Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘ஸ்கெட்ச்’ – சீயானுக்குப் போட்ட ‘ஸ்கெட்சை’ கொஞ்சம் திரைக்கதையிலும் போட்டிருக்கலாம்!

திரைவிமர்சனம்: ‘ஸ்கெட்ச்’ – சீயானுக்குப் போட்ட ‘ஸ்கெட்சை’ கொஞ்சம் திரைக்கதையிலும் போட்டிருக்கலாம்!

1345
0
SHARE
Ad

Sketchகோலாலம்பூர் – ‘கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவு’ இந்த ஒரு வரி தான் விஜய் சந்தர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்திருக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் கதைக்கரு.

ஆனால் அந்த சாவு எந்த ரூபத்தில் அவனுக்கு வருகின்றது என்பதை மட்டும் கிளைமாக்ஸ் காட்சியில் திடீர் திருப்பம் ஒன்றை வைத்து ஏதோ ஒருவகையில், திருப்தியோடு ரசிகர்களை திரையரங்கை விட்டு அனுப்பி வைக்கிறார் இயக்குநர் விஜய் சந்தர்.

மற்றபடி, படம் தொடங்கியதிலிருந்து கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரை, பழைய படங்களின் அதே கூலிப்படைகள், பழிவாங்கல் ஃபார்முலா தான்.

#TamilSchoolmychoice

Sketch1சேட்டு ஹரீஸ் பேராடியிடம் பணம் வாங்கிவிட்டு திருப்பிக் கட்டாதவர்களின், வாகனங்களையெல்லாம் பறிமுதல் செய்யும் அடிதடி தொழிலில் கைதேர்ந்தவராக இருக்கிறார் சீயான் விக்ரம் (ஸ்கெட்ச்).

“ஸ்கெட்ச்.. ஒரு ஸ்கெட்ச போட்டா அது மிஸ் ஆகவே ஆகாது” என்று ஆணித்தரமாக சொல்லும் அளவிற்கு அந்த வேலையில் கில்லியாக இருக்கிறார் ஸ்கெட்ச்.

இதனால், சேட்டுக்கு நெருக்கமான இன்னொரு நபரான ஆர்.கே.சுரேசின் பொறாமையையும் சம்பாதிக்கிறார் ஸ்கெட்ச்.

இப்படியிருக்க, அதே ஊரில் இன்னொரு மிகப் பெரிய தாதா ராயபுரம் குமாரு. அவன் வைத்திருக்கும் காரை ஸ்கெட்ச் தூக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளும் ஸ்கெட்ச் அந்தக் காரை கடத்திவிடுகிறார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஸ்கெட்சுடன் இருக்கும் ஸ்ரீமன், கபாலி விஸ்வநாத் உள்ளிட்ட நண்பர்கள் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுகின்றனர்.

இவர்களின் கொலைகளுக்குக் காரணம் யார்? என்பதை ஸ்கெட்ச் கண்டறிவதே படத்தின் சுவாரசியம்.

இந்தப் படத்தின் பலமே சீயான் விக்ரம் தான். ‘ஜெமினி’, ‘பீமா’வில் பார்த்த சீயானை மீண்டும் பார்க்க முடிகின்றது.

வெட்டாத தலைமுடியும், தாடியுமாக இருந்தாலும் ‘ப்பா.. சீயான் அழகுடா’ என்று சொல்ல வைக்கிறது. அந்த அளவிற்கு பளிச்சென ஸ்டைலாக இருக்கிறார்.

ஆனால், அந்த பளீச் அழகே, இன்னொரு வகையில் அந்தக் கதாப்பாத்திரத்தில் ஒட்டாதது போல் தோற்றமளிக்கிறது.

sketch3 (2)பெரிய பெரிய சவாலான வேலைகளைச் செய்வார் என்று பார்த்தால், சேட்டுக்குக் காசு கட்டாத தமன்னாவின் தோழி ஸ்ரீபிரியங்காவின் ஸ்கூட்டியை தூக்குவது வரை தரைமட்டத்திற்கு இறங்குகிறார்.

“இவ்வளவு ஸ்டைலான ஹீரோவுக்கு, அட ஏம்பா இவ்வளவு சின்ன சின்ன வேலைகளைக் கொடுத்திருக்கீங்க?” என்று இயக்குநரைக் கேள்வி கேட்க வைக்கிறது.

அதுமட்டுமின்றி, சீயானின் உடன் வரும் நண்பர்கள் 4 பேரும் ஒட்டவில்லை. ஸ்ரீமனுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தமான கதாப்பாத்திரம் கொடுத்திருந்தால் அந்தக் குறையும் தெரிந்திருக்காது.

தமன்னா.. ஐயர் வீட்டுப் பெண்ணாக, படம் முழுவதும் சேலையில் வருகிறார். அழகான கதாப்பாத்திரம் தான் என்றாலும், முகத்தில் லேசாக முதிர்ச்சி தெரியத் தொடங்கியிருக்கிறது. இப்படியே போனால், அண்ணி, அக்கா கதாப்பாத்திரங்கள் தயாராகிவிடும்.

sketch3 (1)படத்தில், சேட்டாக நடித்திருக்கும் ஹரீஸ், வில்லனாக வரும் பாபுராஜ், போலீஸ் அதிகாரியாக வரும் அபிஷேக் மூவரும் தங்களது தனித்துவமான நடிப்பால் ஈர்க்கிறார்கள். மூவரின் இருப்பும் படத்திற்குப் பக்கபலம் சேர்த்திருக்கிறது.

எம்.சுகுமாரின் ஒளிப்பதிவில் வடசென்னையின் மூலை முடுக்குகள் மிக அழகாகப் பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக அந்தக் கார் கடத்தும் காட்சியில் குறுக்குச்சந்துப் பகுதி பதிவாகியிருக்கும் விதம் அருமை.

தமனின் இசையும், பாடல்களும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கின்றன. தலைப்பு தொடங்கி விக்ரமிற்கு கொடுத்திருக்கும் பின்னணி இசை படத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது. படத்தின் நிறைய பாடல்கள் இருக்கின்றன. அவை கதையோட்டத்திற்கு அழகாகத் தெரிந்தாலும், மனதில் நிற்கவில்லை.

மொத்தத்தில், விறுவிறுப்பிற்குத் தீனி போடக்கூடிய நிறைய வாய்ப்புகள் இருக்கும் கதைக்கருவைத் தேர்வு செய்திருக்கும் இயக்குநர், அதனை திரைக்கதையாக்குவதிலும், புதுமை புகுத்துவதிலும் திணறியிருக்கிறார்.

Sketch-05ஸ்டெக்ச் போட்டுத் தூக்குவது என்பது வசனத்தில் மட்டுமே இருக்கிறதே தவிர அப்படிப்பட்ட காட்சிகள் படத்தில் இல்லாதது பெரிய பலவீனம்.

ஸ்டைலிஷான ஹீரோ, ஹீரோவின் காதல், ஹீரோவின் நடை, உடை, பாவனை இதை மட்டுமே எவ்வளவு நேரம் ரசித்துக் கொண்டிருக்க முடியும்?

படத்தின் தலைப்பிற்கேற்ற விறுவிறுப்பையும், சுவாரசியத்தையும் இந்தப் படத்தில் கொடுத்திருந்தால் இயக்குநர் போட்ட ‘ஸ்கெட்ச்’ நன்றாகவே வேலை செய்திருக்கும்.

-ஃபீனிக்ஸ்தாசன்