கோலாலம்பூர் – பொங்கலுக்கு போட்டியிடும் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களான ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களோடு துணிந்து போட்டியில் இறங்குவோம் என எந்தத் தைரியத்தில் பிரபுதேவா களத்தில் குதித்தார் என யோசித்துக் கொண்டே படம் பார்க்கும்போதுதான் அதற்கான விடை கிடைத்தது.
ஆம்! முழுக்க முழுக்க நகைச்சுவை பலத்தையே நம்பி ‘குலேபகாவலி’ படத்தை எடுத்திருக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் எம்ஜிஆர் கதாநாயகனாக வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் என்பதால், படத் தொடக்கத்தில் எம்ஜிஆருக்கும், பழைய குலேபகாவலியை இயக்கிய டி.ஆர்.ராமண்ணாவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தின் மையமாக இருக்கும் ஊருக்கு குலேபகாவலி என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
ஏற்கனவே எத்தனையோ படங்களில் வந்த புதையலைத் தேடி அலையும் கூட்டத்தினரின் கதைதான். ஆனால், இறுதிவரை கலகலப்பாகப் போகும் திரைக்கதையை அமைத்து, அதற்குள் பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை கொண்டு வந்து ஒருங்கிணைத்து, கவர்ச்சிக்கு ஹன்சிகாவையும் சேர்த்துக் கொண்டு இந்த நகைச்சுவைப் பயணத்தைச் செதுக்கியிருக்கிறார், இயக்குநர் கல்யாண்.
ரேவதியின் தனித்துவ நடிப்பு
முதல் காட்சியில் வழக்கமான அம்மா போல வந்து அனுதாபத்தைப் பெறும் ரேவதி அடுத்த காட்சியிலிருந்தே தனது அதிரடியை ஆரம்பித்து, படம் முழுக்க வித்தியாசமாக கலக்கியிருக்கிறார். இதுவரை அவர் இத்தகைய கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்பதோடு, படம் முழுக்க நகைச்சுவையிலும், ஏன் சண்டைக் காட்சிகளிலும் கூட அசத்தியிருக்கிறார்.
மொட்டை இராஜேந்திரனைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அடியாள் கும்பலின் தலைவராக வந்து அனைவரையும் மிரட்டும் அவரையே சகட்டு மேனிக்கு அவரது மனைவி சாடுவதும், அவருடன் வரும் கமலைப் போல தோற்றமும், குரலும் கொண்ட நபரும், எலும்புக் கூட்டை “அம்மா அம்மா” என்று கட்டிப் பிடித்துக்கொண்டு இராஜேந்திரன் உருகுவதும் திரையரங்கையே குலுங்க வைக்கிறது.
பிரபுதேவா – ஹன்சிகா
பிரபுதேவா எந்த நோக்கத்தில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாரோ தெரியவில்லை. அதிகம் வேலையில்லை. இரண்டு பாடல்களில் ஹன்சிகாவுடன் கட்டிப்பிடித்துக் காதல். பாடல்களில் வழக்கமான தனது உடலை வளைத்து நெளித்து அசத்தல் நடனத்தை வழங்கியிருக்கிறார்.
அவரது நடனங்கள் மனதில் நிற்கும் அளவுக்கு பாடல்கள் கவரவில்லை.
ஹன்சிகாவுக்கும் அதிக வேலையில்லை. அவ்வப்போது கவர்ச்சி காட்டுகிறார். இவர்களுக்கிடையில் சிலை திருடும் கும்பலின் தலைவனாக மன்சூர் அலிகான், கிராமத்துத் தலைவராக வேல இராமமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டராக சத்யன், வைரத்தைத் தேடும் கூட்டத்தைச் சேர்ந்த மைத்துனர்களாக ஆனந்தராஜ், மதுசூதன் ராவ் என நட்சத்திரக்கூட்டமும் உண்டு.
ஆனால் மொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்துவதும், பரவாயில்லையே என நம்மைச் சொல்ல வைப்பதும், மொட்டை இராஜேந்திரன் மற்றும் ரேவதியின் லூட்டிகள்தான்.
ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி புதையலைத் தேடி அலையும் கூட்டத்தினரின் கதைதான் என்றாலும் அதில் வித்தியாசமாக நுழைக்கப்பட்டிருப்பது வெள்ளையர் ஆண்ட காலத்தில் புதைக்கப்பட்ட புதையல் என்ற திருப்பம்தான். அந்த திருப்பத்திலும் மேலும் சில சுவாரசியமான, நாம் எதிர்பாராத சில ஆச்சரியங்களை நம்பும்படி இணைத்திருக்கிறார்கள்.
கரகாட்டக்காரன் படக் காலத்தின் சொப்பனசுந்தரி காரையும் கதையில் ஒரு பாத்திரமாகப் பொருத்தமாக இணைத்திருக்கிறார்கள்.
திருப்பங்கள் இறுதிக் காட்சிவரை தொடர்கின்றன.
பொங்கல் மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் ஏற்ற வகையில் நம்மை மறந்து இரண்டு மணி நேரம் சிரித்து மகிழ ஏற்ற நகைச்சுவைப் பயணம் குலேபகாவலி!