கோலாலம்பூர் – மலேசியாவிலுள்ள தேர்தெடுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் நூலகங்களுக்காக, கடந்த ஜனவரி 13-ம் தேதி, சனிக்கிழமை, கிள்ளான் டெஸ்கோ பேரங்காடி கார் நிறுத்தும் வளாகத்தில் ராகாவின் ஏற்பாட்டில் புத்தகங்கள் திரட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 10 தொடங்கி மாலை 4 வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி, அதனை இலவசமாக ராகா குழுவினரிடம் வழங்கினார்கள்.
அதுமட்டுமின்றி, இந்த ஆண்டில், பள்ளி செல்லும் வசதி குறைந்த 200 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைப் பொருட்களான புத்தகங்கள், எழுதுபொருட்களை உள்ளடக்கிய இலவச பள்ளி புத்தகப் பைகளை, ராகா வானொலி நிலையம் வழங்கியது.
இது குறித்து ராகா தலைவர் சுப்ராமணியம் கூறுகையில், “எங்களால் முடிந்த வரை வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக பள்ளி புத்தகப் பைகளை எடுத்து வழங்கியிருக்கிறோம். இந்நிகழ்ச்சி வெற்றி அடைய செய்த ராகா அறிவிப்பாளர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் எங்களுக்கு என்றும் ஆதரவாக இருக்கும் இரசிகர்களுக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வகையான முயற்சிகள் தொடர்ந்து கொண்டே போகும்”, என்று கூறினார்.
மேலும், இதன் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள் எனத் தான் நம்புவதாகவும் சுப்ரமணியம் தெரிவித்தார்.
இந்த இலவச பள்ளி புத்தகப் பைகள் மற்றும் திரட்டப்பட்ட புத்தகங்கள் ஆர்.ஆர்.ஐ. சுங்கை பூலோ தமிழ்ப்பள்ளி, காஜாங் தமிழ்ப்பள்ளி, பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி, மூவார், ஜாலான் காலிடி தமிழ்ப்பள்ளி, ஜேன்ஜாரோம் தமிழ்ப்பள்ளி, ஸ்கார்ப்புரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, கோலா கங்சார் குலா தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் செமினி தமிழ்ப்பள்ளி என மொத்தம் 8 தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்றும் ராகா அறிவித்திருக்கிறது.