Home நாடு தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (7) – செம்பூர்ணா!

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (7) – செம்பூர்ணா!

1201
0
SHARE
Ad
Shafie-Apdal-warisan
டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் – சபாவின் செம்பூர்ணா நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர்

(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது – மாறியுள்ள அரசியல் சூழல் -ஆகியவற்றால் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி பெரும் சவாலை எதிர்நோக்கப் போகும் தொகுதிகளின் வரிசையைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

இதற்கு முந்தையக் கட்டுரையில், தேசிய முன்னணி 2013-இல் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளில் வென்றும் இந்த முறை தோல்வியடையக் கூடிய அபாயம் மிக்க தொகுதியாகப் பார்க்கப்படும் ஜோகூரின் பாகோ தொகுதிக்கு என்ன அரசியல் சித்தாந்தமோ, அதுவேதான் சபா மாநிலத்தில் உள்ள செம்பூர்ணா நாடாளுமன்றத் தொகுதிக்கும்!

அம்னோவின் உதவித் தலைவராக சபா மாநிலத்தைப் பிரதிநிதித்து வந்த டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் 1எம்டிபி விவகாரத்தில் டான்ஸ்ரீ மொகிதினுடன் இணைந்து பிரதமர் நஜிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க, அதன் காரணமாக கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். தற்போது பார்ட்டி வாரிசான் சபா என்ற தனிக்கட்சித் தொடங்கி, சபாவில் போட்டியிட மும்முரமாக இயங்கி வருகிறார்.

#TamilSchoolmychoice

Sabah_mapகடந்த பொதுத் தேர்தலில் ஷாபி அப்டால் இந்தத் தொகுதியில் எத்தனை வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார் தெரியுமா?

20,905 வாக்குகள்!

இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்! இத்தனை வாக்குகள் பெரும்பான்மை தேசிய முன்னணிக்கு மட்டும் கிடைத்த ஆதரவாக இருக்க முடியாது. மாறாக, ஷாபிக்கு இருக்கும் சொந்த செல்வாக்குதான் இதற்குக் காரணம்!

அதுவும் 1995-ஆம் ஆண்டு முதல் கடந்த 5 தவணைகளாக செம்பூர்ணா தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வென்று வரும் ஷாபி அப்டாலுக்கு தனது சொந்தத் தொகுதியிலேயே கண்டிப்பாக தனிப்பட்ட செல்வாக்கு இருக்கும் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

பிகேஆர் கட்சியும் ஆதரவு கொடுக்கும்

semporna-2013-results-
2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஷாபி அப்டால் செம்பூர்ணா தொகுதியில் பெற்ற வாக்கு விவரங்கள்

செம்பூர்ணா தொகுதியில் இருக்கும் மொத்தம் 41,549 வாக்குகளில் ஷாபி அப்டால் தேசிய முன்னணி சார்பில் 25,559 வாக்குகளைக் கடந்த பொதுத் தேர்தலில் பெற்றார். அவரை எதிர்த்து நின்ற பிகேஆர் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளோ வெறும் 4,654 வாக்குகள்தான்!

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், இந்த முறை பிகேஆர் கட்சியும் ஷாபியை எதிர்த்துப் போட்டியிடப் போவதில்லை என்பதுதான்.

ஷாபியின் வாரிசான் கட்சி அதிகாரபூர்வமாக பக்காத்தான் கூட்டணியில் இணையவில்லை என்றாலும், ஷாபி பக்காத்தான் தலைவர்களுடன் நெருக்கமாக அரசியல் பணியாற்றி வருகிறார் என்பது கண்கூடு. இதன் காரணமாக, சபாவில் பக்காத்தான் மற்றும் ஷாபியின் வாரிசான் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி உடன்பாடு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், பிகேஆர் கட்சியும் இங்கே ஷாபியை எதிர்த்துப் போட்டியிடாமல் அவருக்கே ஆதரவு தந்து ஒதுங்கிக் கொள்ளும் என்பதால், மீண்டும் இந்தத் தொகுதியை ஷாபி வென்றெடுப்பது சுலபமாகத்தான் இருக்கும். பெரும்பான்மை வேண்டுமானால் குறையலாம் – ஆனால் வெற்றியடைவது சிரமமல்ல!

பொதுவாக செம்பூர்ணா தொகுதியில் ஷாபி அம்னோவிலிருந்து விலக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் அனுதாப அலை – தேசிய முன்னணி மற்றும் அம்னோ கட்சிகள் மீது உள்ளூர் மக்களுக்கு இயல்பாகவே இருந்து வரும் வெறுப்புணர்வு – இவையெல்லாம் சேர்ந்து வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி இழக்கப் போகும் தொகுதிகளில் ஒன்றாக செம்பூர்ணா மாறலாம்.

பக்காத்தான் கூட்டணி – வாரிசான் கட்சியின் சிறந்த அரசியல் வியூகம்

mahathir-muhyiddin-shafie
மொகிதின் யாசின் – ஷாபி அப்டால் – மகாதீர்

மகாதீரின் தலைமையை ஏற்றது முதல் பக்காத்தான் கூட்டணி, சில வித்தியாசமான, அதே சமயத்தில் நாட்டின் அரசியல் நிதர்சனங்களுக்கு ஏற்ற வியூகங்களை வகுத்து வருகிறது.

அதில் ஒன்றுதான் சபா, சரவாக் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தாமல் ஒதுங்கிக் கொண்டது.

குறிப்பாக சபா மாநிலத்தில், மகாதீருக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை என்பதால் ஆரம்பம் முதலே மகாதீர் சபா மாநிலத்தில் தனிப்பட்ட கவனம் செலுத்தாது, சபாவைக் கையாளும் பொறுப்பை ஷாபியிடம் ஒப்படைத்து விட்டார். அவரது வாரிசான் கட்சியும் பக்காத்தானில் இதுவரை இணையாமல் தனித்து இயங்கி வருகிறது.

parti-warisan-sabah-logoஷாபி-மகாதீர்-மொகிதின் கூட்டணி ஒன்றாக இயங்கினாலும், சபாவில் நிலவிவரும் மக்களின் அரசியல் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருக்கின்றனர். மேற்கு மலேசியாவில் தலைமையைக் கொண்ட கட்சிகள் சபாவில் ஆதிக்கம் செலுத்துவதையோ, ஊருடுவுவதையோ சபா மக்கள் விரும்புவதில்லை என்ற உண்மையையும் தெரிந்து கொண்டிருக்கின்றனர்.

இதன் காரணமாக, வாரிசான் கட்சி எந்தவித சிக்கலும் இன்றி, மேற்கு மலேசியாவின் பக்காத்தான் கூட்டணிக்கு வால் பிடிக்கிறது என்ற எதிர்ப்புக் குரல்கள் இன்றி சுதந்திரமாக சபாவில் தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு வருகிறது.

ஷாபி மீதான ஊழல் புகார்கள் பாதிக்குமா?

macc-buildingஅண்மையில் ஷாபி அப்டால் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கொண்டு வந்த ஊழல் புகார்கள் ஷாபிக்கு ஒரு பின்னடைவாக இருக்கக்கூடும். ஆனால், இதுவும், அவர் அம்னோவில் அமைச்சராக இருந்த காலத்தில் நிகழ்ந்த ஊழல் என்பதால், அரசியல் ரீதியாக அவரைப் பழிவாங்கும் நடவடிக்கையாக – அவரைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்போடு, சபா மாநிலத்தில் ஷாபி அப்டாலின் செல்வாக்கு காரணமாக இப்போது இருப்பதை விடக் கூடுதலாக 5 அல்லது 6 தொகுதிகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் வென்றாலே அடுத்த மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றுவதில் பக்காத்தான் கூட்டணிக்கு ஷாபி பெருமளவில் உதவ முடியும்.

அவ்வாறு ஷாபியின் வாரிசான் கட்சி சபா மாநிலத்தில் வென்றெடுக்கக் கூடிய நாடாளுமன்றத் தொகுதிகளில் – தேசிய முன்னணி தோல்வியடையப் போகும் தொகுதிகளில் –

செம்பூர்ணாவும் ஒன்றாக இருக்கலாம்!

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகளின் இணைப்புகள்:

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (3) – கோல சிலாங்கூர்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (4) : லாபிஸ்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (6) – பாகோ!