Home நாடு தே.முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (11) – லங்காவி! மகாதீர் வெல்லப் போகும் தொகுதியா?

தே.முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (11) – லங்காவி! மகாதீர் வெல்லப் போகும் தொகுதியா?

1434
0
SHARE
Ad
nawawi ahmad-langkawi-MP
நவாவி பின் அகமட் – லங்காவி நாடாளுமன்றத்தின் நடப்பு உறுப்பினர்

(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது – மாறியுள்ள அரசியல் சூழல் –போன்ற காரணங்களால் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி பெரும் சவாலை எதிர்நோக்கப் போகும் தொகுதிகளின் வரிசையைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

1950-ஆம் ஆண்டுகளில் நாட்டின் முதல் கட்ட மலாய் இன மருத்துவர்களில் ஒருவராக உருவான கெடாவைச் சேர்ந்த டாக்டர் மகாதீர் முகமட் அரசுப் பணியில் இருந்த போது சில காலம் கெடாவை அடுத்திருந்த லங்காவித் தீவில் பணியாற்றியிருக்கிறார். அப்போதே லங்காவியின் பின்தங்கிய நிலைமையும் அதன் பிரச்சனைகளும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

3347071-big-eagle-in-langkawi-malaysiaஅன்றைய லங்காவியின் பின்தங்கிய நிலைமைகளைப் பார்த்து மகாதீர் தன் மனதுக்குள் எத்தகைய எண்ணங்களை வளர்த்துக் கொண்டாரோ நமக்குத் தெரியாது.

#TamilSchoolmychoice

‘7 தலைமுறைகளுக்கு முன்னேற முடியாமல் லங்காவி தீவு பின்தங்கியிருக்கக் கடவது’ என ஓர் இளவரசியின் சாபத்தால், லங்காவி யாராலும் கண்டு கொள்ளப்படாத – புறக்கணிக்கப்பட்ட பிரதேசமாக இருந்தது என்பது கெடா மக்களின் நம்பிக்கை.

ஆனால், அந்த நம்பிக்கையை உடைத்தெறியப் போகும் மனிதன், தான் என லங்காவியில் ஒரு மருத்துவராகச் சுற்றி வந்த மகாதீர் அப்போது உணர்ந்திருக்க முடியாது.

லங்காவியை உருமாற்றிய மகாதீர்!

Mahathir-Mohamad-ஆம்! கால ஓட்டத்தில் 1981-ஆம் ஆண்டு மலேசியாவின் பிரதமராகப் பதவியேற்ற மகாதீர் கையிலெடுத்த முதல் திட்டங்களில் ஒன்று லங்காவி தீவை மேம்படுத்து – உருமாற்றுவது!

இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் மகாதீர் பிரதமராக வந்து லங்காவியை மேம்படுத்தும் திட்டத்தை அறிவித்த அதே காலகட்டத்தில்தான் கெடாவின் இளவரசி விட்ட “ஏழு தலைமுறை” சாபத்தின் காலமும் இறுதிக்கட்டத்தை அடைந்தது.

அறிவிப்போடு நில்லாமல் லங்காவியை மாற்றியமைக்க அணு அணுவாக, கட்டம் கட்டமாகத் திட்டமிட்டு உழைத்தார் மகாதீர். உலகின் எந்தப் பகுதிக்கு சென்றாலும், நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும், எத்தனையோ அரசுப் பணிகள் அழுத்தினாலும், மாதத்திற்கு இரண்டு தடவையாவது லங்காவிக்குப் பறந்து சென்று, தான் உத்தரவிட்டபடி மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகிறதா என்பதைப் பார்வையிட்டு வந்தவர் மகாதீர். அவரது 22 ஆண்டு கால தலைமைத்துவத்தின் கீழ் மாபெரும் வளர்ச்சி பெற்ற லங்காவித் தீவு இன்று உலகின் முக்கிய சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாக, பல்வேறு ஈர்ப்புகளைக் கொண்ட வித்தியாசமான வட்டாரமாக உருவெடுத்திருக்கிறது.

langkawi-parliament-2013-results-
லங்காவி நாடாளுமன்றம் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

அங்குள்ள மக்களின் வாழ்க்கைச் சூழலும் பொருளாதார வளமும் பன்மடங்கு சிறப்பானதாக மாறியிருக்கிறது.

லங்காவி மக்கள் மகாதீருக்குத் தங்களின் நன்றிக் கடனைத் திரும்பச் செலுத்தும் நேரம் வந்துவிட்டது. தங்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றியமைத்த மகாதீருக்கு நன்றிக் கடனாக ஏதாவது திருப்பிச் செலுத்த எண்ணியிருந்தால் அதற்கான வாய்ப்பும் இப்போது அவர்களுக்கு அமைந்திருக்கிறது.

22 ஆண்டுகள் பிரதமராக இருந்து, லங்காவியின் முகத் தோற்றத்தை மாற்றிக் கட்டமைத்த மகாதீர், பதவியை விட்டுச் சென்று 15 ஆண்டுகள் கழித்து தனது 93-வது வயதில் திரும்பவும் வந்து எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.

மகாதீர் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட எந்த நாடாளுமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுப்பார் என்ற கேள்விக்கு அவரே நேரடியாகத் தெரிவித்திருப்பது லங்காவி நாடாளுமன்றத் தொகுதியைத்தான்! அரசியல் ஆய்வாளர்களும் அதுதான் அவருக்குப் பாதுகாப்பான தொகுதி என ஆரூடம் கூறுகிறார்கள்.

மகாதீர் தனது பழைய தொகுதியான குபாங் பாசு அல்லது புத்ரா ஜெயா தொகுதிகளிலும் போட்டியிடக் கூடும் என்ற ஆரூடங்கள் கூறப்பட்டாலும், லங்காவி தொகுதியைத்தான் மகாதீர் இறுதி நேரத்தில் தேர்ந்தெடுப்பார் என நம்பப்படுகிறது.

Langkawi-P4
2013 – லங்காவி தொகுதியின் வாக்காளர் விவரங்களைக் காட்டும் வரைபடம்

ஆனால் 2013 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட அம்னோ வேட்பாளர் நவாவி பின் அகமட் 21,407 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளரை விட 11,861 வாக்குகள் கூடுதல் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற தொகுதி இது.

அப்போது மகாதீர் அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வந்தார் என்பதும், இன்று அவரே அம்னோவுக்கு எதிரான வேட்பாளராக நிற்கக் கூடும் என்பதும்தான் அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள வித்தியாசம்.

2013 புள்ளி விவரங்களின்படி 37,536 வாக்குகளைக் கொண்ட லங்காவி தொகுதியில் 91 விழுக்காட்டினர் மலாய்க்கார வாக்காளர்கள். சீனர்கள் 6 விழுக்காடும், இந்தியர்கள் 2 விழுக்காடும் இருக்கின்றனர்.

எனவே, அனைத்து அம்சங்களிலும் மகாதீருக்கு சாதகமானத் தொகுதியாகப் பார்க்கப்படும் லங்காவியில் மகாதீர் சுலபமாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

அதே சமயத்தில் தேசிய முன்னணி மீண்டும் வென்றெடுக்கப் பெரும் சவாலாகவும் இருக்கப் போகும் தொகுதி லங்காவி.

– இரா. முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகளின் இணைப்புகள்:

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (3) – கோல சிலாங்கூர்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (4) : லாபிஸ்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (6) – பாகோ!

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (7) – செம்பூர்ணா!

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (8) – கோத்தா மருடு (சபா)

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (9) – பியூபோர்ட் (சபா)

தே.முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (10) – ஜோசப் குருப் தடுமாறப் போகும் பென்சியாங்கான்!