Home நாடு தே.முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (10) – ஜோசப் குருப் தடுமாறப் போகும் பென்சியாங்கான்!

தே.முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (10) – ஜோசப் குருப் தடுமாறப் போகும் பென்சியாங்கான்!

1198
0
SHARE
Ad
joseph kurup-pbrs-sabah
டான்ஸ்ரீ ஜோசப் குருப் – நடப்பு பென்சியாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் – பிபிஆர்எஸ் கட்சியின் தேசியத் தலைவர் – பிரதமர் துறை அமைச்சர்

(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது – மாறியுள்ள அரசியல் சூழல் -ஆகியவற்றால் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி பெரும் சவாலை எதிர்நோக்கப் போகும் தொகுதிகளின் வரிசையைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

டான்ஸ்ரீ ஜோசப் குருப் சபாவின் பென்சியாங்கான் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் என்பதோடு, பிரதமர் துறையின் அமைச்சரும் ஆவார். 2008 பொதுத் தேர்தலில் பென்சியாங்கான் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோசப் குருப், 2013 பொதுத் தேர்தலில் கடும் போட்டிக்கிடையில் 9,467 வாக்குகள் பெற்று 1,744 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் ரிச்சர்ட் சாக்கியான் பின் குந்திங் 7,723 வாக்குகள் பெற மற்றொரு போட்டியாளரான ஸ்டார் கட்சியின் மார்டின் டோம்மி 3,554 வாக்குகள் பெற்றார். சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 152 வாக்குகள் பெற்றார்.

pensiangan-parliament-2013-results
2013 பொதுத் தேர்தலில் பென்சியாங் நாடாளுமன்றத் தொகுதியின் முடிவுகள்
#TamilSchoolmychoice

ஆக ஜோசப் குருப்புக்கு எதிராக விழுந்த வாக்குகளின் மொத்த எண்ணிக்கை, 11,429 – அதாவது அவர் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 1,962 எதிர்ப்பு வாக்குகள் அவருக்கு விழுந்தன. இதிலிருந்தே பென்சியாங்கான் ஜோசப் குருப்புக்கு எத்தனை ஆபத்தான தொகுதி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பென்சியாங்கான் – ஒரு பார்வை

2013 புள்ளி விவரங்களின்படி 86 விழுக்காடு முஸ்லீம் அல்லாத பூமிபுத்ராக்களைக் கொண்ட தொகுதி பென்சியாங்கான். 12 விழுக்காடு முஸ்லீம் பூமிபுத்ராக்கள். சீன வாக்காளர்கள் மிகக் குறைவு – ஒரே ஒரு விழுக்காடுதான்!

Pensiangan-map-sabah
பென்சியாங்கான் அமைந்துள்ள இடத்தைச் சுட்டிக்காட்டும் வரைபடம்

சபா மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய உட்புறப் பிரதேசம் பென்சியாங்கான். இந்தோனிசியாவின் கலிமந்தானோடு எல்லையைக் கொண்ட வட்டாரம். இதனால்தான் சபாவின் பூர்வீக இனமான கடசான் டுசுன் இனத்தை உள்ளடக்கிய 86 விழுக்காடு முஸ்லீம் அல்லாத பூமிபுத்ராக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது.

எனவே, நாம் முந்தையக் கட்டுரைகளில் குறிப்பிட்டது போல், பிகேஆர்-ஷாபி அப்டாலின் வாரிசான் – ஜசெக ஆகிய கட்சிகள் கட்சிகள் இணைந்து தேர்தல் கூட்டணி கண்டு போட்டியில் குதிக்கும்போது தேசிய முன்னணி வெல்வதற்கு சிரமமான தொகுதிகளில் ஒன்றாக பென்சியாங்கான் மாறும்!

ஜோசப் குருப் மீண்டும் போட்டியிடுவாரா?

சபாவின் கடசான் டுசுன் பிரிவைச் சேர்ந்தவர் ஜோசப் குருப். 1985-ஆம் ஆண்டில் ஜோசப் பைரின் கித்திங்கான் பிபிஎஸ் (பார்ட்டி பெர்சாத்து சபா) என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபோது அவரோடு இணைந்தவர்.

PBRS-PART-SABAHஆனால், 1994-ஆம் ஆண்டில் பிபிஎஸ் கட்சியில் வெடித்த உட்கட்சிப் பூசல் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி பிபிஆர்எஸ் (பார்ட்டி பெர்சாத்து ராயாட் சபா) என்ற கட்சியைத் தோற்றுவித்து அதன் தலைவராக இன்றுவரை செயலாற்றி வருகிறார். தேசிய முன்னணியில் இக்கட்சி இடம் பெற்றிருப்பதால் மத்திய அமைச்சரவையில் பிரதமர் துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார் ஜோசப் குருப்.

பார்க்க இளமையாகத் தெரிந்தாலும் 73 வயதான ஜோசப் குருப் மீண்டும் பென்சியாங்கான் தொகுதியைத் தற்காப்பாரா என்பது இன்னும் தெரியவில்லை. அவ்வாறு அவர் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டால், இந்தத் தொகுதியை வென்றெடுப்பது தேசிய முன்னணிக்கு மேலும் சவால் மிக்கதாக இருக்கும்.

அதிர்ச்சி தரும் மாற்றங்களுக்குக் காத்திருக்கும் சபா!

சபா மாநில அரசியல் நீறு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் கொதித்துக் கிடக்கிறது. பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மாநிலத்தில் பல அரசியல் அதிர்ச்சிகள் வெடிக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Sabah_mapபல்வேறு அரசியல் கேள்விகளுக்கு விடை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது சபா அரசியல்!

ஷாபி அப்டாலின் வாரிசான் கட்சியின் செல்வாக்கு என்ன?

முதுமையின் விளிம்பில் நிற்கும் ஜோசப் பைரின் கித்திங்கான்- ஜோசப் குருப் போன்ற தலைவர்களின் செல்வாக்கு தொடர்ந்து நிலைக்குமா?

ஜோசப் பைரின் கித்திங்கானின் இளைய சகோதரர் ஜெப்ரி பைரின் கித்திங்கான் தனது சகோதரருக்குப் பதிலாக புதிய கடசான்-டுசுன் இனத் தலைவராக இந்தப் பொதுத் தேர்தலில் உருவெடுப்பாரா?

அடையாள அட்டைப் பிரச்சனையில் துன் மகாதீரை இன்றளவுக்கும் வெறுப்புணர்வுடன் பார்க்கும் சபாவின் பூர்வீக மக்கள் – கடந்த காலங்களை மறந்து விட்டு அவரைப் பிரதமராக ஏற்றுக் கொள்ள முன்வருவார்களா?

ஷாபி அப்டாலின் பிரிவால் சபா அம்னோ பலவீனமாகிவிட்டதா?

நடப்பு முதலமைச்சர் மூசா அமான் தேசிய முன்னணியையும், அம்னோவையும் மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியுமா?

இப்படியாக சபா மாநிலத்தில் தொக்கி நிற்கும் பல கேள்விகளுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் விடைகளைத் தரும்.

அந்த விடைகளுக்குள் பல அதிர்ச்சிகரமான பொதுத் தேர்தல் முடிவுகள் அடங்கியிருக்கும்.

அத்தகைய ஓர் அதிர்ச்சியாக பென்சியாங்கான் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவும் தேசிய முன்னணிக்கு அமையக் கூடும்!

– இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகளின் இணைப்புகள்:

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (3) – கோல சிலாங்கூர்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (4) : லாபிஸ்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (6) – பாகோ!

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (7) – செம்பூர்ணா!

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (8) – கோத்தா மருடு (சபா)

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (9) – பியூபோர்ட் (சபா)