Home உலகம் பனிசூழ்ந்த மலையில் யோகா நடத்தப்போகும் மோடி குழுவினர்!

பனிசூழ்ந்த மலையில் யோகா நடத்தப்போகும் மோடி குழுவினர்!

1140
0
SHARE
Ad

Switzerland Davos Forumடாவோஸ் – ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்திலும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஊடகங்கள், அரசியல் பார்வையாளர்களின் கவனமும்  சுவிட்சர்லாந்து நாட்டின் அழகான பனிமலை சூழ்ந்த டாவோஸ் நகர் மீது திரும்பும்.

இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் அழகிய மலைப் பிரதேசமான இந்தச் சிறிய நகரில் உலகப் பொருளாதார கருத்தரங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும். இந்த முறை ஜனவரி 23 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Modiisreltripஇந்த முறை நடைபெறும் கருத்தரங்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். கலந்து கொள்வதோடு மட்டுமின்றி மோடியின் இந்தியக் குழு பனி படந்த மலைப் பிரதேசத்தில் யோகா பயிற்சி வகுப்புகளை நடத்தி அதன் மூலம் யோகாவின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்த உத்தேசித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்தியப் பிரதமராகப் பதவியேற்றது முதல் யோகாவின் பெருமைகளையும், நன்மைகள் குறித்தும் மோடி தொடர்ந்து விளக்கி வருகிறார். அதைத் தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி ஆண்டுதோறும் தற்போது யோகா தினமாக ஐக்கிய நாடுகளின் மன்றத்தால் அனுசரிக்கப்படுகிறது.

இந்த முறை டாவோஸ் வரும் மோடியின் இந்தியக் குழுவோடு இரண்டு யோகா பயிற்சி ஆசிரியர்கள் உடன் வரவிருக்கின்றனர். இவர்கள் டாவோசுக்கு வரவிருக்கும் பங்கேற்பாளர்களுக்கு பனிபடர்ந்த ஆல்ப்ஸ் மலைப் பிரதேசங்களில் யோகா பயிற்சி வகுப்புகளை நடத்தவிருக்கின்றனர்.

Davos-scene-WEF
டாவோஸ் நகரின் அழகிய தோற்றம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட சுமார் 70 உலகத் தலைவர்கள், வணிகப் பிரமுகர்கள் இந்த முறை டாவோசில் கூடவிருக்கின்றனர்.

மோடி பிரதமரானது முதல் இதுவரையில் டாவோஸ் உலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் கலந்து கொண்டதில்லை. இப்போதுதான் முதன் முறையாகக் கலந்து கொள்கிறார். அதுமட்டுமின்றி கடந்த 21 ஆண்டுகளில் இந்தப் பொருளாதாரக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் மோடியாவார். மோடியின் தலைமையில் இந்தியா உலகின் 7-வது மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக வளர்ச்சி பெற்று உருமாறியுள்ளது.

டாவோஸ் வருகை தரும் இந்தியக் குழு இந்தியாவின் கலாச்சாரப் பண்பாட்டு அம்சங்களை பிரபலப்படுத்துவதோடு, காட்சிப்படுத்துவதோடு, இந்திய உணவு வகைகளையும் இந்தப் பொருளாதாரக் கருத்தரங்கில் பிரபலப்படுத்த முனையும்.

டாவோசில் ஒரு நாள் மட்டுமே தங்கியிருக்கும் மோடி கருத்தரங்கின் இடைவேளையின்போது பல்வேறு தலைவர்களையும், அனைத்துலக நிறுவனங்களின் நிர்வாகிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.