் பாஸ் கட்சி போட்டியிட்டால், சிதறப் போகும் மலாய் வாக்குகளால் சாதகம் தேசிய முன்னணிக்கா அல்லது பக்காத்தானுக்கா என்பது தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் கணிக்க முடியும்.

பாஸ் கட்சியால் வாக்குகள் பிரியுமா?

BN Logoபொதுவாக பாஸ் தனித்துப் போட்டியிடப் போவதால் மலாய் வாக்குகள் பிரியும் – அதனால் தேசிய முன்னணியே வெற்றி பெறும் என்றுதான் தேசிய முன்னணி சார்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் உற்று ஆராய்ந்தால், இந்த நிலைமை தொகுதிக்கு தொகுதி மாறுபடும். பாஸ் கட்சி பல நாடாளுமன்றத் தொகுதிகளில் கடந்த முறை வென்றதற்கான காரணம், தேசிய முன்னணிக்கு எதிராக ஒருமித்து ஒரே வேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்தியதுதான்! அதோடு, சீன, இந்திய வாக்காளர்களும் பாஸ் கட்சிக்கு வாக்களித்தனர்.

ஆனால் இந்த முறை பாஸ் கட்சிக்கு இந்திய சீன வாக்காளர்களின் வாக்கு கொஞ்சம் கூட கிடைக்காது. பாஸ் கட்சிக்கு கிடைக்கப் போவது அதன் பாரம்பரிய சொற்ப வாக்குகளாக இருக்கும் – அல்லது அதன் பிரபலமான தலைவர் யாராவது நின்றால் அவர்களின் செல்வாக்குக்குக் கிடைக்கக் கூடிய ஆதரவு வாக்குகளாக இருக்கும். இதனால் எதிர்க்கட்சிகள் பாஸ் போட்டியிடும் இடங்களில் தோல்வியைச் சந்திக்கும் என்பது எல்லாத் தொகுதிகளுக்கும் பொருந்தாது.

Ahmad-Zamri-Asaad-Khuzaimi-parti-amanah-negara
2013-இல் தித்திவாங்சா தொகுதியில் பாஸ் சார்பாகப் போட்டியிட்டு 866 வாக்குகளில் தோல்வியுற்ற அகமட் சாம்ரி பின் ஆசாத் குசாமி இந்த முறை அமானா கட்சியில் இணைந்துள்ளார். ஆனால் தித்திவாங்சா தொகுதியை பிரிபூமி பெர்சாத்து கட்சிக்கு பக்காத்தான் ஒதுக்கியுள்ளது.

உதாரணமாக தித்திவாங்சா தொகுதியையே எடுத்துக் கொள்வோம். 2013 தேர்தலில் இங்கு போட்டியிட்ட அகமட் சாம்ரி தற்போது அமானா கட்சியில் இணைந்து விட்டார்.

எனவே, பாஸ் கட்சி தனது பாரம்பரிய வாக்குகளை மட்டுமே பிரிக்க முடியும். ஆனால், தித்திவாங்சாவின் 20 சதவீத சீன வாக்காளர்களும், 10 சதவீத இந்திய வாக்காளர்களும் நகர்ப்புறத்தினராக இருப்பதால் நிச்சயம் இவர்களின் கணிசமானோர் பக்காத்தான் கூட்டணிக்குத்தான் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

pakatan harapan-logoஎனவே, மலாய் வாக்குகளை பாஸ் கட்சி போட்டியிட்டு பிரித்துக் கொண்டால் – சீன, இந்திய வாக்காளர்களில் பெரும்பான்மையோர் பக்காத்தானுக்கு வாக்களித்தால் – அதன் மூலம் முடிவுகள் பக்காத்தானுக்கே சாதகமாக முடியும்.

தித்திவாங்சா தொகுதியில் கம்போங் பாண்டான் இந்தியர் குடியிருப்பு பகுதி மேம்பாடு செய்யப்பட்டதில் இந்த வட்டார இந்தியர்களுக்கு கடும் அதிருப்தி இருப்பதாகவும் கருதப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்பு வாக்குகளும் பக்காத்தானுக்கே சென்று சேரும். தேசிய முன்னணிக்குப் பாதிப்பாகப் பார்க்கப்படும் அம்சங்களில் இதுவும் ஒன்று.

இருப்பினும் இந்தத் தொகுதியை ‘நிதி அமைச்சராகவும்’ இருக்கும் ஜொஹாரி நல்ல முறையில் ‘பராமரித்து வருகிறார்’ என்பதால் சொற்ப வாக்குகளிலாவது அவர் மீண்டும் வெல்லலாம் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகளின் இணைப்புகள்:

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (3) – கோல சிலாங்கூர்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (4) : லாபிஸ்