கோலாலம்பூர் – நெஞ்சே எழு! … 2018 -ம் தொடக்கத்தில் இருக்கும் நமக்கு தை பிறந்தால் வழி பிறக்கும்! புதிய சிந்தனையோடும் புதிய உத்வேகத்தோடும் இந்த புதிய ஆண்டில் செயலாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக பேராசியர் டாக்டர் காதர் இப்ராஹிம் வழி நடத்திய நெஞ்சே எழு தன்முனைப்பு நிகழ்ச்சியை மின்னல் எஃப்எம் ஏற்பாடு செய்திருந்தது.
இரவு 7.30 தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெற்ற இந்த தன்முனைப்பு நிகழ்ச்சிக்கு ஏறக்குறைய 1800- க்கும் மேற்பட்ட நேயர்கள் வந்திருந்தனர்.
இந்நிகழ்ச்சி அங்காசாபுரி ஆடிட்டோரியம் பெர்டானாவில் நடைபெற்றது. மக்கள் கூட்டம் அதிகரித்ததால் ஆடிட்டோரியம் பி.ரம்லியும் திறந்து விடப்பட்டது. அங்கும் திரையின் வழியாக நேயர்கள் நெஞ்சே எழு’ நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
‘நெஞ்சே எழு’ என்ற நிகழ்ச்சி அந்த மேடையில் மட்டுமல்ல, ஆண்டு தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளும் மின்னலின் காலைக்கதிர் நிகழ்ச்சியில், வாழ்வில் சவால்களை கடந்து சாதனைப்படைத்தவர்களின் சந்திப்பு இடம்பெற்று வருகின்றது. அதில் கலந்து கொண்ட 12 சாதனையாளர்கள் நெஞ்சே எழு மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.
மின்னலில் இந்நிகழ்ச்சியின் வாயிலாகப் பலரும் பலனடைந்திருப்பதும், மின்னலுக்கு அவர்கள் வழங்கி வரும் பேராதரவையும் அந்த அரங்கில் இருந்த மக்களின் உற்சாக முகங்களின் மூலம் காண முடிந்தது.
மேலும், நெஞ்சே எழு நிகச்சிக்கு ஆதரவு வழங்கிய டத்தோஸ்ரீ ஏன்டி மற்றும் ஜெயபக்திக்கு மின்னல் எஃப்எம் நன்றியை தெரிவித்துக் கொண்டது. மேலும் இந்த தன்முனைப்பு நிகழ்ச்சியை மக்களுக்கு தெரியபடுத்துவதில் பங்கெடுத்துக் கொண்ட தமிழ் ஊடங்களுக்கும் மின்னல் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
‘நெஞ்சே எழு’ நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட 12 சாதனையாளர்களின் பட்டியல்
1.டாக்டர் முகமட் ரஹிம் கமாலுடின்: குற்றவியல் நிபுணர்
தேசியப் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நிபுணர் மற்றும் முதுநிலை விரிவுரையாளர். 100 கொலை குற்றவாளிகளை சந்தித்து முனைவர் ஆராய்ச்சி செய்திருக்கின்றார்.
இளங்களை பட்டம் தடையவியல் அறிவியலில் முடித்துள்ள இவர் (முதல் நிலை தேர்ச்சி பெற்றிருக்கிறார்.) ரோயல் சான்ஸலர் கோல்ட் மெடல் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
பல்கலைக்கழக சிறந்த மாணவருக்கான தங்க பதக்கம் பிறகு சூல்டான் பெர்லிஸ் அரசு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
40-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்,50 க்கும் மேற்பட்ட அனைத்துலக மாநாடுகளில் சிறப்பு பேச்சாளராக அழைக்கபட்டிருக்கிறார்.
குற்றவியல் அலோசகராகவும் செயல்பட்டு வருகின்றார்.
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.
2. தேசிய கராத்தே வீராங்கணை ஷகிலா
சீ விளையாட்டுப் போட்டியில் நாட்டுக்கு தங்கம் வாங்கித் தந்த இவரின் அடுத்த இலக்கு, ஒலிம்பிக் போட்டியில் மலேசியவுக்கு முதல் தங்கத்தை பெற்றுத் தரவேண்டும் என்பதே.
3.பிரசன்னா சைலநாதன்
சிறு நடுத்தர வர்த்தகர் விருது {SME AWARD 2017} பெற்றவர்/நிறுவன இயக்குனர்
4.தினேஷ்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர். விதையை தூவி விட்டாலும் முளைத்து வரக்கூடிய நமது வளமான நாட்டில் அதன் அருமை புரிந்து கொண்டு, இதுதாங்க கௌரவம் எனத் தலை நிமிர்த்தி வாழ்கிறார்.
மீண்டும் போகிறோம் விவசாயதிற்கு என்று நமது பாரம்பரிய தொழிலான உழவர் தொழிலில் இறங்கி விவசாயத்தையே இன்று நவீன விவசாயமாக்கி வெற்றி நடை போட்டு வரும் இவர் வணிகத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
5.டத்தோ ஶ்ரீ ஏண்டி
வீடுகள், நிறுவங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பொருளை அனுப்பும் தொழிலிருந்து தொடங்கி எஸ்எம்ஈ (SME) சிறந்த 100 இளம் தொழிலதிர்பர்கள் பட்டியலில் 2-வது நிலையை பெற்றார்.
சிறந்த 100 நிறுவனங்களில் இவரது எவரஸ்த் நிறுவனம் சிறந்த 10 பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. அண்மையில் டத்தோஶ்ரீ விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது
6.லாவன்யா நாகராஜன்
தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். பல போராட்டங்களுக்குப் பிறகு, தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிருக்கிறார். தற்போது புகைப்படத் துறையில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
7.முகமட் ஷருல் ஹஸ்மான் மகேன்
உடற்கட்டழகர் போட்டியில் 3 முறை ஆசிய சாம்பியனாகவும் 2 முறை உலக சாம்பியனாகவும் சாதனை படைத்தவர்.பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.
8.டாக்டர் பிரகாஷ் சூரியமூர்த்தி
குறை என்பது மனதளவில் மட்டுமே! ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை ஒன்று மட்டுமே போதும் என்ற நிலையில்,பார்வையிலாத நிலையிலும் தமது முதுகலை பட்டத்தை முடித்து இன்று பலருக்கு முன்னுதாரனமாக இருக்கிறார். தன்முனைப்பு நிறுவனம் ஒன்றைத் தோற்றுவித்து அதில் மாணவர்களுக்கு பல பயிற்சிகளை அளித்து வருகிறார் முனைவர் பிரகாஷ்.
9.தினேஷ்
நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் இவர், எஸ்பிஎம் எழுதும் போது தனது தந்தையை இழந்தார். இரண்டு வருட இடைவெளியில் எஸ்டிபிஎம் தேர்வெழுதும் போது தனது தாயையும் இழந்தார்.
சோகத்தில் உறைந்திருந்த இவருக்கு எஸ்டிபிஎம் தேர்வு முடிவு தான் மீண்டும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. நெகிரி செம்பிலான் மாநிலத்திலேயே சிறந்த மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இழந்ததை எண்ணி சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் சதாரண மனிதராக இல்லாமல் இவர் உயர்ந்து நிற்கிறார். இவ்வளவு தன்னம்பிக்கை இவரிடம் எப்படி வந்தது என்பதே கேள்விக்குறிதான்.
10.அவீனா
பிறந்தது முதல் சக்கர நாற்காலியில் நகர்ந்தாலும் பல திறமைகளைக் கொண்டவர். ஓவியம் வரைதல், சமையல் கலையில் டிப்ளோமா பெற்றவர். “What’s your problem” என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டிருக்கிறார.
11.எலிதா மலாகியாஸ்
தனித்து வாழும் தாயார். குடும்ப வறுமையால் படிவம் 1 வரை மட்டுமே படித்திருக்கிறார். வயது 45. ஓஒய் சென்னை புரோடாக்ஸ் உரிமையாளர். பல பொருட்களை சுயமாகத் தயாரித்து வியாபாரத்துறையில் 8 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகின்றார்.
9 வகையான பொருட்களைத் தயார் செய்து விற்பனை செய்கின்றார். திடீர் வடை மாவு, ஊர்காய், இஞ்சிப் புளி, சப்பாதி மாவு, திடீர் தோசை, திடீர் இட்லி , திடீர் இடியப்பம் வியாபாரத்தில் வெற்றி நடைப்போடும் இளம் வர்த்தகர்.
பத்தாங் காலியில் சொந்த நிறுவனம் உள்ளது. அதில் 4 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
12. குகன் தங்கீஸ்வரன்
வெற்றிப் பாதையை அடைவதற்கு பல சவால்களையும் முயற்சிகளையும் கடந்து தான் செல்ல வேண்டும். ஒரு சிலருக்கு எதிர்ப்பார்த்த வேலை சீக்கிரம் கிடைத்திடும்.
ஒரு சிலருக்கு கொஞ்சம் தாமாதமாக கிடைக்கும். இவர் தன்னுடைய வேலைக்காக 7 வருடம் காத்திருந்தார்.
அலுவலக பணியாளராக (office boy) பல வருடங்களாக பணிபுரிந்து, தற்போது விமானியாக பணியாற்றுகின்றார்.
8 வயதில் விமானியாக வேண்டும் என்ற கனவு தற்போது நனவாகியிருப்பது இவரது தொடர் முயற்சிக்கு கிடைத்த பரிசு.