Home நாடு கம்பார் தொகுதியில் லீ சீ லியோங் – மசீச அறிவித்தது!

கம்பார் தொகுதியில் லீ சீ லியோங் – மசீச அறிவித்தது!

1119
0
SHARE
Ad
Lee Chee Leong-MCA-kampar candidate
லீ சீ லியோங் – மசீச உதவித் தலைவர் – கம்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்

கம்பார் – வரவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் கட்டம் கட்டமாக அறிவிக்கும் படலம் தொடங்கியிருக்கிறது.

பேராக் மாநிலத்தில் உள்ள கம்பார் நாடாளுமன்றத் தொகுதியில் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ லீ சீ லியோங் போட்டியிடுவார் என மசீசவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

2008 பொதுத் தேர்தலில் சுழன்றடித்த அரசியல் சுனாமியிலும் சீன வாக்குகளை அதிகம் கொண்ட கம்பார் தொகுதியில் 2,697 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தவர் லீ சீ லியோங்.

#TamilSchoolmychoice

ஆனால் 2008-இல் கம்பாரில் தோல்வியடைந்த ஜசெக 2013 பொதுத் தேர்தலில் மீண்டும் இந்தத் தொகுதியைக் கைப்பற்றியது. ஜசெகவின் டாக்டர் கோ சுங் சென் 5,400 வாக்குகள் பெரும்பான்மையில் மசீசவின் லீ சீ லியோங்கைத் தோற்கடித்தார்.

kampar-parliament-2013-results
2013-இல் கம்பார் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

2013-இல் தோல்வியடைந்தாலும், லீ சீ லியோங் தொடர்ந்து இந்தத் தொகுதியில் சேவையாற்றி வந்திருக்கிறார் என்ற காரணத்தால் மீண்டும் இங்கே லீ நிறுத்தப்படுகிறார் என லியோவ் தெரிவித்தார்.

மசீசவின் கனவுப் பல்கலைக் கழகமான துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகம் கம்பாரில் அமைந்திருப்பதால் இங்கு மசீசவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

என்றாலும், 61 விழுக்காடு சீன வாக்காளர்களையும், 29 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும், 9 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் கொண்ட கம்பார் தொகுதியை மீண்டும் வென்றெடுப்பது மசீசவுக்கும் தேசிய முன்னணிக்கும் பெரும் சவாலாக இருக்கும்.

கம்பார் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் மாலிம் நவார், கெராஞ்சி, துவாலாங் செகா ஆகியவை ஆகும். மாலிம் நவார், கெராஞ்சி இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் ஜசெக 2013-இல் கைப்பற்றியது. துவாலாங் செகா தொகுதியை அம்னோ வென்றது.

இந்த முறையும், மாலிம் நவார், கெராஞ்சி ஆகிய இரு தொகுதிகளில் மசீசவே மீண்டும் போட்டியிடும் என்றும் லியோவ் அறிவித்திருக்கிறார்.