கோலாலம்பூர் – ஏர் இந்தியாவில் பங்குகள் வாங்கும் எண்ணம் இல்லையென ஏர் ஆசியா இந்தியா அறிவித்திருக்கிறது.
மேலும், அடுத்த ஆண்டு முதல், தங்களது நிறுவனத்தை மேம்படுத்தி, அனைத்துலக அளவில் விமானங்களை இயக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் ஏர் ஆசியா இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயலதிகாரி அமர் அப்ரால் தெரிவித்திருக்கிறார்.
ஏர் ஆசியா மற்றும் டாடா இந்தியாவுடன் 51.49 விழுக்காடு பங்குகளைக் கொண்டிருக்கிறது ஏர் ஆசியா இந்தியா. 15 ஏ320எஸ் விமானங்களுடன், 16 இடங்களுக்கு, 100 முறைப் பயணம் செய்கின்றது.
இதனிடையே, கடனில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு முதலீட்டைக் கொண்டு வரும் விதமாக அதன் பங்குகளை விற்கும் வியூகத் திட்டத்திற்கு இந்திய அரசும் சம்மதம் தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து, சில விமான நிறுவனங்கள் அப்பங்குகளை வாங்கும் எண்ணத்தில் இருக்கின்றன.
மேலும், வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49 விழுக்காடு பங்குகள் வரையில் வாங்கலாம் என்றும் இந்திய அரசு அனுமதியளித்திருக்கிறது.
எனவே, அப்பங்குகளை ஏர் ஆசியா இந்தியா வாங்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்நிலையில், அதற்குப் பதிலளித்திருக்கும் அமர் அப்ரால், “எங்களுடைய ஏர் ஆசியா இந்தியாவில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். இதனைத் தொடர்ந்து அனைத்துலக சந்தையில் முதலிடத்திற்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறோம். எனவே இப்போதைக்கு, இல்லை (ஏர் இந்தியாவில் முதலீடு செய்யும் எண்ணம் இல்லை)” என அப்ரால் கூறியிருக்கிறார்.