கோலாலம்பூர் – கடந்த திங்கட்கிழமை மாலை, ஸ்ரீபந்தாய், பந்தாய் டாலாம் பிபிஆர் அடுக்குமாடிக் குடியிருப்பு, 102 புளோக்கில், மேல்தளத்தில் இருந்து யாரோ வீசிய நாற்காலி, கீழே நடந்து சென்று கொண்டிருந்த 15 வயது சதீஸ்வரனின் தலையில் விழுந்து, சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது போல் மேல்தளத்தில் இருந்து நாற்காலிகளைத் தூக்கி வீசுவது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்று புதிதல்ல என்கிறார்கள் அங்கு கீழ்தளங்களில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள்.
நாற்காலி, சோஃபா, தொலைக்காட்சிப் பெட்டி, கண்ணாடி பாட்டில்கள் என எத்தனையோ பொருட்களை மேலிருந்து கீழே எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தூக்கி வீசியெறிவது அங்கு தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது.
இதற்கு முன் தூக்கி வீசியெறியப்பட்ட பொருட்கள் உடைந்து சிதறி, அப்பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரின் காலையும் கிழித்திருக்கிறது.
ஒருமுறை மேலிருந்து பறந்து வந்த பலகை ஒன்று கீழே நடந்த சென்ற ஒருவரின் தலையில் பட்டு, அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டதாக குடியிருப்பாளர்களில் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் நிற்காத, சில பொறுப்பற்றவர்களின் தூக்கி வீசும் பழக்கம், இப்போது ஒரு அப்பாவிச் சிறுவனின் உயிரையே பறித்துவிட்டது.
இதனிடையே, தற்போது இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வரும் கோலாலம்பூர் மாநகர சபை (டிபிகேல்), உடனடி நடவடிக்கையாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழே நடந்து செல்வோருக்குப் பாதுகாப்பு அளிக்கும் விதமாக, பாதுகாப்பு வலை அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
மேலும், இரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, மேலிருந்து கீழே பொருட்களை தூக்கி வீசுவோரின் மீது வீட்டின் உரிமையை இரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டிபிகேஎல் அறிவித்திருக்கிறது.