கோலாலம்பூர் – வாழ்வில் நமக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களுக்கு நன்றி சொல்லும் விழாவாக பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம் என மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.
“உழைப்பை அறுவடை செய்து செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பலன் பெறக் காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன், கால்நடைகளுக்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா. அதுபோல, நமக்கும் வாழ்வில் பல காலகட்டங்களில் நன்மையளிக்கக்கூடிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. இன்று, மலேசியத் திருநாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையானவை நமது முன்னாள் தலைவர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டவையாகும். அதுபோல, தோட்டப்புறங்களில் வாழ்ந்து கொண்டிருந்த நாம் இன்று நகர்ப்புறங்களிலும் வாழத் தொடங்கி விட்டோம். அந்த வாழ்க்கையின் அடிப்படைகளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இதனையே இவ்வாண்டின் சிந்தனையாக நாம் ஏற்றுக் கொள்வோம்” எனவும் டான்ஶ்ரீ கேவியஸ் வலியுறுத்தினார்.
“அதோடு, குறிப்பாக கேமரன்மலை விவசாயிகளும் நமக்குத் தேவையான காய்கறிகள், பழ வகைகள் போன்றவற்றைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் நன்றி சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வோம். ‘கேமரன்மலையை மீண்டும் வளமாக்குவோம்’ என்ற பயணம் இன்னும் தீவிரமடைந்துள்ளது. இங்குள்ள மக்கள் வழங்கி வரும் ஆதரவு தொடர வேண்டும். அவர்கள் எதிர்பார்க்கும் கேமரன்மலையை அவர்களின் கரங்களில் ஒப்படைக்க வேண்டியது எனது தலையாய கடமையும் ஆகும். இதற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்ற உறுதியையும் இந்தப் பொங்கல் திருநாளின் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்துவதாகவும் கேவியஸ் கூறினார்.
இதனிடையே, நாளை ஞாயிற்றுக்கிழமை (14 ஜனவரி 2018) கேமரன்மலை, தானாராத்தா, ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் மைபிபிபி ஏற்பாட்டில் பொங்கல் தினம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 100 பானைகளைக் கொண்டு பொங்கல் வைபவம் காலை 9.00 மணிக்குத் தொடங்கப்படும். இதில் கலந்து கொள்ள சுற்றுவட்டார இந்துக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கேவியஸ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துக் கொண்டார்.
பொங்கல் கொண்டாட்டம் தொடர்பான மேல் விவரங்களுக்கு 019-555-3848 என்ற எண்ணில் கேமரன்மலை மைபிபிபி தொகுதித் தலைவர் டத்தோ கண்ணாவுடன் தொடர்பு கொள்ளலாம்.